சைவத்தைப் பேணிய அம்மை – 2

சு.கோதண்டராமன்

அம்மையாரின் குடும்பம்

காரைக்கால், பல வணிகர்களும் நெருங்கி வாழும் பதி என்கிறார் சேக்கிழார்.  சமண சாக்கிய சமயங்களை வணிகர்கள் தாம் ஆதரித்து வந்தனர் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  எனவே காரைக்கால் வாழ் வணிகர்களும் சமணத்தைச் சார்ந்தவர்களாக இருக்கக் கூடும்.

தனதத்தன், நிதிபதி, பரமதத்தன், புனிதவதி என்ற வடமொழிப் பெயர்கள் இதற்கு மேலும் வலுச் சேர்க்கின்றன. சமஸ்கிருதம் தொல்காப்பியக் காலத்திலிருந்து தமிழ்நாட்டில் வழங்கி வந்த போதிலும் பொதுமக்கள் வழக்கில் அம்மொழிச் சொற்கள் மிகுதியாகப் பயன்பட்டது சமணர் ஆதிக்கம் பெருகிய பின் தான்.  திரு ஞானசம்பந்தரின் பாடல்களை விட அப்பரின் பாடல்களில் வடமொழிச் சொற்கள் மிகுதியாக உள்ளதையும், மருள் நீக்கியார் என்ற தமிழ்ப் பெயர் தாங்கிய அப்பர், சமண சமயத்தில் சேர்ந்த பின் தருமசேனர் என்ற வடமொழிப் பெயர் பெற்றதையும், தருமபாலர், புத்தமித்திரர் போன்ற வடமொழிப் பெயர் தாங்கிய புறச் சமயத்தார் அனைவரும் பச்சைத் தமிழரே என்பதையும் கவனிக்க வேண்டும்.

அம்மையார் பாடல்களில் சங்க காலத்தை விட மிகுதியான வடசொற்கள் (4 சதவீதம்) உள்ளன. சரணாரவிந்தம், அட்டமூர்த்தி, ஞானமயன், சிவகதி போன்ற கூட்டுச் சொற்கள் பயன்படுத்தப் படுவதிலிருந்தும், பிற்காலத்தில் ஆகாயம், தயை என்று தற்பவமாகப் பயன்பட்டது போல் அல்லாமல் ஆகாசம், தயா என்று தற்சமம் ஆளப் பட்டதிலிருந்தும் அவர் வடமொழியை மிகுதியாகப் பயன்படுத்திய சமணக் குடும்பத்தில் பிறந்தவர் என ஊகிக்கலாம்.

இவரது கணவன் முழுமுதற் கடவுள் ஒருவர் உண்டு என்ற நம்பிக்கை இல்லாதவன் என்பது, அம்மையார் மாங்கனி வரவழைத்த போது அவன், ஈசன் அருள் எனக் கேட்டும் அது தெளியாது இருந்ததாலும், தணிவரும் பயம் மேற்கொள்ள உள்ளமும் தடுமாறு எய்தி அவரை வேறு ஓர் அணங்கு எனக் கருதி அச்சமடைந்ததிலிருந்தும் அறிகிறோம்.  தொலைவில் பல சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார் என்று சேக்கிழார் கூறுவதிலிருந்து அவருடைய உறவினர்கள் அனைவருமே இந்தப் புதுமை கண்டு அஞ்சினார்களே அன்றி, இது ஈசன் அருள் என உணராத நாத்திகர்களாகத் தான் இருந்தனர் எனத் தெரிகிறது.

சேற்றில் செந்தாமரை முளைத்தது போல இத்தகைய சமணக் குடும்பத்தில் தோன்றிய அம்மையாரைக் கொண்டு சைவத்தைத் தழைக்கச் செய்ய வேண்டும் என்பது ஈசனின் திருவுள்ளம் போலும்!

அண்மைக் காலத்தில், வேதக் கல்வி வழக்கொழிந்து போன வங்காளத்தில் அந்தணர் அல்லாத குடும்பத்தில் தோன்றிய விவேகானந்தர் மூலமாக வேதத்தின் பெருமை உலகளாவப் பரவியதை ஒப்பிடுக.

1 thought on “சைவத்தைப் பேணிய அம்மை – 2

  1. அவர் வடமொழியை மிகுதியாகப் பயன்படுத்திய சமணக் குடும்பத்தில் பிறந்தவர் என ஊகிக்கலாம்.~ எனக்கு அது போதுமான சான்றாகத் தோன்றவில்லை. ஊகங்கள் பலவிதம். அவற்றால் பயன் யாதுமில்லை.இது ஈசன் அருள் என உணராத நாத்திகர்களாகத் தான் இருந்தனர் எனத் தெரிகிறது.~ இதிலும் எனக்கு உடன்பாடு இல்லை, தர்க்க சாத்திர ரீதியில்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க