நெல்லைத் தமிழில் திருக்குறள்-128

நாங்குநேரி வாசஸ்ரீ
128. குறிப்பறிவுறுத்தல்
குறள் 1271
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு
நீ சொல்லாம மறைச்சாலும் உன்னையக் கடந்து உன்னோட கண்ணுங்க எனக்கு சொல்லுத சேதி ஒண்ணு இருக்கு.
குறள் 1272
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது
கண்ணுகொள்ளாத அழகும் மூங்கில் கணக்கா இருக்க தோளும் இருக்க என் காதலிக்கு பெண்மைத் தன்மை நெறஞ்சு கெடக்கது இன்னும் அழகு கொடுக்குது.
குறள் 1273
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன் றுண்டு
கோத்து வச்ச மணிக்குள்ளார கெடக்க நூல் தெரியுதது கணக்கா இவளொட அழகுக்குள்ளார கெடந்து வெளிய தெரியுத குறிப்பு ஒண்ணு கெடக்கு.
குறள் 1274
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு
பூவரும்புக்குள்ளார அடங்கிக் கெடக்குத வாசம் கணக்கா பொம்பளப்புள்ளையோட புன்முறுவலுக்குள்ளார அவ காதலனோட நெனப்பு அடங்கிக் கெடக்கு.
குறள் 1275
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன் றுடைத்து
நெருக்கமா வளவி போட்டிருக்க என் காதலி கள்ளத்தனமா காட்டுத குறிப்புல என் பெருஞ்சங்கடத்த தீக்குத மருந்து ஒண்ணு இருக்கு.
குறள் 1276
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து
பெரிசா நேசத்தக் காட்டி கூடி இருக்கது பொறவு நேசமத்து பிரிஞ்சு போவுத குறிப்பக் காணிக்கதா இருக்கு.
குறள் 1277
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை
குளுந்த துறையை உடைய தலைவன் ஒடம்பால சேந்து இருந்து மனசால வெலகி இருக்குத எனக்குமுன்னமே என் வளவி அறிஞ்சுக்கிட்டு கழண்டு விழுதுபோல.
குறள் 1278
நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து
நேத்தைக்குத்தான் என் காதலர் பிரிஞ்சு போனாவ. அதுக்குள்ளார ஏழு நாள் கழிஞ்சமாரி பசலை எம்மேனியில பத்திக்கிட்டுக் கெடக்கு.
குறள் 1279
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது
பிரிவுனால கழண்டு விழப்போவுத வளவியையும், மெலிஞ்சுபோவப் போகுத தோளையும் பாத்த பொறவு பொறத்தால நானும் வாரேம்னு குறிப்பு சொல்லுததுகணக்கா தன் பாதத்தையும் பாத்தா அவ.
குறள் 1280
பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு
காதல் நோயக் கண்ணால காணிச்சு பிரிஞ்சுபோவாதனு கெஞ்சுதது பெண்மைக்கு மேலும் பெண்மை சேத்தது கணக்கா ஆவும்.