வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்
பவள சங்கரி
நொந்த மனங்களுக்கும் தீப ஒளிச் சுடர் அளித்த தீபாவளி!
பண்டிகைகள் , கொண்டாட்டங்கள் அனைத்துமே நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ளவும், அதன் மூலம் வருங்காலங்களில் நம் பணிகளில் முழுமையான கவனம் செலுத்த ஒரு உந்து சக்தி பெறும் வகையிலும்தான் அல்லவா. அந்த வகையில் இந்த வருட தீபாவளி நம்மால் இனிதே கொண்டாட முடிந்தது. நம் சக மனிதர்களின் துயரங்களுக்கு ஒரு விடிவு ஒளி தென்படுவதனால் அந்தக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. ஆம் நம் அண்டை நாட்டுச் சகோதரர்களின் பல்லாண்டுக்கால தீராத வேதனையின் விடி வெள்ளியாக, சமீபத்தில் நெதர்லாந்து நீதிமன்றத்தில் எல்டிடிஇ அமைப்பை தீவிரவாத அமைப்பாகக் கருத முடியாது என்று அளித்த தீர்ப்பு தீப ஓளி வீசுவதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது, உள்நாட்டுப் போரில் மட்டுமே ஈடுபட்டு, தங்கள் வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில், ஒரு சுதந்திரப் போராட்டமாக மட்டுமே இருக்கிறது. சொல்லப்போனால், கடாபிக்கு எதிராகப் போராடிய புரட்சிப் படையினர் போன்றுதானே இதுவும். இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.
விடுதலைப் புலிகளின் அமைப்பு ஐரோப்பிய கூட்டணியின் தடை செய்யப்பட்ட பட்டியலில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. நெதர்லாந்தில் விடுதலைப்புலிகளின் இயக்கத்திற்காக நிதி திரட்டியதற்காக தமிழர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக நிதி திரட்டியதாகவும், மிரட்டிப் பணம் பறித்ததாகவும், வன்முறையில் ஈடுபடுவதற்காகத் திட்டமிட்டு செயல்பட்டிருந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தி.ஹேக் மாவட்ட நீதி மன்றம், விடுதலைப் புலிகள் இயக்கம் சர்வதேச அளவில் தீவிரவாத செயல்களில் ஈடுபடவில்லை. அது உள்நாட்டுப் போரில் மட்டுமே ஈடுபட்டு வந்ததால், ஐரோப்பிய கொள்கைகளின்படி அதை சர்வதேச தீவிரவாத அமைப்பாகக் கருத முடியாது, என்று தீர்ப்பளித்துள்ளது. இதனால் இந்த ஐவரின் மீதான தீவிரவாதம் தொடர்பான மற்றும் மிரட்டல் குறித்த குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டுள்ளன.
இவர்கள் ஐவருக்கும், 2 முதல் 6 ஆண்டுகள் கால வரையிலான சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பிருந்தாலும், விடுதலைப் புலிகள் இயக்கம், தீவிரவாத இயக்கம் அல்ல என்று வந்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கக் கூடியதாகும் என்று நீதிமன்றத்தில் கூடியிருந்த பெருமளவிலான ஈழத்தமிழர்கள் கூறியுள்ளனர். எது எப்படியோ நம் சக மனித இனம் இந்தத் துன்பத்திலிருந்து முழுவதுமாக விடுபட்டு அடுத்து வரும் பண்டிகையையாவது மகிழ்ச்சியுடன் நம்முடன் இணைந்து கொண்டாட வேண்டும் என்று மனதார பிரார்த்திப்போம்!