நண்பர் திலகம் பக்தவச்சலம்!

0

முனைவர் ஔவை நடராசன்

பதறிப் பதறிப் கதறிப் புலம்பினாலும் பக்தவச்சலம் இனி மீளப் போவதில்லை. அறுபதாண்டுகளுக்கு மேலாக என் உயிரில் கலந்த நண்பராகத் திகழ்ந்த திலகம் பக்தவச்சலம்.

என் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் அவர் பங்கு பெற்றவர். ஞாயிற்றுக்கிழமை மாலை சிறிதும் மனம் குலையாமல் எனக்கு ஆறுதல் சொல்லிப் பேசினார்.

தாமரையால் இத்துயரத்தைத் தாங்கவே முடியாது. இலைகள் உதிர்வது இயல்பு. மலையா இப்படிச் சாய்வது? என் மனக் கலக்கத்தை எழுத முடியவில்லை.

எண்ணினால், எண்பது பேருக்கு மேல் “எங்கே உங்கள் பக்தவச்சலம் எப்படி நீங்கள் இனி அவர் துணையில்லாமல் நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவீர்கள்?“ என்று கேட்டு என் மனத்தை வாட்டியபடி இருக்கிறார்கள்.

அவர் மறைந்தார் அல்லர். கவிப்பேரரசு ஆறுதல் கூறியது போல, அவர் வாழ்வில் நிறைந்தார். நினைவில் நினைத்தபடி இருப்பார். கண்ணை மூடினால் அவர் தோற்றம்தான் தெரிகிறது.

தொட்டுத் தொட்டு அன்பைக் கொட்டிக் கொட்டிப் பழகியவர். தன் மனத்துயரை மற்றவரிடம் அவர் பகிர்ந்ததேயில்லை. அவர் எது சொன்னாலும் நான் முரண்பட்டதில்லை.

ஒய்.எம்.சி.ஏ. அரங்கம் ஓவென்று கதறுகிறது. எண்பதாம் ஆண்டு விழா இப்படிதானா நடப்பது? ஊரடங்கு உலகத்தையே கலக்கும்போது, பக்தவச்சலம் அடங்கியிருப்பது விழிமேல் இடிவிழுந்ததாக இருக்கிறது.

தாமரையின் தடந்தோள்களை இங்கிருந்தபடியே தழுவிக்கொள்கிறேன். பட்டிமன்றத்தைச் சொற்கட்டி மன்றமாக நடத்திய வரலாற்றினைத் தாமரைதான் தொடர்ந்து எழுத வேண்டும்.

என் ஏக்கத்துக்கு எல்லையில்லை.
அழுவதற்குக் கண்ணீரில்லை.
தேம்புகிற நெஞ்சத்துக்குப் போதிய உரமில்லை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.