கட்டுரைகள்

எனது முதல் ரத்த தானம்

சாமிநாதன் ராம்பிரகாஷ்

நான் தனியார் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த காலம் அது. அப்போது எனக்கு ரத்த தானம் என்றால் என்னவென்றே தெரியாது. என்னுடைய வேலை, டெலிபோன் ஆப்பரேட்டர். அதாவது வருகின்ற தொலைபேசி அழைப்புகளை ஏற்பது, பதில் சொல்வது.

நான் சென்னை பல்கலைக்கழகத்தில் பிபிஏ இரண்டாம் ஆண்டு அஞ்சல் வழியில் படித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய உடனடி மேலாளர் டான்பாஸ்கோ, எனக்காகவே ஒரு மாதம் முழுவதும் இரவுப் பணி (நைட் டூட்டி) போட்டுவிட்டார். ஏனென்றால் அப்போதுதான் நான் ஓரளவாவது வரவிருக்கும் தேர்விற்குப் படிக்க முடியும் என்று.

ஆனால் இரண்டு வாரம் கழித்துச் சிற்சில உடல் உபாதைகள் வர ஆரம்பித்தன. நல்ல நீண்ட உறக்கத்தின் அருமை, அப்போதுதான் எனக்கு நன்றாகப் புரிந்தது…!

இப்படி இருக்கையில் ஒருநாள், இரவுப் பணி செய்துகொண்டிருக்கும் போது… ரத்த வங்கியில் பணியாற்றும் சகோதரி, எனக்கு அருகில் நின்றுகொண்டு ஓர் உதவி என்று செய்கையால் கூறினார். நான் தொலைபேசி இணைப்புகளைத் துண்டித்துவிட்டு, என்ன என்று சாவகாசமாகக் கேட்டேன். ஒரு 18 வயதுச் சிறுவன் அடிபட்டுக் கிடக்கிறான். அவனுக்கு உடனே ரத்தம் தேவை என்றார்.

நான் இதற்கு முன் இரத்தம் கொடுத்ததில்லை என்று சற்று பதற.. ஒரு பிரச்சனையும் இல்லை பிரதர். ஒன்னும் ஆகாது. பயப்பட வேண்டாம் என்று கூறி என்னுடைய இரத்தப் பிரிவைக் கேட்டார். நான் ஓ பாசிடிவ் என்று கூறியவுடன், அவர்கள் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். ரொம்ப தேங்க்ஸ் பிரதர் என்று கூறிவிட்டு, என்னுடைய HODக்கும் அவரே போன் செய்து இந்த மாதிரி விஷயத்தை எடுத்துக் கூறினார்.

எனது HODயும் உடனே எனக்கு போன் செய்து… ராம்பிரகாஷ் நீங்க போய் ரத்தம் கொடுத்துட்டு வாங்க. ஒன்னும் பிரச்சினை இல்ல என்று சொல்லிட்டார். எனக்கு இரட்டிப்பு சந்தோஷம். வேலையும் பார்க்க வேண்டாம். நல்லா நிம்மதியாகத் தூங்கி ரெஸ்ட் எடுத்து ஓப்பி அடிச்சு விட்டு… காலை வீட்டுக்கு போயி… இன்னும் நல்லா தூங்கி எழுந்து நல்லா படிச்சுவிடலாம் அப்படின்னு என்னுடைய மனம் குறுக்குப் புத்தியில் பயங்கர வேகமாக வேலை செய்தது.

முதலில் என்னுடைய ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டது. பிறகு ரத்தம் கொடுப்பதற்கு ஏற்றது தானா எனப் பார்க்கும் (இந்த ஹீமோகுளோபின் போன்ற) அடிப்படைப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. பிறகு, என்னைப் படுக்க வைத்து, கையில் ஒரு ஸ்மைலி பந்தைக் கொடுத்துவிட்டார்கள். எனக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ரத்தம் எடுக்கும் போது மிக மிக மெலிதாக ஒரு வலி தெரிந்தது. அவ்வளவுதான…

அதற்கப்புறம் 350 மில்லி உடம்பிலிருந்து போனது எனக்குத் தெரியவே இல்லை. மிகவும் பதற்றத்துடன்தான் இருந்தேன். ஆனால் ரத்தம் கொடுத்துவிட்டு, நான் நினைத்தது எதுவுமே நடக்கவில்லை.

மிக மிகச் சுறுசுறுப்பாக உணர்ந்தேன். சற்று நேரம் தூங்கலாம் என்று நினைத்ததெல்லாம் நடக்கவே இல்லை. மிகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தேன். அப்படி ஒரு எனர்ஜி எனக்குள் வந்தது!

அவர்கள் கொடுத்த ஜூஸ், பிஸ்கட் எல்லாம் சைக்காலஜி ஆறுதல் தான் என்பது நன்றாகப் புரிந்தது. அன்று முதல் வருடத்திற்கு இரண்டு முறை ரத்தம் கொடுத்து வருகிறேன்.

நாம் கொடுக்கும் ரத்தம், கண்டிப்பாக மற்றவர்களுக்குப் பயன்படும். அதை அவர்கள் மூன்றாகப் பிரித்து, தேவையானதைக் கொடுத்துவிடுவார்கள். அதுமட்டுமல்லாமல் நமக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.

அதனால் வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்த தானம் செய்வோம். நாமும் ஆரோக்கியமாக இருந்து, நம்மால் பிறருக்குக் கிடைக்கும் உதவியை நினைத்துப் பெருமிதம் அடைவோம்.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க