வார்த்தைகள் பொறுப்பல்ல

பிரகாஷ் சுகுமாரன்

பயணத்தின் ஒரு பகுதியாக அந்த ஊரில் தங்கி வழக்கம் போல் வீடு வீடாகச் சென்று பிச்சை பெற்றுக் கொண்டிருந்த அவருக்கு சிலர் உணவளித்தும் சிலர் இல்லை எனச் சொல்லித் திருப்பியும் அனுப்பினர். ஒரு வீட்டில் இருந்த பெண்மணி மட்டும் அவரை நோக்கி ”மாடு போல் வளர்ந்து இருக்கிறாய்,  ஆனால் உழைத்துச் சாப்பிடாமல் பிச்சையெடுக்கிறாயே, கை, கால்கள் நன்றாகத்தானே உள்ளது,  அறிவு கெட்ட சோம்பேறி நாயே, மறுபடி வராதே ” எனக் கடுமையான வார்த்தைகளால் திட்டி அனுப்பினாள்.

அந்த ஊரில் அவர் தங்கியிருந்த நாட்களில் இது தினசரி நிகழ்ச்சியானது.  இருப்பினும் வழக்கம் போல் அவர் அந்த பெண்மணியின் வீடு உட்பட அனைத்து வீடுகளுக்கும் சென்று பிச்சை கேட்டு வந்தார்.  இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எப்படிப்பட்டவனாக இருந்தாலும், இந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகு அந்தப் பெண்மணியிடம் பிச்சை கேட்க மாட்டான். ஆனால் ஏதோ வெறுப்பில் சன்னியாசியாக மாறிப் பிச்சை எடுக்கும் அவர் அந்த பெண்மணி இவ்வளவு திட்டியும் வழக்கம் போல் சிரித்த முகத்துடன் சென்று பிச்சை கேட்கிறாரே எனக் குழப்பம் அடைந்தனர்.

அவர் மீது அன்பு கொண்ட ஒருவர் இது பற்றி கேட்டார். “ஐயா, தாங்கள் வயிற்றுப் பசிக்காகவோ அல்லது வேறு வழியின்றியோ பிச்சை எடுப்பதாகத் தெரியவில்லை. தங்களுக்குள் செய்து கொண்ட சங்கல்பத்தாலும், மனத்திருப்திக்காகவும் அல்லது வேறு ஏதோ காரணத்துக்காகவோ பிச்சை எடுக்கின்றீர்கள். உங்களின் சொற்பொழிவைக் கேட்டும், தங்கள் இனிய செயல்களால் கவரப்பட்டும் உள்ள பலர் இந்த ஊரில் வாழ்கின்றனர். நீங்கள்  நேரில் செல்லாவிட்டாலும், இங்கேயே வந்து உணவு மட்டுமல்லாமல் உங்கள் தேவைக்கும் அதிகமான செல்வத்தை அளிக்கவும் அவர்கள் தயாராக இருந்தும் நீங்கள் அதைப் பெற மறுக்கிறீர்கள். நீங்கள் இங்கு வந்து தங்கத் துவங்கிய பிறகு பல ஊர்களை சேர்ந்த பெரும் செல்வந்தர்கள் உட்பட பலர் இங்கு வந்து உங்களிடம் ஆசி பெற்றுச் செல்கின்றனர். ஆனால் நீங்களோ உங்களை கண்டபடி ஏசி, அவமானப்படுத்தும் அந்த பெண்மணியிடம் சென்று பிச்சை கேட்கிறீர்கள். உங்கள் மீது அன்பு கொண்டுள்ள என்னைப் போன்றவர்கள் அந்தப் பெண்மணியின் வார்த்தைகளை கேட்டுக் கொதிப்படைந்துள்ளோம். அவளைத் தண்டிக்கவும் தயாராக உள்ளோம். ஆனால் தங்களின் கருத்துத் தெரியாததால் அமைதியாக உள்ளோம் ” என்றார்.

புன்னகை புரிந்தபடி ”நண்பரே, உங்களுக்கு ஏதோ ஒரு காரணத்தால் என் மீது பற்றுதலும், அன்பும், நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. அதனால் எனக்கு உதவி செய்யத் தயாராக உள்ளீர்கள். அந்த பெண்மணிக்கு ஏதோ ஒரு காரணத்தால் என் மீது கோபம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவள் என்னை திட்டுகிறாள். இரண்டுக்கும் காரணம் என்ன என்பது யாருக்கும் தெரியாது. அமைதியையும், அன்பையும் தேடும் உங்களுக்கு என் பேச்சு இனிக்கிறது. உங்கள் மனத்தில் முழுமையான அமைதி இல்லை. எனவே அதனை என்னிடம் தேடுகிறீர்கள். அந்த பெண்மணிக்கும் அமைதி இல்லை, அதை தேடும் எண்ணமும் அவளுக்கு இல்லை. எனவே நான் உட்பட யாரும் அவளுக்கு தேவையில்லை என எண்ணி, தேவையில்லாமல் நான் தொந்தரவு செய்வதற்காக என்னைத் திட்டுகிறாள்.

அது என்னைப் பற்றியும் பிச்சை எடுப்பவர்களைக் குறித்தும் உள்ள அவளுடைய சொந்தக் கருத்து. அதை மறுக்கவோ, எதிர்க்கவோ எனக்கு உரிமை இல்லை. அதே போல் அவளுடைய சொந்தக் கருத்தை என்னை ஏற்றுக் கொள்ளச் செய்ய அவளுக்கும் உரிமை இல்லை. எனவே அந்த வார்த்தைகளுக்குப் பொறுப்பேற்று நான் கோபப்படுவதோ,வெட்கப்படுவதோ தேவையற்ற வீண் செயல். நான் ஏற்றுக் கொள்ளாத அந்த வார்த்தைகள் இறந்த வார்த்தைகள். அவற்றால் ஒரு தீமையும் ஏற்படாது. ஒரு வேளை என்னைப் பற்றியும், பிச்சை எடுப்பவர்களைப் பற்றியும் அவளது எண்ணம் ஒரு நாள் மாறலாம். அப்போது உண்மையாகவே உடலாலோ, உள்ளத்தாலோ ஊனமுற்று, தானே உழைத்துச் சம்பாதிக்க முடியாத நபர்கள் பலனடையலாம். அவளுடைய வார்த்தைகளுக்குப் பொறுப்பேற்று, அவசரப்பட்டு இன்று நான் பேசும் பதில் வார்த்தைகள் அதனைத் தடுத்து விடக் கூடாது ” என்றார் புத்தர்.

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வார்த்தைகள் பொறுப்பல்ல

  1. இம்மாதிரியான நல்வழிக்கதைகள் என்றுமே நல்வரவு. தான் படித்ததை தன்னுடைய உரை நடையில் அழகாக தந்திருக்கிறார், திரு.பிரகாஷ் சுகுமாரன். வாழ்த்து. ‘கொக்கென்று நினைத்தாயோ, கொங்கணவா?’ கதை தெரியுமோ? சொல்லவா?

Leave a Reply

Your email address will not be published.