செடிகள் பூக்களைத்தான் தரும்

ஆதித் சக்திவேல் 

தன் தோளிலும் கழுத்திலும்
தொங்கிய  கருவிகளில்
அவ்விசைக் கலைஞனின்
உதடுகளும் விரல்களும்
மாறி மாறிப் பதிந்து பயணித்ததில்
மிதந்து வந்த மேகமென
கொட்டிய  மலை அருவியென
பொங்கியது அவன் பாடலில்  இனிமை
வேர் பிடித்துச் சென்றேன் அவ்விசையின் இனிமையை
வேதனைகள் முடிச்சு முடிச்சாய்
திரண்டிருந்தன அவற்றின்
நுனிகளில்

வண்ணங்களை
அந்த ஓவியன் கலந்த நேர்த்தியில்
நிஜங்களை
நிறங்களால் நிழல்களாக்கி
திரையினில் அவன் தீட்டிய பாங்கினில்
உயிர் பெற்றது ஒரு காட்சி ஓவியமாய்
அவனது கற்பனை வண்ணங்களை
ஒவ்வொன்றாய் உரித்துப் பார்த்தேன்
கடைசியாய்க்  கண்ணுக்குத் தெரிந்தது
இருட்டான  கருப்பு வண்ணம்
திட்டுத்  திட்டாய் அவன் மனம் எங்கும்

முழங்கிய உரையில்
குரலின் ஏற்ற இறக்கங்களில்
சினத்தில் அடித்த முரசின் இடியென
கத்தியின் கூர்மையாய்
மேடையில் பேசியவனிடமிருந்து
வந்து விழுந்த வார்த்தைகளைக்
கூர்ந்து கேட்டேன்
கைகோர்த்து நின்றன அவற்றுடன்
ஏமாற்றத்தின் துயரை
எதிரொலித்த பல வார்த்தைகள்

பூக்கள் மேவிய பாதையில் நடப்பதாய்
அந்நடிகனின் கம்பீரம் கண்டு
பாதங்களின் சுவடுகளைப்
பின் தொடர்ந்தேன்
முட்களையும்  கற்களையும்
மிதித்துச் சென்றன அவை
குத்திக் கிழித்திடும்
அவனது பார்வை என
எண்ணிய நான் ஏமாந்தேன்
குனிந்து குருதி வடித்துக் கொண்டிருந்த
அவன் கண்களைப் பார்த்தபோது
அவன் கண்ட கனவுகளை
யாரோ திருடிக் கொண்டது போல்
அக்கண்களில் ஒரு பாவம்

ஒவ்வொரு கலைஞனின் மனதிலும்
இவ்வளவு வேதனைகளா?
தாங்க முடியாமல்
அவர்களில் ஒருவனை
நிறுத்திக் கேட்டேன்

“நீருக்குப் போரிடும் தம் வேரை
யாருக்கும் தெரியாது
மண்ணுள் புதைத்து
பூத்துக் குலுங்கும் மலர்களை
காய்த்துக் கனிந்த கனிகளை
தம் கிளைகளில் காட்டும்
செடிகளும் மரங்களும் போல்
அடுக்கடுக்காய் வேதனைகள்   அத்தனையும் மனதின் ஆழப்புதைத்து
மக்கள் மகிழ்ச்சி கொள்ளத்
தம்மை வெளிக் காட்டுவோரே கலைஞர்
பூக்களுக்கும் நிலவுக்கும் நடுவே
வாழ்பவரல்ல அவர்கள் “

கலைஞர்களின்  பிரதியாய்
இருந்த அவன்
என் கேள்விக்கு பதில் தந்து
நடந்தான்  தன் அடுத்த நிகழ்ச்சிக்கு

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.