சிவனுக்கு அன்னமிட்ட காசி அன்னபூரணி

0

விசாலம்

எல்லாக் கோயில்களிலும்  கடவுளுக்குப் பிரசாதம் படைத்த பின்னர்தான் அங்கிருக்கும் பக்தர்களுக்குப் பிரசாதம் கொடுப்பது வழக்கம். ஆனால் காசியில் நம் அம்மா…..  அதான்  நம்  அன்னபூர்ணேஸ்வரி தேவி தான் சாப்பிடாமல் பக்தர்கள் எல்லோருக்கும்  விருந்து வழங்கி விட்டுப் பின்  தான் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறாள்.

அங்கு வழங்கப்படும் சாப்பாடு ‘சிம்பிள்’ தான் எனினும் அதன் ருசியே தனிதான். அந்தப் பிரசாதத்தில் நம்மால் விவரிக்க முடியாத ஒன்று இருப்பதை உணரலாம். அங்கு சாப்பிட இலவசமாக கூப்பன் வாங்க வேண்டும். ஆனால் ஒன்றுமில்லாமல் இலவசமாக உண்ண மனம் ஒப்பாது, ஆகையால் பல பக்தர்கள் கோயிலில் முடிந்த அளவு சேவை செய்த பின்னர் சாப்பிடப் போகின்றனர். சிலர் அங்கு உணவைப் பரிமாறுகின்றனர்.

இந்தக் காசி அன்னபூர்ணி கோயிலில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் தீபாவளியின் போது இந்த ஈச்வரி  லட்டால் ஆன ரதத்தில் பவனி வருவாள். ரதம் முழுவதும் இனிப்பு லட்டால் அலங்கரிக்கப் பட்டு அதில் முழுவதும் தங்க உடைகளால்  அலங்கரிக்கப் பட்ட அன்னபூர்ணி  அமர்ந்து அருள் புரிவதைப் பார்க்கக் கோடி கண்கள் வேண்டும், அப்படியே ஜொலிப்பாள். இந்த வித்தியாசமான தேர் இந்த அம்மனுக்குத்தான்  உண்டு. இந்த லட்டுத் தேருக்கு ஒரு ஈயோ எறும்போ வராதாம் என்றும் ஒருவர் சொன்னார்.

காசி விசுவநாதர் இருக்கும் கோயில் அருகிலேயே இந்த அன்னபூர்ணி கோயிலும் இருக்கிறது. அன்னபூர்ணி பரமேஸ்வரனுக்கு  பிக்ஷை வழங்கினாளாம். இந்த அம்மன் மேல் ஆதி சங்கரர் ‘அன்னபூர்ணாஷ்டகம்‘ என்று மிக அருமையாக சமஸ்கிருத ஸ்லோகம் இயற்றியிருக்கிறார்.

வீரசிவாஜி காலத்தில் சிவாஜியுடன் இருந்த பேஷ்வாக்கள் இந்தக் கோயிலுக்கு நிறைய கைங்கர்யம் செய்திருக்கின்றனர். இந்தக் கோயிலை ‘திரு பாலாஜி பாஜிராவ்’ என்பவர் கட்டினார். உள்ளே அமர்ந்திருக்கும் அன்னபூர்ணியின் சிலை மிகச் சிறியதுதான். அந்தச் சிலை வெள்ளிக் கவசத்துடன்  பூக்களால் அலங்கரிக்கப் பட்டிருக்கும்.

நமக்கு அம்மனின் முகம் மட்டும்தான் தெரியும். அவ்வளவு பூக்கள் உடலை மூடியபடி இருக்கும். ஆனால் நாம் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யச் சீட்டு வாங்கினால் நாமே அபிஷேகம் செய்யலாம். அம்மன் அருகே சென்று தொட்டு வணங்கலாம். ஆனால் இது  போல் தமிழ் நாட்டில் அனுமதிப்பதில்லை. அபிஷேகம் சில குறிப்பட்ட நாட்களில் தான் நடக்கும். முதலிலேயே இதைப் பற்றி விசாரித்துக் கொள்ள வேண்டும். நாமும் அன்னதானம் செய்யலாம் ஒருநாள் செலவு சுமார் ரூ 1500 ஆகும்.

இந்த அன்னபூர்ணி ஏன் தோன்றினாள்? ஒரு சமயம் சிவன் பார்வதியிடம் ‘உலகமே மாயை’ என்றார், பார்வதியோ  உலகத்தில் இருக்கும் செடி  கொடிகள்   உணவை வழங்குகின்றன அன்னலட்சுமியாகவும்  தான்யலட்சுமியாகவும் அம்பாள் அதில் ஒன்றியிருக்கிறாள் என்றும் இது போல் பலப் பொருட்களில் அம்பாள் இருக்கிறாள் என்றும் வாதாடினாள். பின்னர் கோபம் கொண்டு உலகத்தில் இருக்கும் பொருட்களையெல்லாம் மறைத்து விட்டாளாம்.

உலகம் அப்படியே வறண்ட பூமியானது. எல்லா ஜனங்களும் பசியால் துடித்தனர். இதைப் பார்த்து மனம் நெகிழ்ந்து கருணையுடன் காசியில் கையில் கரண்டியுடன் தோன்றி அங்கு ஒரு சமையலறை தோற்றுவித்தாளாம். சிவபெருமானும் காசிக்கு வந்தார்.

“தேவி பார்வதி  நான் இப்போது அன்னத்தின் முக்கியத்தை உணர்ந்து விட்டேன்.  எனக்கு அன்னம் வழங்கு” என்று ஒரு சட்டியை நீட்டினாராம். பார்வதி முகத்தில் புன்னகை நெளிய பரமேஸ்வரனுக்கு அன்னம் வழங்கினாள். அன்றைய தினத்திலிருந்த அவள் அன்னபூர்ணி ஆகி விட்டாள். இதனால் தான் அன்னபூர்ணி  ஒரு கையில் கரண்டியுடனும்  மறு கையில் பாயசம் நிரம்பிய பாத்திரத்துடனும் காட்சியளிக்கிறாள்.

இங்கு வரும் பெங்காலிகள் இவளை ஆதி காளியாகப் பூஜை செய்கிறார்கள் ‘ராணி ரஷ்மோனி’ என்பவர் இந்தத் தேவியைக் காண நினைத்த போது அவளது கனவில் அன்னபூர்ணி தோன்றி கொல்கொத்தாவில் இது  போல் கோயில் கட்டச் சொன்னதாகவும்  அதுதான் பிரசித்திப் பெற்ற  ‘தக்ஷிணேஸ்வர் கோயில் ‘என்று ஒரு பெங்காலி தோழி சொன்னாள்.

இதே போல் அன்னபூரணியின் கோயிலை நாம் கர்நாடகாவில் சிருங்கேரிக்கு அருகில் இருக்கும் ஹொரநாடு என்ற இடத்தில்  காணலாம்.

தங்க அன்னபூர்ணியைக் காணும் பாக்கியம் எனக்கும் கிட்டியது. அந்தக் காட்சி என் மனதில் இன்னும் அப்படியே பசுமையாக இருக்கிறது.

எல்லோருக்கும் அம்மனின் அருள் கிடைக்கட்டும்.

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *