பேரா.பெஞ்சமின் லெபோ

பகுதி-9 இ. ‘கள் ‘ போடலாமா? – வாழ்த்துகளா? வாழ்த்துக்களா  ?

ஓங்கி ஒளிர வேண்டிய தீப ஒளித் திருநாள் மழையும் காற்றுமாய் வந்து போனது. வாங்கிய வெடிகளை வெடிக்க இயலாமையால் சிறுவர் மனம் வெந்து போனது. ஆனாலும் நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் நல் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டதில் உள்ளம் மகிழ்ந்து  சிந்து பாடியது. சிலர் வாழ்த்தில் ‘வாத்தும்‘ வந்து சேர்ந்தது வேறு கதை.

சென்ற பகுதியில், ‘நெடுங் காலமாகவே தொடர்ந்து வரும் சிக்கல் இரண்டு  உண்டு: ‘கள்’-உம் போட்டு அதற்கு முன் ஒற்றும் போடலாமா என்னும் கேள்விதான் அது! பாட்டுகள்? பாட்டுக்கள்?  வாழ்த்துகள்? வாழ்த்துக்கள்? தோப்புகள்? தோப்புக்கள்?’ கூடவே கொசுறாக நாள்கள்? நாட்கள்? ஆள்கள்? ஆட்கள்? கட்டுரையை  முடித்துப் போடவில்லை என்றாலும் தொடர்வதற்கு முடிச்சுப் போட்டாச்சு….’ என எழுதி  இருந்தேன்.

இதோ அதன் தொடர்ச்சி!

வழக்கம் போல் நம் இணையதள பூதத்தைத் தட்டி எழுப்பிக் கேட்டேன்:

அது சொன்னது, ‘எழுத்துகள் என எழுதுவோர் 110 000 பேர் ; ஆனால், ‘க்’ (நல்லா  கவனிங்கோ, kick இல்லை) போட்டுக் ‘கள்’ சேர்ப்போர் ஐந்து மடங்கு அதிகம் – அதாவது 534 000 பேர்! ஆக, தெரிந்தோ தெரியாமலோ, அதுவே  சரி என்று நினைத்தோ,  ‘க்’-ஓடு ‘கள்’ சேர்த்துப் புழங்குவோரே அதிகம் பேர். இந்த ‘ஒற்று’ போட்டுக் ‘கள்’ சேர்க்கும் இவர்கள் மயக்கத்தைத் தீர்ப்போமே.

காட்டாக, ‘வாழ்த்துக்கள்‘ என்னும் சொல்லை எடுத்துக் கொள்வோம்.

இப்படி எழுதும்  சிலர் அதற்குத் துணையாக இலக்கணத்தை இழுத்து வருவது(ம்) உண்டு: ‘எந்த ஒரு குற்றியலுகரத்துக்குப் பின்னும் ஒற்று மிக வேண்டும்’ (இலக்கணப் படிக் கூற வேண்டும் என்றால் நெடில் தொடர், ஆய்தத் தொடர், வன்தொடர், மென்தொடர்க் குற்றியலுகரத்துக்குப் பின் ஒற்று மிக வேண்டும். நன்னூல் எழுத்ததிகாரம் குற்றுகர ஈற்றுச் சிறப்பு விதிகளைக் காண்க: குற்றியலுகரம் போலவே முற்றியலுகரம் ஒன்று உண்டு. இவை பற்றிப் பிறகு,  வாய்ப்புக்  கிடைத்தால் பேசலாம்.

இவை பற்றிச் சுவையான கதை வேண்டுமா? . உண்மையா  பொய்யா  எனத் தெரியாது :
வேலை தேடிச் செல்லும் ஒருவரிடம் நேர்காணலில் கேள்வி கேட்க அதற்கு அவர் ‘எனக்குத்  தெரியாது’ என்று பதில் சொன்னால் என்ன நேரும்? ஆனால் அப்படிச் சொன்ன ஒருவரைப் பாராட்டிப் பணியிலும் சேர்த்துக்கொண்ட கதை இது. முந்திய  நூற்றாண்டில், சென்னைத் தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். வீ .கோ.சூரியநாராயண சாஸ்திரியார் (என்னும் பரிதிமாற்  கலைஞர்).

ஆசிரியர் வேலை தேடி வந்த இளைஞரிடம் அவர் கேட்ட கேள்வி:  ”குற்றியலுகரத்துக்கும் முற்றியலுகரத்துக்கும் எடுத்துக் காட்டு தருக”! வந்த இளைஞரிடமிருந்து பட்டெனப் பதில் வந்தது : ”எனக்குத் தெரியாது!”.

”அப்பா, நீயல்லோ தமிழறிஞன்!” என்று பாராட்டிய சாஸ்திரியார், இளைஞரை  உடனே பணியில் அமர்த்தி விட்டார். அந்த இளைஞர்? வேறு எவரும் இல்லை – வேதாச்சலம்தான். பின்னாளில் ‘மறைமலை அடிகள்’ எனப் பெயர் மாற்றிக்கொண்டவர். புதிருக்கு விடை : அவர் சொன்ன பதிலிலேயே உள்ளது :

‘எனக்கு’ என்பதில் உள்ள ‘கு’-வில் இருக்கும் ‘உ’கரம்  குற்றியலுகரம் ; ‘தெரியாது’ (என்னும் சொல்லில் உள்ள ‘து’ -வில் இருக்கும் ‘உ’கரம் முற்றியலுகரம்.

கூடவே இன்னொரு பொடிச் செய்தி : இந்தக் குற்றியலுகரத்தின்   பலுக்கல் (ஒலிப்பு) மிக மிக  இனிமையானது. இதன் இனிமை தவறாமல் பாடியவர் அமரர் சீர்காழி கோவிந்தராசன் அவர்கள். குறிப்பாகக் ‘குமுதம்’ என்ற திரைப் படத்தில் ‘என்னை விட்டு ஓடிப் போக முடியுமா’ என்னும் பாடல் வரும். சீர்காழி அவர்களும் சுசீலா அம்மாவும் மிக அழகாக, இனிமையாகப் பாடி இருப்பார்கள். அதில் ஒரு வரி :

‘அன்னம் போல நடை நடந்து வந்து – என்

அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து ‘.

இதனைச் சீர்காழி பாடுவார். அவர் குரலில், ஒலிப்பில் குற்றியலுகரத்தின் அழகெல்லாம் பொங்கி வழியும். இப்பாட்டைத் தேடிக் கேளுங்கள், நான் சொல்வது புரியும். (இந்தக் காலத்திலும் பாடுகிறார்களே ழகர, ளகர, லகர; ணகர, னகர, நகர ; ரகர, றகர வேறுபாடுகளே இல்லாமல் …!).

சரி நம்ம ‘தலைவலிக்கு’ப் போவோம். இந்த இலக்கண விதியைக் கைப்பிடித்து  அழைத்து வந்து காட்டி ‘வாழ்த்து’ என்னும் சொல்லில் உள்ள ஈற்று ‘உகரம்’ குற்றியலுகரம். எனவே அதற்குப் பின் ஒற்று மிக வேண்டும். ஆகவே ‘வாழ்த்துக்கள்’ என்பதே சரி என்பார் பலர்.

விவரம் தெரிந்தவர்களே சொல்லும்போது, அதற்கு மேல்  விளக்கம் (அதற்கு   மேல்  விளக்கம்) எதற்கு  என நம்மில் பலரும் தலை ஆட்டி ஏற்றுக் கொண்டோம், இல்லையா? அவர்கள் கொண்டு வந்து நிறுத்தும் விதி மேல் எந்தப் பிழையும் இல்லை. ஆனால், அந்த விதி எந்த இடத்தில் செல்லும் என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள் அல்லது மறைத்து விட்டார்கள் என்றுதான் கூற வேண்டும்.

இங்கே கம்பனின் காவியத்தில் இருந்து ஒரு காட்சி: மறு நாள் முடி சூட இருக்கும் இராமனுக்கு, முன் நாள் இரவு மணிமகுடம் மறுக்கப்படுகிறது. அன்றலர்ந்த  தாமரையாக அவன் முகம் மலர்ந்து இருந்தாலும் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கிறான் இளவல் இலக்குவன். அவனை அமைதிப் படுத்தும் இராமன்,

“நதியின் பிழையன்று நறும்புனலின்மை…

…………….   ……………..   ………………..   ………………   ……………

விதியின் பிழை நீஇதற் கென்னை வெகுண்ட” தென்றான்.

அண்ணனே சொன்னாலும் ஆறாத சினத்தோடும் மாறாத உளத்தோடும் “விதிக்கும் விதியாகும் என் வில்தொழில் காண்டி’ எனச் சீறுகிறான் சினமென்னும் குன்றேறி நின்ற இலக்குவன். அவனைப் போல,   இவர்கள் கொண்டு வந்து காட்டும் விதிக்கும் விதியாகும் விதி ஒன்று உள்ளது. (ஏனோ தெரியவில்லை, இணையதளத்தில் எழுதிய  எவரும் இந்த விதியை எடுத்துக் காட்டவில்லை!)

புணர்ச்சி என்பதை  வரையறை செய்யும் நன்னூலார்,

மெய்யுயிர் முதலீறு ஆமிரு பதங்களும்
தன்னொடும் பிறிதொடும் அல்வழி வேற்றுமைப்
பொருளில் பொருந்துழி
நிலைவரு மொழிகள்
இயல்பொடு விகாரத்து இயைவது
புணர்ப்பே. (நன்னூல் : 151).

என்கிறார். புணர்ச்சி என்பது எப்போது நிகழும், எங்குப் புணர்ச்சி விதிகள் செல்லும் என்பதைத்  தெள்ளத் தெளிவாகக் காட்டும் நூற்பா இது.

ஏற்கனவே என்  கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது போல, கட்டடம் கட்டுவோர் செங்கற்களை அடுக்கி இடையே இணைப்பியை (cement) அப்புவது போல, இரு சொற்களை இணைக்க அச் சொற்களுக்கு இடையில் எழுத்துகள் சில தோன்றலும் திரிதலும் கெடுதலும் புணர்ச்சி எனப் படும். இந்தப் புணர்ச்சி நிகழ இரண்டு சொற்கள் தேவை. அதாவது இரண்டு சொற்கள் இருந்தால்தான்,  இந்தச்  சொற்களுக்கு இடையில்தான் புணர்ச்சி நிகழும்.

சொற்கள் என்றாலும் பதங்கள் என்றாலும் மொழிகள் என்றாலும் ஒரு பொருளனவே.. ஒரு சொல் நிலை மொழியாகவும்  அதனோடு சேர வரும் சொல் வருமொழியாகவும் விளங்கும். இவற்றை நிலை, வரு மொழிகள் என வினைத் தொகையாகச்  சொன்னார் நன்னூலார்.

இப்படி இரண்டு சொற்கள் இருந்தால்தான், இணைகின்ற இடத்தில்தான் புணர்ச்சி விதிகள் செல்லுபடியாகும், காற்று இருந்தால்தான் ஒலி அதனூடே பயணம் செய்ய முடியும் என்பது போல. அதனால்தான், ‘புணர்ப்பே’ என்று தேற்றேகாரம் போட்டு நன்னூல் ஆசிரியர் வலியுறுத்துகிறார். அப்படி இரண்டு சொற்கள் இல்லை என்றால் அது புணர்ச்சி ஆகாது. புணர்ச்சி ஆகாது என்றால், அங்குப் புணர்ச்சி விதிகளுக்கு இடம் ஏது?

இனி இந்த விளக்கத்தின் ஒளியில், ‘வாழ்த்துக்கள்’ என்ற சொல்லைப் பிரித்து ஆய்ந்து பார்ப்போம்.

வாழ்த்துக்கள்>வாழ்த்து+க்+கள்

இதில் வாழ்த்து – நிலை மொழி.

கள் – ? வரு மொழியா? இது சொல்லா? இல்லை! முன்பே சொல்லி இருக்கிறேன் தமிழில் இரு வகைச்  சொற்களே உள்ளன :

அவை பெயர், வினைச் சொற்கள் என. இடை உரி என்பன பெயர்கள் என அழைக்கப் பட்டாலும், அவற்றுக்குத் தனிப் பொருள் இன்மையானும் அவை தனித்து இயங்காத் தன்மையானும் சொற்கள் எனக் கருதப்பட மாட்டா! அப்படி ஆயின், இந்தக் ‘கள்’  என்பது?

சென்ற பகுதியில்,

‘கள்’-இன் முதல் பயன்பாடு ஒருமையைப் பன்மையாக மாற்றுவது. இப்படி வரும் கள்என்னும் சொல் (பன்மை)  விகுதி.

ஒருமைச் சொல்லோடுகள்விகுதி சேர்ப்பதால் பன்மைச் சொல் விளையும்
(காடு – காடுகள் ; செடி-செடிகள் )

இந்தக் கருத்தை நன்றாக மனத்துள் கொள்க; அடுத்த கட்டுரையில் இதனை நினைவு கூர்தல் வேண்டும்என்று குறிப்பிட்டு இருந்தேன். இப்போது அதனை நினைவு கூர்க.

எனவே இந்தக்’கள்’ தனிச்சொல் இல்லை, ஒருமையைப் பன்மையாக்கப் பயன்படும் ‘விகுதி’.

‘வாழ்த்து’ என்ற நிலை மொழியோடு ‘கள்’ என்னும் விகுதி தான் சேருகிறதே ஒழிய சேரும் வருமொழி ஏதும் இல்லை. ஆகவே புணர்ச்சி இலக்கணம்  இங்குச்  செல்லாக் காசாகி விடுகிறது. இந்தச் செல்லாக் காசை வைத்துக் கொண்டு செல்லும் செல்லும் எனச் சொல்லுபவர்களை என்ன செய்வது!

‘வாழ்த்து’ (நிலை மொழி  – ஒருமை) + ‘கள்’ (பன்மை விகுதி) > வாழ்த்துகள்.

‘வாழ்த்துகள்’ என எழுதுவதே சரி, முறை என்று காட்டி விட்டேன். இனியேனும் ‘க்’ போட்டுக் கள்ளைச் சேர்ப்பதை விட்டோழிப்போமா / விட்டோழிப்போமே!

‘வாழ்த்துகள்’ என எழுதுவதே சரி, முறை என்று   சொன்ன முதல் ஆள் நான்தான் என்று மார் தட்ட விடாமல் பலர் ‘ஹரி கிருஷ்ணன்,  மறைமலை இலக்குவனார், புலவர் இரா கிருட்டிணன், இலவசக் கொத்தனார்’ போன்றோர்’ எனக்கு முன்பே இது பற்றி இணையதளத்தில் எழுதி விட்டனர். அவர்களுக்கு என் நன்றி. ஆனாலும், என் பாணியில் நான் இதனை எடுத்துக் கூறி இருக்கிறேன்.

‘செவி உள்ளவன் கேட்கக் கடவான்’ என்பது போல் செவி உள்ளவர்கள் இதனைக் கேட்ப்பர்களா? இல்லை செவிடன் காதில் ஊதிய சங்காகுமா? யானறியேன் பராபரமே!

சரி இங்கு இன்னொரு கேள்வி எழக் கூடும். ‘கள்’ என்பது விகுதியாகப் பயன் பட்டால் அதனைச் சேர்க்கும் போது ஒற்று மிகாது. ஆனால், அதற்குக்  குடிக்கின்ற மது என்றொரு பொருளும் உண்டே. அப்போது அது விகுதியாக அல்லாமல் தனிச் சொல்லாகவே ஆகுமே! அப்படி ஆனால்?

இதற்கு இதோ விளக்கம் :

‘கள்’ என்பது  குடிப் பொருளை உணர்த்தினால், இரு பதங்கள் வருவதால் அங்கே புணர்ச்சி விதிகள் செயல்படும். ஒற்று மிகும். காட்டு:

தோப்பு + கள் > தோப்புக் கள் என வரும்

இங்கே இவை புணர்ந்தாலும் இரு சொற்களையும் இடைவெளி விட்டே எழுதுவது  முறை .
பொருள் மயக்கம் வராமல் இருக்கும்

(மாட்டு+க்+கொட்டகை=மாட்டுக் கொட்டகை எனபது போல).

தோப்புக் கள் என்றால் தோப்பில் இருந்து இறக்கப்பட்ட கள் என்று  பொருள் வரும்.

இக்கருத்தை அந்தக் காலத்துத் தமிழ்ப் பெரியார்கள் மயிலை சீனி வேங்கடசாமி, மே.வீ. வேணுகோபாலப்  பிள்ளை, மயிலை சிவமுத்து … போன்றோர் கூறியுள்ளனர்.

‘கள்’ -இன் பெருமை இத்துடன் முடிகிறது என்று கூற இயலாது.

ஏனெனில், பன்மை விகுதியாகவே ‘கள்’ வந்தாலும் சில இடங்களில் ஒற்று மிகுந்தே வரும் ; வர வேண்டும். சில இடங்களில் ஒற்று மிகாது ; சில சமயம் ‘ங்’ என்னும் மெய்யெழுத்தோடு கூடி வரும். இவற்றைக் கவனத்தில் கொள்க.

1 நிலை  மொழியின்  ஈற்றெழுத்து நெடிலாக வந்தால் அங்கே ஒற்று மிகுந்து வரும் :

பூ+கள்>பூக்கள் ; ஈ+கள்> ஈக்கள்  ; பா+கள்>பாக்கள் ; …

2 நிலை மொழியில் இரண்டு குற்றெழுத்துகள் வரின் அங்கும் ஒற்று மிகுத்து எழுதல் வேண்டும் :

பசு+கள்> பசுக்கள் ; கொசு+கள்> கொசுக்கள் ; கணு+கள்>கணுக்கள்

3  நிலை மொழியில் மூவெழுத்துகள் இடம் பெறின் அங்கே ஒற்று மிகாது

கொலுசு+கள்> கொலுசுகள் . தராசு+கள்> தராசுகள் ; பழுது+கள்> பழுதுகள் ; வசவு+கள்>வசவுகள்

4 நிலை மொழி ‘வு’கரத்தில் முடியும் போது ஒற்று மிகாது

ஆய்வு+கள்>ஆய்வுகள் ; சாய்வு+கள்>சாய்வுகள் ; சாவு+கள்>சாவுகள்.

5  மூக்கொலியில் (nasal sound) முடியும் (-ம்) எல்லாச் சொற்களுடனும் ‘கள்’ சேரும் போது ‘ங்’ மிகுந்து வருவது உண்டு :

மரம்+கள்>மரங்கள் ; பாவம்+கள்>பாவங்கள் ; பழம்+கள்>பழங்கள் ; ஏமம்+கள்>ஏமங்கள்.

இவ்வளவு விளக்கிய பின் ‘கள்’ -இன் மயக்கம் இந்நேரம் தெளிந்திருக்க வேண்டும். தெளியவில்லையானால் அது ‘கள்’-இன் மயக்கம் இல்லை ‘கோமா’ மயக்கம் என்று அறிக. அதிலிருந்து மீள்வது அரிது.

‘கள்’-ஐப் பற்றி இத்தனை  தூரம்/ நேரம்  சொல்லிய பிறகும் நாட்களா? நாள்களா? என்னும் சிக்கலைக் காண அடுத்த பகுதி வரை காத்திருக்க வேண்டும்.

ஆகக் ‘கள்’ -இன் மகிமை இன்னும் தொடர்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “தவறின்றித் தமிழ் எழுதுவோமே!

  1. பேராசிரியருக்குப் பாராட்டுகள். இலக்கணத்தையும் இனிய சுவையுடன் விளக்க முடியும் என்பதைக் காட்டியதற்கு. ‘கள்’ நீக்கிக் களிப்பு அடைவோம்!
    அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்!

    இனத்தைக் காப்போம்! /

  2. உமது பாணியும், பேராசிரியரே, பொடிச் செய்திகளும் கன ஜோர். நான் பயந்தாங்குளி. அதான் பிரகாஷ் சுகுமாரனுக்கு ‘வாழ்த்து’ என்று ஒருமையில் சொல்லி ‘கள்’ளில் இறங்காமல் தப்பித்துக்கொண்டேன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *