குறளின் கதிர்களாய்…(295)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்...(295)
மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.
– திருக்குறள் -278 (கூடாவொழுக்கம்)
புதுக் கவிதையில்…
உள்ளத்தின் உள்ளே
அழுக்குடன்
மாண்புடைய துறந்தார்போல்
பலமுறை நீராடி
தூயவர் போல்
மறைந்தொழுகும் மாந்தர்
பலர் உள்ளனர்
பாரினிலே…!
குறும்பாவில்…
மனதினில் தூய்மையின்றி
மாண்புடைத் தூயோர்போல் நடித்து நீராடி
மறைந்தொழுகுவோர் பலருளர் மேதினியில்…!
மரபுக் கவிதையில்…
உள்ள மதிலே அழுக்குடனே
உடலைத் தூய்மை செய்திடவே
கள்ள மனதை மறைத்தேதான்
கண்ட போதெலாம் நீராடி
வெள்ளை உள்ள மாந்தர்போல்
வேட மிட்டே நல்லோராய்க்
கள்ளத் தனமாய் மறைந்தொழுகும்
கயவர் பலருளர் பாரினிலே…!
லிமரைக்கூ..
உள்ளத்தி னுள்ளே அழுக்கு,
மறைத்ததை மாண்புடையராய் நடித்தொழுகும் பலர்
போட்டிடுவர் நீரினிலே முழுக்கு…!
கிராமிய பாணியில்…
வேணும் வேணும் நல்லொழுக்கம்
மனுசனுக்கு
வேண்டவே வேண்டாம் தீயொழுக்கம்..
மனசுலயெல்லாம்
கெட்ட எண்ணத்தோட,
ஒடம்ப மட்டும் சுத்தமாக்க
ஒழுங்காக் குளிச்சி
நல்ல மனசுக்காரனா
நடிச்சி மறச்சி வாழுற
பொல்லா மனுசங்க
பலர் இருக்காங்க ஒலகத்தில..
அதால
வேணும் வேணும் நல்லொழுக்கம்
மனுசனுக்கு
வேண்டவே வேண்டாம் தீயொழுக்கம்…!