கவிவருத்தம் தந்த கலிவிருத்தம்

0

கொடியேறி குடையாகி அடியேற்றி மகமாயி
கொடிதான கொரானா மகிடனாய் வதமேவ
படியேறி மருந்தாகி பரவாத படியாக
குடியேறி வந்தாளே குவலயம் காக்கும்படி

ஓங்கார ஒளிசோதி ரீங்கார ஒலியாகி
ஆங்கார அரக்கரை அடங்கா பிணியோட
தேங்காது வேம்பிடை தெரியாத படியாக
தூங்காது நீக்கினளே நிமிர்ந்தெழு மானிடமே

திரிசூலக் கூராகும் திகம்பர நேராகும்
அடிகூட செம்மையா குங்கும நிறமேறி
அதான மருந்தாய் அன்னை ஆகிவிட
கலிகால நேராகும் காளியடி பணிவோமே

கோதையைப் பழித்தனர் கீதையைக் கடிந்தனர்
பாதையைப் பிரித்தனர் பகைமையை வளர்த்தனர்
போதையில் அந்தணர் மறையினைைக் கிழித்தனர்
வேதையும் வேண்டுமோ வேள்வியின் சுவாலையே

சதிகார வஞ்சகரின் சல்லாபப் பிதற்றுகளை
அதிகாரத் தனத்தோடு அடக்கவே அவசரமாய்
மதுராகக் காளியவள் சிங்கம் ஏறிவர
இதிகாசச் சண்டியிதோ இனிமேல் வருந்தாதே

அறநெறி தவிர்த்துமே அதர்மமாய் மாற்றினால்
மறநெறி காக்கவே வெகுண்டுநீ காட்டினாய்
பிறநெறி போற்றுவார் பிழைகளைக் கூட்டினார்
சரிநெறி காட்டுமே தண்டனை போதுமே

இருமிகள் சேர்க்கின்ற எச்சிற் சாரல்களால்
கிருமிகள் சேர்க்கின்ற பரவல் தூறல்களால்
ஒருமித்த கொரானாவை உலகில் அழித்தருள்
வருமந்த திருக்கண்ண புரவாசி உமையே

அட்டமா திக்கெலாம் அட்டகாசம் ஆருயிரின்
கெட்டமா வினையாவும் கேளிக்கை ஆக்காமல்
இட்டமாய் வந்திடுமுன் இன்னருளே காப்பாகு
கட்டமாய்க் காண்பதுன் கால்பட்டு துரும்பாக

துளிவருத்தம் கூடாது துயரெமக்கு ஆகாது
பலியனைத்தும் ஏறாது பக்தருமென் சேராது
கலிவிருத்தம் பாடாது கலங்குமெனை பாராது
ஒலிஎடுத்து வாராயோ ஓங்காரி மாயவளே!!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.