நாங்குநேரி வாசஸ்ரீ

119. பசப்புறு பருவரல்

குறள் 1181

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க் குரைக்கோ பிற

என்னைய நேசிச்சவரு பிரிஞ்சி போவுததுக்கு சம்மதிச்சிட்டேன். இப்பம் தாங்கமாட்டாம எம் மேனி பசலை படந்து கெடக்கத யார் கிட்ட போய் சொல்லுவேன்?

குறள் 1182

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு

நேசிச்சவரு உண்டாக்கி உட்டதுங்குத தலகனத்துல பசலை வண்ணம்  எம் மேனி முழுக்க ஊர்ந்து பரவுது.

குறள் 1183

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து

நேசங்குத நோயையும் பசலை வண்ணத்தையும் தந்துபோட்டு என் அழகையும் வெக்கத்தையும் எடுத்துக்கிட்டு போயிட்டாக.

குறள் 1184

உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு

நான் நெனைக்கதும், சொல்லுததும் அவரோட நல்ல தன்மயத்தான். அங்ஙன இருக்கையில பசலை நோய் வந்தது வஞ்சகமோ. வேறு ஏதாமோ?

குறள் 1185

உவக்காணெம் காதலர் செல்வார் இவக்காணென்
மேனி பசப்பூர் வது

என் காதலர் அங்ஙனகூடி பிரிஞ்சு போவுததுக்குள்ளார இங்ஙன பசலை வண்ணம் எம் மேனியில வந்து அப்பிக்கிடுது.

குறள் 1186

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கண்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு

விளக்கு ஒளி சொல்பமா மங்குத சமயம்பாத்து இருட்டு பரவுதது கணக்கா நேசிக்கவரு தழுவுதத எப்பம்  தளத்துவாருனு காத்துக்கெடக்கு  பசலை படருததுக்காவ.

குறள் 1187

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு

அணைச்சுக்கிட்டுக் கெடந்தேன். பொறவு செத்த வெலகினேன். அங்ஙனக்குள்ளார பசலை வண்ணம் என்னய அள்ளிக்கிட்டுப் போயிடுச்சு.

குறள் 1188

பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத்
துறந்தார் அவரென்பார் இல்

இவ மேனியில பசலை படர்ந்து கெடக்குனு பழிக்குதாகளே ஒழிய நேசிச்சவரு பிரிஞ்சு போனதப் பத்தி பேச்சேயில்ல.

குறள் 1189

பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்

பிரிஞ்சுபோவுததுக்கு என்னயச் சம்மதிக்க வச்சவுக நல்லா இருப்பாகன்னா எம் மேனி பசலை படர்ந்துக்கிட்டுக் கெடக்கட்டும்.

குறள் 1190

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்

பிரிவுக்கு சம்மதிக்க வச்ச என் காதலர நேசங்கெட்டவருனு தூத்த மாட்டாகன்னா நான் பசலை படர்ந்தவனு பேர் எடுக்கதும் நல்லதுதான்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.