சுவடி கூறும் தமிழறி மடந்தை கதை

0

-முனைவர் சு. சத்தியா
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி
தஞ்சாவூர்.

*****

கதை என்பது ஏதாவது ஒன்றினை விரித்துக் கூறுவதாகும். பழங்காலத்திலிருந்து இன்றுவரை நம் மக்களிடையே கதை சொல்லும் வழக்கம் இருந்த வண்ணமாகவே உள்ளது. பாட்டி கதை முதல் கட்டபொம்மன் கதை வரை எண்ணற்ற கதைகளை நம் தமிழர் கூறுவதில் கைதேர்ந்தவர்கள் என்றால் மிகையாகாது! அவ்வகையில் நம் இலக்கியங்கள் கதை வரலாறாக அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். நம் பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்துக்கும் அடிச்சுவடே சுவடிதான் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே!

தமிழ்ச் சுவடியியல் வரலாற்றினை ஆராய்ந்தோமென்றால் இலக்கண இலக்கியத்தின் உயிர் நாடியாய்ச் சுவடிகள் இருந்துள்ளதையும் அவையே நம் தமிழ்மொழியின் பெருமையையும் தமிழரின் பண்பாட்டினையும் நிலைநிறுத்தியுள்ளதையும் அறியமுடியும். சுவடிகள் இலக்கணம், இலக்கியம், மருத்துவம், சோதிடம், வானியல், எண்கணிதம் என்று பல்வேறு பிரிவுகளிலும் நமக்குச் செய்திகள் தந்தபோதிலும் கதை சொல்லவும் தவறவில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.

காப்புடன் தொடங்கும் கதை

    சண்பகமே வீசுந் தமிழறிவாளன் பேரில்
    பண்புடனே செந்தமிழைப் பாடுதற்கு –  என்புவியில்
    வேளைவிழித் தெரித்த வித்தகனார் பெற்றெடுத்த
    காளை மதக்களிறே காப்பு!

என்ற காப்புச் செய்யுளுடன் இக்கதை வரலாறு தொடங்குகிறது.

தமிழறி மடந்தை கதை –  வரலாறு

 முன்னொரு காலத்தில் அளகாபுரி என்னும் நகரத்தினை அளகேஸ்வரன் என்னும் மன்னன் சிறப்புடன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு ஏழாங்குழலாள் எனும் அழகிய மகள் பிறக்கிறாள். கல்வி கேள்விகளில் வல்லவளாக வளர்ந்து வருகிறாள். இன்னொரு புறத்தில் பாடலிபுத்திரத்தின் அதிபதியான பத்திரகிரி என்ற மன்னனுக்கு சந்தனகுமாரன்  என்ற அழகிய மகன் இருக்கிறான். படிப்பிலே ஆர்வமில்லாதவன் தந்தையுடன் சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறான். கண்கண்ட தேசம் எல்லாம் சுற்றி அதன் அழகினைக் கண்டு இரசித்து வந்தவன் வழியில் அளகாபுரியினை வந்தடைகிறான். அவ்வேளையில் தோழியருடன் பந்து விளையாடிக் கொண்டிருந்த ஏழாங்குழலாளினைக் கண்டு மனத்தைப்  பறிக்கொடுக்கிறான். அவளும் இவன் அழகில் மயங்கிப் பார்வையாலே இருவரும் காதல் கொண்டனர். அரசகுமாரியோ வித்தைகள் கற்றவளாதலால் தன் காதில் அணிந்திருந்த ஓலையில்  கை நகத்தினால்  சாவடிக்கு இரவு வருமாறு செய்தியினைக் கீறி அதைச் சந்தனகுமாரன் முன்பு எவரும் அறியா வண்ணம் தூக்கிப் போடுகிறாள்.

 எழுதப் படிக்கவே தெரியாத சந்தனகுமாரன் அதனைக் கையில் எடுத்து ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டே சாவடி முன்பு படுத்துக்கிடந்த குஷ்டரோகியிடம் காட்டுகிறான். வஞ்சகனான குஷ்டரோகன் சூழ்ச்சியால் அரசகுமாரியை அடைய விரும்பி, இந்நகரின் மன்னன் தங்களை எங்கு கண்டாலும் கொன்றுவிடுமாறு ஆணையிட்டுள்ளார். அதனால், இந்நகரினைவிட்டு தாங்கள் வெளியேறிவிடுங்கள்  என்று தவறாகப் படித்துக் காட்டினான். இதனைக் கேட்ட அரசகுமாரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தான் தவறு ஏதும் செய்யவில்லையே!. ஏன்? இவ்வாறு என்று தனக்குள் பேசிக்கொண்டு அவ்வூரினைவிட்டு வெளியேறுகிறான்.

 அன்றிரவு அரசகுமாரி தான் ஓலையில் குறிப்பிட்டப்படி சாவடிக்கு வருகிறாள். அரசகுமாரன் தான் கூறியபடி வந்துள்ளான் என்று எண்ணி அங்கிருந்த குஷ்டரோகியைக் கட்டியணைத்து முத்தமிடுகிறாள். அவன் மீதுள்ள இரத்தமும் சீழும் அரசகுமாரியின் உடல் முழுவதும் பட்டு ஈரமாகிவிடுகிறது. நாற்றம் தாங்காது உண்மையறிந்த அரசகுமாரி தான் ஏமாந்ததை அறிந்து அவமானம் தாங்காமல் தன் உயிரையே மாய்த்துக் கொள்கிறாள். இதனைக் கேள்வியுற்ற சந்தனகுமாரனும் தற்கொலை செய்துகொள்கிறான். இதன்பிறகு இருவரும் பேயாக உருவெடுத்து அலைகின்ற வேளையில் ஒளவையின் ஆசியினால், இருவரும் மீண்டும் மறுபிறவி எடுக்கின்றனர்.

ஏழாங்குழலாள் தமிழறி மடந்தையாகவும் சந்தனகுமாரன் விறகுத் தலையனாகவும் பிறக்கின்றனர். தமிழறிமடந்தை தன் தமிழ்ப்புலமை மீது கொண்ட ஆணவத்தை அடக்க விறகுத் தலையன் நக்கீரரின் உதவியை நாடுகிறான். நக்கீரருக்கும் தமிழறி மடந்தைக்கும் நடக்கும் வாத உரையில் இறுதியில் நக்கீரர் வெற்றி பெறுகிறார். இருவரும் தங்கள் பிறப்பினை எண்ணி மீண்டும் ஒன்று சேர்வதாக இக்கதை நிறைவுறுகிறது.

தமிழறி மடந்தை –  நக்கீரரின் வாத உரை

 வெண்பா   

பாய்ச்சி மறித்திடுவார் பாதமே நான்குடையார்
  வாய்ச்ச கனல்புகுந்து வாழ்ந்திருப்பார் – வீச்சிப்
  படைவரா தார்தங்களுக் குப்பாரின்மேற் காணா
  அடைமாவு மல்ல வது.

என்று தமிழறிவாள் கூறியதற்கு நக்கீரர்,

வெண்பா

  தங்கைபல வைச்சடியிற் கால்களொரு நான்குளதாம்
  பைம்போர்க்கள மேறிப்பாய்ச் சுதலா –  லெம்பெரிய
  மாவல்ல நல்லமாக் காலேமா நிலமன்
  பூவலருங் கோதாய் பொருள்.

என்று கூறியபின்,மேலும் தமிழறிவாள்,

 சந்தவிருத்தம்

அங்காடி கொள்ளப் போயானை கண்டேன்
  அணிநகர மன்றினிலே சேனை கண்டேன்
  கொங்காளு முத்தரசர் தம்மைக் கண்டேன்
  கொடிக்கரும் பெரிமாவுங் கூடக் கண்டேன்
  அங்கொருவ ரெதிர்நின்று வெட்டக் கண்டேன்
  அதுகண்டுயான் றலையைத் தாழ்த்த லுற்றேன்
  இங்கிதனை யின்னதென் றியம்பு வோர்க்கே
  எதிரில்லை யிப்புவிக்கு ளென்றவாறே

என்று கூறியதைக் கேட்ட நக்கீரர்,

 சந்தவிருத்தம்

 எதிராங்க மன்றினிலே யேறக் கண்டேன்
 எழுத்தரிய தேமாவு மனிதர் கண்டேன்
 அதிராங்க மாயிருவ ராடக் கண்டேன்
 அவ்விருவ ரெதிர்நின்று வெட்டக் கண்டேன்
 சதுரங்க மிதுகாணும் வேறொன் றல்ல
 தார்குழலே தீதலையைத் தாழ்த்த லேனோ
 விதிரரங்க முடையதொரு மானே கேளாய்
 வீணருக்கும் வேந்தருக்கும் வேலைதானே

என்று கூறுகிறார். இவ்வாறு இருவருக்கும் வாதம் மேன்மேலும் பாடல் வழியில் வினா விடையாகத் தொடர்கிறது. இறுதியில் விறகுத் தலையனாக வேடமிட்டிருந்த நக்கீரர் வெற்றியடைகிறார்.

கதை நுட்பம்

இக்கதையில் கைளாப்பட்டுள்ள செய்யுள் நடையும் உரைநடையும் படிப்பவருக்கு விருந்தளிப்பதோடு, தமிழ்ச்சங்கப் புலவர் நக்கீரர், கரிகாற் சோழப்பெருவளத்தான், ஒளவையார், பாண்டிய மன்னர் என்று பல்வேறு கதாபாத்திரங்கள் வலம்வருவது இக்கதைக்கு மணிமகுடமாகிறது. பழந்தமிழ்ச் சொற்கள் விரவிவருவது இக்கதைக்கு மேலும் வலுச்சேர்க்கிறது.

இக்கதையினைப் படிப்பவர் தமிழின் சிறப்பினையும் தமிழரின் கதை நுட்பத்தையும் அறிவர். பழைய சொல்வளத்தையும் ஆராய முயல்வர்.

*****

பார்வை நூல்:

தமிழறி மடந்தை கதை, பதிப்பாசிரியர் மணி. மாறன், தமிழ்ப் பண்டிதர், சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர், 2013.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *