அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

கீதாமதி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (21.06.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “படக்கவிதைப் போட்டி – 263

 1. பகையாய்…

  பச்சை இலையில் வெட்டுக்கிளி
  பார்த்திட அழகுதான் சின்னக்கிளி,
  மிச்ச மீதி வைக்காமல்
  முழுதும் இலையைத் தின்றிடுமே,
  துச்ச மாக எண்ணவேண்டாம்
  துணையுடன் கூட்டமாய் வந்தாலே
  பச்சைப் பயிரெலாம் பாழாகும்,
  பார்த்தே ஒழிப்போம் பகையிதையே…!

  செண்பக ஜெகதீசன்…

 2. எட்டிச் செல் வெட்டுக்கிளியே!

  வட்டிக்குக் கடன் வாங்கி
  வயல்காட்டைப் பண்படுத்தி
  சுட்டெரிக்கும் வெயிலிலும்
  சோர்வின்றி தினம் உழைத்து
  நட்ட பயிர் வளர்ச்சிக்காய்
  நாளும் பொழுதும் பாடுபட்டு
  கொட்டும் நல்ல‌ விளைச்சலால்
  கிட்டும் பணம் கொண்டு
  வட்டிக் கடன் அடைத்து
  வளமாய் வாழ நினைக்கையில்
  நட்ட பயிர் இலைகளை
  வெட்டி உணவாய் உட்கொண்டு
  நட்டம் தன்னை ஏற்படுத்துதல்
  நல்லதோ சொல் வெட்டுக்கிளிமே?
  நட்ட விவசாயி நாளும்
  பட்ட துயர் நீயறிந்தால்
  கிட்ட வராமல் கூட்டத்துடன்
  எட்டிச் செல்வாய் மனமிரங்கி!

  கோ சிவகுமார்,
  மண்ணிவாக்கம்
  சென்னை.

 3. படக்கவிதை போட்டி எண் 263

  இளம்பச்சை வண்ணமதில்
  அழகாய் நீ இருந்தாலும்
  உனை நான் வெறுக்கிறேன்
  வெட்டுவது உன் குணமாய்
  இருக்கையிலே வேறு என் செய?

  உலகின் கண்டம் விட்டு கண்டம் வந்து தானியங்களை அழித்து விட்டு
  நாடுகளை நாசமாக்கும் இனம்தானே நீ?

  விளை நிலங்கள் பயிரினங்கள்
  வீழ்ந்திட்ட நிலையினையே
  மறந்திட்டு உனை ரசிக்க
  ஈரமில்லை என் நெஞ்சில்

  வந்தவழி சென்று விடு
  எம் நாட்டின் வாசலை மூடிவிட்டோம்
  நீ இருந்த இடத்திலே இருந்திட்டு
  இறுதி வரை வாழ்ந்து விடு

  வெட்டும் குணம் மாற்றிக் கொள்
  சுதந்திரமாய் பறந்து திரி
  நாங்கள் அழைப்பதற்கும் ஏதுவாக!!
  உனை ரசிப்பதற்க்கும் தோதுவாக

  சுதா மாதவன்

 4. திரும்பிச் செல்!

  இன்பமாய் அமர்ந்திருக்கும் நீ எனை உண்பதுபற்றி
  இறுதிமுடிவு எடுக்குமுன் பொறுமையாய்க் கேள்!
  இலையெனும் நான் கெஞ்சிக் கேட்கிறேன்.
  இப்புவிவாழ் உழவரையெல்லாம் கதிரவன்
  இரக்கமின்றி சுட்டெரித்தான் கடவுளாய் வணங்கினர்
  இரவுபகலாய் அதிகமழைபொழிவித்து
  இடர்விளைவித்தவனையும் மழைக்கடவுளென்றனர்
  இங்குமங்கும் மரங்களைச் சாய்த்துப் பயிருக்குச் சேதம்
  இழைத்த காற்றையும் கடவுளாய் வணங்கினர்
  இதுபோன்ற கடவுளர் பல உண்டு இவர்கள் பட்டியலில்
  இருப்பதை வைத்து விதை வாங்கித் தூவி வயிற்றைக் கட்டி
  இயன்றவரை கடும் உடலுழைப்பால் எமை உருவாக்கி
  இயற்கை நடத்தும் நாடகமாம் புயல், மழை வறட்சியினின்று
  இந்நேரம்வரைக் காத்த எம் உழவர்கூட்டத்தை நினைத்துப்பார்!
  இன்னல் விளைத்து உழவர்களுக்குத் தொல்லைகொடுக்க
  இயற்கை நடத்தும் நாடகத்தில் பாத்திரமேற்று நடிக்க
  இங்கு யாருனை அனுப்பிவைத்தார்? பெயரைச் சொல்!
  இடர் விளைவித்தவரையெல்லாம் கடவுளாக்கி சுடர் ஏற்றி வழிபட்டு
  இம்மியளவும் தளரா எம் உழவர் பெருமக்கள் உன்னை அனுப்பியவரையும்
  இனிமேல் கடவுளர்கள் பட்டியலில் கண்டிப்பாகச் சேர்த்துவணங்குவர்
  இப்பூவலக மக்களெல்லாம் நல்லவர்கள் இவர்களுக்கு
  இயற்கை வழிபாடு ஒன்றும் புதிதல்ல புரிந்துகொள்!
  இப்போதுவரை வயிறுபெருத்த உன்கூட்டம் உலகத்துப் பயிரை
  இடைவிடாது விழுங்கியது போதும் திரும்பிச்செல்!
  இவ்வுலகத்தவர் வயிற்றை நிரப்பி நன்றிசெலுத்த எமக்கும் வாய்ப்புகொடு.

  -நாங்குநேரி வாசஸ்ரீ
  சென்னை.

 5. வெட்டுக்கிளியே எச்சரிக்கை
  முதலில் உனது பெயரை
  மாற்றி எழுத வேண்டும்
  நீ வெட்டுக்கிளி அல்ல
  நீ பாயும் புலி

  கிளி என்றால் அழகு
  கிளி என்றால் நேசம்
  இரண்டுமே இல்லாத்தால்
  பயிர்களோ நாசம்

  கண்டம் விட்டு கண்டம்
  பறவைகள் தான் வருகிறது
  இருண்டகம் உன்போல் செயலையே

  உழைக்காமல் உண்பவனே
  உண்ணும் உணவை அழிப்பவனே
  பூச்சி இனம் தானே
  கண்ணாமூச்சி உன் இனத்திடமே

  பயிர்களை நாசம் செய்ய செய்ய
  உன் அழிவு நீ தேடியதே

  விவசாயிகளை வாட்டாதே
  படையெடுப்பு கொழுப்பே

  பல்முனைத் தாக்குதல்
  பாரதம் எப்படி சமாளிக்க

  ஒருபுறம் கொரானா
  மறுபுறம் சீனா சனியன்
  நடுவினில் நீயா
  நாங்கள் என்ன வீணா

  பார்த்து விடுவோம் ஒருகை
  காந்தி தேசத்தில்
  உனக்கில்லை இரக்கம்
  உன் இறக்கை வெட்டப்படும்
  விவசாயி பயிர்
  இருக்கை காக்கப்படும்

  சீ.காந்திமதிநாதன்
  கோவில்பட்டி

 6. உயிர் சுழற்சி

  பேரிச்சைப் பாலை விட்டு –
  நெல்இச்சைக் கொண்டு வந்து
  உரம்பாய்ச்சி வளர்த்து வைத்த
  கதிரழித்த வெட்டுக்கிளி…

  நாடுவிட்டு நாடுசென்று
  ஏவுகணைப் போலத் தாக்கி
  பாடுபட்டு வளர்த்த பயிர்
  காவுகொண்டு போனதிங்கே….

  பூச்சியினம் ஊர்வன உண்ணும்
  ஊர்வனத்தை விலங்கு உண்ணும்
  விலங்கினங்கள் காட்தில் வாழும்
  உயிர் சுழற்சி பாடம் கண்டோம்…

  உயிர் சுழற்சி இயற்கையை – நாம்
  முறைதவற வைத்துவிட்டு
  சிற்றுயிரி பூச்சியினைக்
  குற்றஞ்சொல்லி ஏது பயன்…

Leave a Reply

Your email address will not be published.