அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

வனிலா பாலாஜி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (05.07.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “படக்கவிதைப் போட்டி – 265

  1. புன்னகை…

    காட்டுப் பூவின் சிரிப்பினிலே
    காணும் பொருளே வேறுவேறே,
    வீட்டுப் பெண்ணின் தலையதிலோ
    விதியே முடிந்த பிணத்தினிலோ,
    போட்டுக் கழற்றும் சிலையினிலோ
    போவ தெங்கோ தெரியவில்லை,
    காட்டும் மாறாப் புன்னகையே
    கற்பாய் மனிதா பூவிடமே…!

    செண்பக ஜெகதீசன்…

  2. ஒரு மொட்டின் சிரிப்பூ…

    புத்தம் புது மலரென்று
    புகைப்படக்காரர்
    புகைப்படமெடுத்து
    வலைத் தளங்களில்
    போட்டு விட்டால்
    தேனைத் தேடும் வண்டு
    தேடி வரும் நம்மையென்று
    மொட்டுக்களின் கூட்டத்திலே
    முந்திக் கொண்டு
    மொட்டு விரித்துச் சிரிக்கின்றாயோ
    வெண் பூவே!
    நீ கெட்டிக்காரி தான்!

    கோ சிவகுமார்
    மண்ணிவாக்கம்
    சென்னை.

  3. கண்படுமென்று
    கண் ‘மை’ கொண்டு
    திருஷ்டிப் பொட்டு
    வைப்பது தானே வழக்கம்
    தான் பிடித்த புகைப்படத்திற்கு
    கண்படுமென்று
    வனிலா பாலாஜி
    ஒரு அழகிய பூவை
    வைத்தது அதிசயமே!
    இந்த வெள்ளைப் பூவானது
    சூதும் வாதும்
    நிறைந்த பூமியிலே
    பூத்திட்ட “வெள்ளந்திப்பூ”
    சண்டையும் பூசலும்
    நிறைந்த பூமியிலே
    பூத்திட்ட “சமரசப்பூ”
    ஏற்றமும் தாழ்வும்
    நிறைந்த பூமியிலே
    பூத்திட்ட “சமத்துவப்பூ”
    தூசும் மாசும்
    நிறைந்த பூமியிலே
    பூத்திட்ட “தூய்மைப்பூ”

    -சோமசுந்தரி(ஸ்ரீ)
    கலிஃபோர்னியா
    அமெரிக்கா.

  4. படக்கவிதைப் போட்டி எண் 265

    விண்கற்களாய் தெரிகிறதே
    இந்த மலர் வெளிர்நிறத்தில்
    ஆயிரமாயிரம் வண்ணங்கள்
    இந்த மலர்களின் வகையினிலே

    ஒவ்வொன்றும் ஒர் அழகு
    ஒத்துப் போகும் அதன் நிறத்தோடே
    வாசமுண்டு வாசமில்லை
    வகையறாக்கள் வெவ்வேறே

    தவழ்ந்து வரும் தென்றலில்
    வாசமிகு வண்ண மலர்கள்
    மனதை வருடும் மாயத்தை
    செய்யும் பணியே அதீதம்

    காலை மாலை நேரமில்லை
    காணக்காண கோடியின்பம்
    மாயஜாலம் செய்கின்ற
    பூக்கூட்டங்களே நம்மன நாட்டங்களே!!

    சுதா மாதவன்

  5. நீ என்று மலர்வாய் என உனக்கு வலி தெரியாமல் பறிக்க காத்து கொண்டிருக்கும் என் கை விரல்…நீ மலரும் நேரம் சூரியன் மறைகின்றான்…நீ பரப்பிய வாசனை அறிந்து பட்டாம்பூச்சி உன்னை சுற்றும் … நீ ஒருநாள் மட்டுமே மண்ணில் வாசம் செய்ய நிலவு குடையாகிறதே.!!!….
    கி.அனிதா, சிப்காட்

  6. மொட்டு மலரட்டும்

    கிட்டிய நாளையெல்லாம்
    எட்டிக்காய் என்றெண்ணி
    வெட்டியாய் கழித்து -ஞானப்
    பட்டினியில் வாழ்ந்திருப்போம்…

    ஒரு நாளில் கருவுற்று
    மறுநாளில் சருகாகி
    உயிர்நீங்கி மறைந்தாலும்
    வாட்டம் முகம் காட்டவில்லை…

    வண்டுவந்து தீண்டிடுமோ
    மகரந்தம் சேர்ந்திடுமோ
    விருட்ச விதை விளைந்திடுமோ
    என்றெண்ணி வாழ்வதில்லை…

    புவியெங்கும் மணம்வீசி
    அமிழ்தத் தேன் கொடுத்து
    மகிழ்ச்சிப் புன்னகை உயிர்ப்பித்து
    மலர்ந்திருக்க மறப்பதில்லை…

    மனவாட்டம் தனை விடுத்து
    மனிதநேயம் தனை வளர்த்து
    வாழ்வதனின் பலன் வளர்க்க – நம்
    மனமொட்டு மலரட்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.