அரசமரமும் அடிவயிறும்! -2
இன்னம்பூரான்
பிரதிநிதித்துவ மக்களாட்சியில்,நாடாளுமன்றமும் பெரும்பான்மைக் கட்சியின்/ கூட்டமைப்பின் பிரபலங்கள் மூலம் அமைச்சரவை அமைத்து, அரசு அதிகாரிகள்/ஊழியர்களின் பணி மூலமாக நிர்வாகம் நடத்துகிறது. நீதி மன்றம் சுதந்திரமாக இயங்குகிறது.தணிக்கை,விழிப்பு, தேர்வாலயம் போன்ற சுதந்திரமாக இயங்கும் துறைகளின் பணி பெரிது. மூன்று தொடர்களில் அவற்றை எல்லாம் பற்றி விழிப்புணர்ச்சியும், ஆக்கப் பூர்வமான விமர்சனங்களும், விவாதங்களும் இயன்ற வரை முன் வைக்கப் படுகின்றன.
அரசு உருப்படியாக நடக்க வேண்டுமே என்ற ஆதங்கம் ஊடகங்களிலும், தேனீர்க் கடைப் பேச்சுக்களிலும், பரவலாகக் காணப்பட்டாலும், மக்களிடையே வருத்தம் தொனித்தாலும், விழிப்புணர்ச்சி தென்படவில்லை. கருத்துக்களில் குழப்பமும், ‘ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?’ என்ற விட்டேற்றியான அணுகு முறையும் அதிகரித்து விட்டன. ஜனநாயகத்தை வெட்டிப் புதைக்க வேறு வினை வேண்டாம். அதற்குப் பயந்துதான், நானும் விடாமல் எழுதி வருகிறேன். இந்தத் தொடர் ஆளுமை செய்யும் மத்திய அரசு/ மாநில அரசுகளைப் பற்றி. இது நிற்க.
‘கிராமப்புற சுகாதார மேம்பட்டுத் திட்டம்’ மிக அருமையான திட்டம். இது தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படுகிறது. இந்திய அளவில் முதல் நிலையில் உள்ளதாகச் சான்று பெற்றுள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் அடிப்படைக் கட்டமைப்பு ஏற்கனவே உள்ளது. இது மற்ற மாநிலங்களில் இல்லை… இந்தத் திட்டத்தில் மூன்று ஆண்டுகள் அலுவலராகப் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. இந்த திட்டம் கீழ் அடிமட்ட மருத்துவமனைகள் பெரும் பயன் அடைந்துள்ளன. மக்களும்தான்.’
என்று ஒரு நண்பர் வேறு ஒரு இடத்தில் எழுதியது மகிழ்ச்சி அளித்தது; அவர் சான்றுகள் தருவதாக எழுதியிருக்கிறார். அது வரும் வரை வேறு விஷயங்கள் பேசுவோம். மார்க் ஷாண்டி என்ற பிரிட்டீஷ் எழுத்தாளர் ஒடிசா மாநிலத்தில் யானை மீது சுற்றுலா சென்று, அற்புதமான பயண நூல் ஒன்று எழுதினார். ஒரு நிகழ்வு. பழங்குடியினர் 11 பேரை கொன்று குவித்த காட்டு யானையைப் பிடிக்க இவரின் யானையை இரவல் கேட்கின்றனர். ‘நீங்கள் அரசிடம் பிராது கொடுங்களேன்’ என்கிறார். பதில்: ‘அரசாவது, மண்ணாங்கட்டியாவது! இந்தக் காட்டு யானை இன்னும் 24 பேரை கொன்ற பின்தான், அவர்கள் யோசிப்பார்கள்.’ ஒரு குக்கிராமத்து மக்கள் 1992-ல் அரசின் அசிரத்தையை இப்படிக் கணக்குச் செய்து வைத்திருக்கிறார்கள்.
‘பழங்குடி மக்களும் வனத்தில் ஒரு பகுதியே என்பதை அரசு மறந்து விடக் கூடாது.’ என்று சமீபத்தில் ஒரு சத்தியமங்கலத்து குக்கிராம மக்களின் அவஸ்தையைப் படித்தது நினைவில் வந்தது. இத்தனைக்கும் வெரியர் எல்வின் என்ற மனிதவியல் வல்லுனர், ஐம்பது வருடங்களுக்கு முன்னால், நேருவுக்கு அளித்த ஆலோசனைப் படி, இது நம் நாட்டு வனத்துறைக் கொள்கையில் ஆவணப் படுத்தப்பட்ட கோட்பாடு! Where do we go wrong? You tell me. நீங்கள் சொல்லுங்களேன்.
சரி. நாம் யாவரும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய அறிவிப்பு, தீபாவளி முத்தாய்ப்பாக வந்தது. அதாவது, மேல் நாடுகளில் இருப்பது போல் வட்டி விகிதத்தை அந்தந்த வங்கியே தீர்மானிக்கலாம். வட்டி விகிதம் கணிசமாக ஏற வாய்ப்பு உண்டு. கடன் வாங்குபவர்களும், சேமிப்பவர்களும் சுதாரித்துக் கொள்ள வேண்டும். அதை வரவேற்றவர், பிரதமரின் பொருளியல் ஆலோசகக் குழுவின் தலைவர். ‘இந்தப் பிரகடனம் இருபது வருடங்களுக்கு முன் வந்திருக்க வேண்டும்’ என்கிறார், ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த அவர். அப்படியானால், இந்த தாமதத்துக்குக் காரணம் யாது? அதனால் ஆதாயம் பார்த்தவர்கள் யார், யார்? நஷ்டப்பட்டவர்கள் யார்? யார்? இதை ஆடிட் செய்தால் என்ன? இப்படிக் கேள்விக் கணை தொடர்கிறது.
எதற்கும் ஆறுதலான தகவல் ஒன்று ஜூனியர் விகடனில், இன்று (26 10 2011) வந்தது. அதிலிருந்து சில பகுதிகள் உங்களிடம் நேரடியாக பேசுகின்றன.
‘உத்தப்புரம்-தமிழக வரலாற்றில் சாதிய ஏற்றத் தாழ்வுகளுக்கும் தீண்டாமைக் கொடுமைகளுக்குமான உதாரணப் பெயராகவே இதுவரை இருந்து வந்தது. ஆனால், இப்போது கலெக்டர் சகாயம், எஸ்.பி. ஆஸ்ரா கர்க் ஆகிய இருவரின் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில் தலித் மக்களுக்கும் சாதி இந்துக்களுக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் உருவாகி உள்ளது. இந்த ஒப்பந்தப்படி தலித் மக்களின் பெருவாரியான பிரச்னை கள் தீர்க்கப்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள். முத்தாலம்மன் கோயிலில் நுழைய தலித்துகளுக்கு மறுக்கப்பட்ட அனுமதி, இப்போது விலக்கப் பட்டு விட்டது…
தீண்டாமைச் சுவரை இடித்து, பொதுப்பாதை ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும், அதைத் தலித் மக்கள் முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலைமை இருந்தது. இப்போது முழுச் சுதந்திரத்துடன் தலித் மக்கள் அந்தப் பாதையில் செல்வதற்குச் சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள், சாதி இந்துக்கள். கிட்டத்தட்ட உத்தப்புரத்தில் வழக்கு இல்லாத தலித் வீடுகளே இல்லை என்று சொல்லலாம். அத்தனை வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம், எஸ்.பி ஆஸ்ரா கர்க் ஆகிய இருவருக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும்…’
இந்தச் செய்தி எழுப்பும் கேள்விகள்: இங்கு தீண்டாமையை விலக்கச் சட்ட நடவடிக்கையையோ, சமுதாய அணுகுமுறையையோ, அரசியல்வாதிகள் தடுத்தனரா? அதிகாரி வர்க்கம் இன்று வரை தூங்கியதா? (முன்னால் நடந்த முயற்சிகளை பற்றி சற்றே அறிவேன். ஆனால் ஒரு உள்ளூர் நேயர் மூலம், ‘வல்லமை’ ஒரு நேர் காணல் நடத்த வேண்டும் என வேண்டுகோள். திட்டம் வகுக்க உதவத் தயார்.)
இறுதிக் கேள்வி: ‘மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம், எஸ்.பி ஆஸ்ரா கர்க் ஆகிய இருவரும் அப்படி என்ன தான் செய்து விட்டார்கள். ஆழமான பின்னணி என்ன?’
என்னுடைய ஊகம்: அவர்கள் இருவரும் உண்மை அரசு ஊழியர்கள். தர்மம் நாடுபவர்கள். அஞ்சாதவர்கள். அதனுடைய பின்னணி அவர்களது வாழ்வியலில்/ பயிற்சியில்/ இலக்குகளில் இருக்கலாம். இவ்வாறு நான் கூறுவதற்கே ஒரு பின்னணி உண்டு. 1988ல் நான் அலஹாபாதில் பணி புரிந்த போது, அஹமதாபாதில் ஒரு செமினார் நடத்தினேன். ஒரே மாவட்டத்து ஆட்சித் தலைவரும், எஸ்.பி.யும் அதில் மாணவர்கள். இந்தியா முழுவதிலுமிருந்து, கறாராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டத் தம்பதிகள். தமிழ்நாட்டிலிருந்தும் வந்திருந்தார்கள். அலஹாபாத் ஆட்சித் தலைவருக்கும், எஸ்.பி.க்கும் அச்சாரப் பயிற்சி வேறு. அவர்களை முன்னிறுத்திப், பாடங்கள். இரண்டு செமினார் தலைப்புகள் நினைவில் உள்ளன.
1. மற்றவரின் வருங்காலப் போக்கைக் கணிப்பது எப்படி?
2. சொல்லப் போகும் பொய்யைப் பொருந்தச் சொல்வது எப்படி?
நான் நடத்திய செமினார்களில் சுவையாகவும், பயனுள்ளதாகவும் கருதப்பட்டதில், இது ஒன்று. கட்டுரை நீண்டு விட்டது. யாராவது கேட்டால், அது பற்றிப் பார்க்கலாம்.
(தொடரும்)