-மேகலா இராமமூர்த்தி

கூடையிலிருந்து கொட்டுவது உப்பா வெண்முத்தா என்று ஐயுறும் வண்ணம் ஒளிவீசும் உப்புக் குவியலையும் அதனை அளவாய்க் கொட்டிக்கொண்டிருக்கும் மனிதரையும் நிழற்படமாக்கித் தந்திருக்கின்றார் திருமிகு. நித்தி ஆனந்த். இதனை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 262க்கு வழங்கியிருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றிகள் சென்று சேரட்டும்!

அப்பிலே(நீர்) தோன்றி உணவுக்குச் சுவைகூட்டும் ஒப்பிலா உயர்பொருள் உப்பு. ’மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்ற வள்ளுவக் கருத்து  உப்புக்கும் ஒப்பும்!

பல்வேறு சிந்தனைகளைக் கிளறும் இந்த உப்பளச் சூழலுக்குப் பொருத்தமாய்ப் பாட்டெழுத நம் கவிஞர் குழாத்தைக் கனிவோடு அழைக்கின்றேன்.

*****
”ஏழ்மை நிலையிலேயே வாழ்வை வைத்திருந்தாலும் பிழையில்லாத் தொழில் இந்த உப்பளத் தொழில்; இயற்கையோடு இயைந்த தொழில்” என்றுவக்கும் உப்பளத் தொழிலாளியைக் காண்கின்றோம் திரு. சீ. காந்திமதிநாதனின் கவிதையில்.

உப்பளத் தொழிலாளி பெருமிதம்

கடல் அன்னையின் தண்ணீர்
இட நிலத்தில் இடும் பன்னீர்
திடமாய் நீக்கிடும் கண்ணீர்
சூரிய பகவான் பார்வை படப்பட
வீரியச் சமையல் உப்பு சுடச்சுட
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
உப்பு தருவோரை
உச்சிமுதல் கால்வரை நினை
இயற்கையோடு இயைந்த தொழில்
இயற்கைமீறி எதுவும் இல்லை
வருண பகவானால் விடுமுறை
வரவுக்கு மாற்றுத் தொழில்
பிழையில்லாத தொழில்
ஏழையாகவே வாழ்வாதாரம்
ஏழ்மை நிலை வாழ்க்கைக்கே
மனதிற்கு இல்லையே!

*****

”உப்பளத் தொழிலையே வயிற்றுப் பிழைப்பாக வைத்திருக்கும் தொழிலாளியின் வயிற்றிலடித்துவிடுகின்றதே இந்த மழை!” என்று வேதனையுறுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

உப்பளத்தில்…
வெயிலால் வந்திடும் விளைச்சலிது
வேர்வைச் சுவைதான் உப்புயிது,
பயிர்போல் விளையும் வயலினிலே
படிகமாய் மாறிடும் கடல்நீரே,
வயிற்றுப் பிழைப்புப் பலர்க்கிதுவே
வயிற்றி லடித்திடும் மழைவந்தே,
கயிற்றில் நடப்பதாய் வாழ்க்கையிது
காணீ ராங்கே உப்பளத்திலே…!

*****

”தூத்துக்குடிக் களஞ்சியமே! நீயின்றிச் சுவையில்லை; ஆதலால் உனைத் துறக்கவும் முடியவில்லை. உப்பிட்டவரை உள்ளளவும் நினைத்தது அன்று; உடனேயே மறப்பது இன்று!” என்று வருந்தி விளம்புகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

தூத்துக்குடிக் களஞ்சியமே!
நீ இல்லாவிடில் இதயம் துடிதுடிக்கும்
அது நிஜமே
நீ உணவில் குறைந்தாலும் குற்றம்
மிகையானாலும் குற்றம்
உனைத் துறக்கத்தான் நினைக்கிறேன் முடியவில்லை
அதனால் தானோ நீ
ஏழேழ் கடல் முழுதும் கலந்து விட்டாய்
தண்ணீரோடு இணைந்து விட்டாய்
நீயின்றிச் சுவையில்லை
நீரின்றி உலகில்லை
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
அது அன்றைய பழமொழி
உப்பிட்டவரை உள்ளளவும் மற
இது இன்றைய பழமொழி
இதுவே காலத்தின் பாடம்

*****

”சேற்றினில் விளைந்த உப்பெனும் வெண்படிகம் சோற்றினைச் சுவைத்திட உதவிடும். உப்பளத் தொழிலாளி காலிலன்றோ மக்களின் நாச்சுவை மண்டியிட்டு வாழ்கின்றது” என்று சுவைபடப் பாப்புனைந்திருக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

கடல்விளை அமுதம்

நெல்வயல் காய்ந்துவிட்டால்
விவசாயி வயிறு காயும்
நெய்தல் நிலம் காய்ந்துவிட
வெண்ணமுது விளைந்துவரும்
சேற்றினில் விளைந்த வெண்படிகம்
சோற்றினைச் சுவைக்க உதவிடும்
உப்பளத் தொழிலாளி காலினிலே
மக்களின் நாச்சுவை வாழும்…
அகிம்சைப் போராட்ட நாயகனின்
அறநெறித் தத்துவ வழிமுறைகள்
கடல்விளை அமுதத் துகளாக – சோற்றுக்
களம்வழி உயிரில் புகுத்திவிடும்….

*****

உப்பின் மதிப்பை, உப்பளத்தொழிலாளி வாழ்வின் உண்மை நிலையை உள்ளபடி உரைத்திருக்கும் கவிஞர்கள் அனைவரையும் உளமாரப் பாராட்டுகின்றேன்.

அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பது…

உழைப்பில் விளைந்த உப்பு

உச்சிவேளை சுடும் வெயில்‌
ஒதுங்க இல்லை மர நிழல்
உப்புக் கரிக்கும் நீர்
உடல் முழுதும் வழிந்தோடக்
கடல் நீரின் உப்புக்காய்‌க்
கடின உழைப்பை விதைக்கின்ற உழைப்பாளியே!
உப்பளங்கள் உன் உழைப்பை உதாசீனம் செய்தாலும்
‘உப்பில்லாப் பண்டம்
குப்பையிலே‘ என்னும்
செப்பு மொழியறிந்து
உப்பிட்டு உண்ணும்
ஊரார் நாங்கள்
ஒருநாளும் மறக்காமல்
உளமார நன்றி சொல்வோம்!

”உச்சிவேளை உச்ச வெயிலில் உப்புநீர் உடலெங்கும் வழிந்தோட உழைக்கும் உப்பளத் தொழிலாளியே! உப்பின் மதிப்பறிந்து உண்ணும் நாங்கள் நன்றிசொல்வோம் என்றும் உமக்கு உளமார!” என்று நெகிழ்ந்துரைக்கும் இக்கவிதையின் ஆசிரியர் மண்ணிவாக்கம் திரு. கோ. சிவகுமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *