இசைக்கவி ரமணனின் கவிதை

இசைக்கவி ரமணன்
இந்தக் கவிதையை இசைக்கவி ரமணனின் குரலில் இங்கே கேட்கலாம்
தொங்கிச் சுழலும் உலகத்தைத்
தொற்றிச் சுழற்றும் நோயொன்று
பங்கம் செய்தது நம்வாழ்வை
பணமும் இதன்முன் வெறும் ஏழ்மை
எங்கே இருந்து வந்ததென
இடத்தைச் சொல்லி என்னபயன்?
எங்கும் அதுவாய் ஆகிறதே
எல்லாம் பாழாய்ப் போகிறதே!
நம்பிக் கைகள் ஒருபக்கம்
நடுக்கங் கள்பல ஒருபக்கம்
தெம்புடன் இருந்து பார்த்தாலும்
தெரியா தேஇதன் நிசப்பக்கம்!
வம்புச் சண்டை கிளப்பாமல்
வதந்தி களினைப் பரப்பாமல்
கும்பிடு போட்டுக் கைகழுவிக்
குடிலில் ஒடுங்கும் காலமிது!
பொறுமை தேவை மிகத்தேவை
பொறுப்பு ணர்ச்சியோ தலைத்தேவை
வெறுப்பும் வெறுமையும் அண்டாத
வீர விவேகம் அதுதேவை
கறுப்புப் பணமும் பதவிகளும்
கால்தூ சானதிந் நோயாலே
இருக்கும் இடத்தை விட்டெவனும்
எங்கும் செல்ல முடியாதே!
விழுந்து புரண்டு தவித்தோமே
விலகி வாழ்ந்திடக் கற்போமே
பழுதுக ளான உறவுகளைப்
பழகிப் புதுமை செய்வோமே
அழுந்தி நூல்கள் படித்திடுவோம்
ஆழ்ந்து பார்ப்போம் நம்முள்ளே
விழுந்து விழுந்து சிரித்திடுவோம்
வீணையை மீட்டிப் பாடிடுவோம்!
கடவுளை நம்பிக் கும்பிடுவோம்!
கைகளை நன்றாய்க் கழுவிடுவோம்!
கடமையை இயன்ற வரைசெய்வோம்
கவலையை நீக்கிக் காத்திருப்போம்
திடமாய் இருப்பது மானிடமே!
தேவர்க்கும் இதுவோர் புகலிடமே!
தொடாமல் விடாமல் தொடுவான்போல்
தொடர்வோம் சீக்கிரம் விடுபடுவோம்!
திரு இரமணன் பாடலில் வருகின்ற
‘கடவுளை நம்பிக் கும்பிடுவோம்!
கைகளை நன்றாய்க் கழுவிடுவோம்!”
வரிகளை நோக்குபவர்க்கு. முன்னது ஆன்மீகம். பின்னது மருத்துவம் என்று விளக்கம சொல்லலாம். தொடரமைப்பு முற்றிலும் முரண். ‘ கும்பிடுதல்’ என்னும் முதல் வினையெச்சத்திற்கு ‘கழுவிடுதல்’ என்பதைத் தொடர்;வினையாகக் கொணடால் பொருளில் பெருஞ்சிக்கல் ஏற்படுவதைக் காண்க. மோனைக்காகப் பாட்டெழுதினால் இப்படிச் சிக்கலைச் சந்திக்க வேண்டி வரும். பாடலில் இல்லாத சொற்களை அவர் படிப்பது நெருடுகிறது. அந்தச் சொற்களை இணைத்தே பதிவிட்டிருக்கலாம். கவிதையல்லவா?