நாலடியார் நயம் – 38
நாங்குநேரி வாசஸ்ரீ
38. பொது மகளிர்
பாடல் 371
விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும்
துளக்கற நாடின்வே றல்ல; – விளக்கொளியும்
நெய்யற்ற கண்ணே அறுமே, அவரன்பும்
கையற்ற கண்ணே அறும்.
விளக்கின் ஒளியும் பொதுமகளிரின் அன்பும்
வகையாய் ஆராய்ந்தால் வெவ்வேறல்ல
விளக்கின் ஒளி எண்ணெய் வற்றுங்கால் நீங்கும்
வைத்திருக்கும் கைப்பொருள் நீங்கும் நேரம்
விலகும் பொதுமகளிரின் அன்பு.
பாடல் 372
அங்கோட்டு அகல் அல்குல் ஆயிழையாள் நம்மோடு
செங்கோடு பாய்துமே என்றாள்மன்; – செங்கோட்டின்
மேற்காணம் இன்மையான் மேவாது ஒழிந்தாளே
காற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து.
அழகிய பக்கங்களுள்ள அகன்ற அல்குலையுடைய
ஆய்ந்தெடுத்த அணிகளையணிந்த பொதுமகள் எம்மோடு
உயர்ந்த செம்மலையுச்சியினின்று சேர்ந்து வீழ்வோமென
உறுதியாய்ச் சொல்லி பணமில்லையென்றதும் சேராது
உடன் ஒழிந்தாள் காலிலுள்ள நோயைக் காட்டி அழுது.
பாடல் 373
அங்கண் விசும்பின் அமரர் தொழப்படும்
செங்கண்மா லாயினும் ஆகமன்; – தம்கைக்
கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளிர் அன்னார்
விடுப்பர்தம் கையால் தொழுது.
அழகிய இடமகன்ற தேவருலகில்
அவர்களால் தொழப்படும் சிவந்த
அழகிய கண்களுடைய திருமாலேயாயினும்
அவர்தம் கையில் கொடுக்கப் பொருளில்லையெனில்
ஆய்ந்து எடுக்கத்தக்க இளந்தளிரையொத்த மேனியுடை
அப்பொதுமகளிர் தம்கையால் கும்பிட்டுத் திருப்பியனுப்புவர்.
பாடல் 374
ஆணமில் நெஞ்சத்து அணிநீலக் கண்ணார்க்குக்
காணமி லாதார் கடுவனையர்; – காணவே
செக்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடையார்
அக்காரம் அன்னர் அவர்க்கு.
அன்பில்லாத நெஞ்சத்தையும் நீலநிற
அழகிய குவளையொத்த கண்ணையுமுடைப்
பொதுமகளிர்க்குச் செல்வமில்லாதார் விடம்போன்றோர்
பலரும் காணச் செக்காட்டுவோர் அதிகப்பொருள்
பெற்றிருப்பின் சர்க்கரைபோலும் இனியவராய்க் கருதுவர்.
பாடல் 375
பாம்பிற்கு ஒருதலை காட்டி ஒருதலை
தேம்படு தெண்கயத்து மீன்காட்டும் – ஆங்கு
மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார்
விலங்கன்ன வெள்ளறிவி னார்.
தேன்போலும் இனிமைமிகு
தெளிந்த நீருள்ள பொய்கையில்
தன் தலையை ஒருமுறை பாம்புக்குக்காட்டி
திரும்பி மீனுக்குக் காட்டும் விலாங்குமீன்
தம்மையொத்து ஆசைகாட்டி மோசம் செய்யும்
தீய செய்கையுடைப் பொதுமகளிரின்
தோள்களை மிருகம் போலும் அறிவற்றவர்
தழுவுவர் எப்போதும் விரும்பி.
பாடல் 376
பொத்தநூற் கல்லும் புணர்பிரியா அன்றிலும் போல்
நித்தலும் நம்மைப் பிரியலம் என்றுரைத்த
பொற்றொடியும் போர்தகர்க்கோ டாயினாள் நன்னெஞ்சே
நிற்றியோ போதியோ நீ.
நூலும் அதில் கோத்த மணியும் போல்
நாளும் இணைபிரியா அன்றிற் பறவைகளையொத்து
நாளும் நம்மைப் பிரியோம் எனச் சொன்ன
நற்பொன் வளையை உடையாளும் போர்
நாடும் ஆட்டுக்கடாவின் முறுக்கேறிய கொம்புபோல்
நற்குணம் மாறினாளாதலில் நல்ல மனமே!
நீ ஆசைகொண்டு அவளுடன் நிற்கின்றாயா? வருகின்றாயா?
பாடல் 377
ஆமாபோல் நக்கி அவர்கைப் பொருள்கொண்டு
சேமாபோல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை
ஏமாந்து எமதென்று இருந்தார் பெறுபவே
தாமாம் பலரால் நகை.
காட்டுப் பசுவினைப்போல் இன்பம் உண்டாகத் தழுவி
கைப்பொருளெயெல்லாம் கவர்ந்து பின் எருதுபோல்
குப்புறப்படுத்துக்கொள்ளும் பொதுமகளிரின் அன்பைக்
கண்டு தமதென ஏமாந்து மயங்கி எமதேயென்றிருப்பவர்
கட்டாயமாய்ப் பலரால் எள்ளிநகையாடப்படுவார்.
பாடல் 378
ஏமாந்த போழ்தின் இனியார்போன்று இன்னாராய்த்
தாமார்ந்தபோதே தகர்க் கோடாம் – மானோக்கின்
தம்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே,
செந்நெறிச் சேர்தும்என் பார்.
நாடி வந்தவர் தம்மழகில் மயங்கியபோது
நன்கு பொருளைப் பறித்து பின் அவர்
நிலை தாழ்ந்ததும் ஆட்டுக்கிடாவின் கொம்புபோல்
நிலைமாறும் குணத்துடன் கூடிய மான்போலும்
பார்வையுடைப் பொதுமகளிரின் கொங்கைகளைப்
பண்பட்ட அறநெறி வழிசெல்லும் சான்றோர் விரும்பார்.
பாடல் 379
ஊறுசெய் நெங்சந்தம் உள்ளடக்கி ஒண்ணுதலார்
தேற மொழிந்த மொழிகேட்டுத் – தேறி
எமரென்று கொள்வாரும் கொள்பவே யார்க்கும்
தமரல்லர் தம்உடம்பி னார்.
ஒளிவீசும் நெற்றியுடைப் பொதுமகளிர் தம்மெண்ணங்களை
ஒளித்துப் பேசிய ஆசை மொழிகளை நம்பி ஏமாந்து
இவள் எமக்குரியள் என நினைக்கும் எவ்வகைப்பட்ட
இனத்தாருக்கும் உரியரல்லரவர் தமக்கே உரிய உடம்பினரவர்.
பாடல் 380
உள்ளம் ஒருவன் உழையதா ஒண்ணுதலார்
கள்ளத்தால் செய்யும் கருத்தெல்லாம் – தெள்ளி
அறிந்த இடத்தும் அறியாராம் பாவம்
செறிந்த உடம்பி னவர்.
ஒளி பொருந்திய நெற்றியுடைப் பொதுமகளிரின் மனம்
ஒருவரிடத்தேயிருக்க மற்றொருவரிடம் காமுற்றது போல்
கள்ளத்தினால் செய்யும் செய்கைகளெல்லாம் தெளிவாகக்
கண்டுணர்ந்த பின்னும் பாவம் நிறைந்த உடம்புடையோர்
கைவிட்டு ஒழிதலை அறிய மாட்டார்.