-மேகலா இராமமூர்த்தி

இராமலக்ஷ்மியின் ஒளி ஓவியத்தில் நாம் காணும் வண்ணத்துப்பூச்சியும் அது ஒயிலாக அமர்ந்திருக்கும் செடியும் நம் எண்ணத்தைக் கவர்கின்றன. வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டிருக்கின்றது இந்தப் படம். ஒளி ஓவியருக்கு என் உளமார்ந்த நன்றி!

வண்ணத்துப்பூச்சியை அஞ்சிறைத் தும்பி என்று ஆசையாய் விளித்து, ”எம் அரிவை கூந்தலினும் நறிய மலரை நீ அறிவாயோ?” என்று தலைவன், காதல் பித்தம் தலைக்கேறி, தலைவியின் நலம்பாராட்டும் குறுந்தொகைப் பாடல் நம் அகத்திரையில் வலம் வருகின்றது. அதனைப் புறத்தே விடுவோம்!

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.
(குறுந்தொகை: 2 – இறையனார்)

கற்பனைவானில் சிறகுவிரித்துப் பறக்கும் வித்தகம் கைவரப்பெற்ற நம் கவிஞர்கள் நல்ல கருத்துக்களைத் தம் கவிதைகளில் ஏற்றித்தரக் காத்திருக்கிறார்கள்; அவர்களைப் போற்றி அழைப்போம்!

*****

”வண்ணத்துப்பூச்சியே! உன் கறுப்பு வெள்ளை நிறங்கண்டு வெறுப்புற்ற உன் சொந்தங்கள் உன்னை விரட்டினரோ? மனித மனங்கள் நிறபேதம் பார்த்தாலும் மலர்கள் அவ்வாறு பார்ப்பதில்லை; உனக்கு உணவளிக்க மறுப்பதில்லை. எனவே நம்பிக்கையோடிரு!” என்று வண்ணத்துப்பூச்சிக்கு ஆறுதலளிக்கிறார் மண்ணிவாக்கம் திரு. கோ. சிவகுமார்.

தன்னம்பிக்கை

வண்ணமில்லா
வண்ணத்து.பூச்சியே,
உன் எண்ணம் நானறிவேன்!

உன்
கறுப்பு வெள்ளை
நிறம் கண்டு
வெறுப்புற்ற உறவுகள்
விரட்டி விட்டார்களேயென்று
விரக்தி அடையாதே!

கடவுளின்
படைப்பினிலே
வண்ணங்களில்
பேதங்களில்லை.

தேன் சிந்தும்
மலர்கள் உன்னைத்
தீண்டாதே என்று‌ சொல்வதில்லை.

உன்னைப் படைத்த
இறைவன்
நீ உயிர் வாழ
உணவளிப்பான்.
என்னும்
தன்னம்பிக்கையையும்
தைரியத்தையும்
நீ இழக்காத வரை
உன்னை யாரும்
தனிமைப்படுத்தித்
தவிக்கவிட முடியாது!

*****

”பிரம்மன் படைப்பின் அதிசயமான என் தாவர நட்பே வா! நட்பெனும் நம் கைகுலுக்கலில் பூத்துக் குலுங்கும் பூக்கள் எல்லாம் காயாகிக் கனியாகி நம் பிறப்பைச் சரிசெய்யும்!” என்று வண்ணத்துப்பூச்சியை வாஞ்சையாய் அழைக்கிறது மலர், திரு. சீ. காந்திமதிநாதனின் கவிதையில்.

பூவின் குணம்

வண்ணத்துப் பூச்சியே
வண்ணங்களில் மயங்கி
வனப்பில் கிறங்கித்
தேனினைத் தரலை

படைப்பின் உண்மை
பசியென வந்தால்
உணவு பரிமாறு

என்னுள் உள்ள தேன்
உன்னுள் கலந்து
உன் கால் பட்டு
இன்னொரு பூவில்
நீ அமர்கை
இயற்கையே

அதன் நிகழ்வே
மகரந்தச் சேர்க்கை
படைப்பின் பிரமிப்பு

பூவாகிப் பிஞ்சாகிக்
காயாகிக் கனியாகி
என் பிறப்பு!

நீ ஒரு கருவி
சாதாரண
வண்ணத்துப் பூச்சியல்ல நீ
பிரம்மன் படைப்பின்
அதிசயம் நீ

வா தேனை எடு
திகட்டத் திகட்ட எடு

எனக்கு வலிக்குமென
எண்ணக் கூடாது நீ

என் மீது உன் ஸ்பரிசம்
நான் வளரவே

வா வா தாவர நட்பே
நட்பெனும் நம்
கைகுலுக்கலில்
பூத்துக் குலுங்கும்
பூக்கள் எல்லாம்
காயாகிக் கனியாகி
நம் பிறப்பைச்
சரி செய்யவே

நட்புக்கும் காதலுக்கும்
புரிதல் அறியாதவர்கள்
நம்மைக் கண்டாலே
காதலெனக் கற்பனையில்…

வண்ணத்துப் பூச்சியே
நீ ஒரு இனம்
நான் ஒரு இனம்
இதை எப்படிக்
காதல் என கற்பனையில்?

இயற்கையின் இயல்பை
இயல்பாகப் பாருங்கள்!

*****

”கூட்டுப்புழுவாய்ப் பிறந்திட்டு வண்ணத்துப் பூச்சியாய் வளர்ந்திட்டுப் பார்ப்பவர் மனத்தைக் கொள்ளையடிக்க உருக்கொண்டேன் நானே!” என்று தன் வரலாறு கூறும் வண்ணத்துப்பூச்சியைக் காண்கின்றோம் திருமிகு. சுதா மாதவனின் கவிதையில்.

வண்ணவண்ண நிறத்தில்
தாவித்தாவிப் பறந்திட்டு
அள்ளஅள்ளக் குறையாத
தேனைத் தான் பருகுவேனே!

கூட்டுப்புழுவாய்ப் பிறந்திட்டு
வண்ணத்துப் பூச்சியாய் வளர்ந்திட்டு
பார்ப்பவர் மனதைக் கொள்ளையடிக்க
உருக்கொண்டேன் நானே!!

மகரந்தச் சேர்க்கை
என் வாழ்வியல் முறையிலொன்று
மணத்தோடு மலர்கள் ஆயிரமாயிரம்
கொட்டிக்கிடக்க ஆனந்தம் தானே!!

பட்டுப்பூச்சிப் பருவத்திலே
எங்களையெல்லாம் கொன்றுவிட்டுப்
பட்டாடை உருவாக்கி
அதைப் பகட்டாகக் கட்டிக்கொள்ளும்
பாரில் நிரம்ப மனிதருண்டே!

எம் இனச் சுழற்சி தொடரத்தான் செய்யும்
உலகச் சுற்றுலா சென்றிட்டே
பசுமையாய் உலகிருக்க
பறந்திடவே நாங்கள் கிளம்பிட்டோம்
வண்ணவண்ண நிறத்தினிலே
தாவிதாவிப் பறந்திட!!!

*****

”பூக்களின் இதயத் துடிப்பைச் சிறகினில் புலம்பெயர்த்த சித்துவித்தைக்காரன் நீ; சருகாகும் பூக்களின் வண்ணங்களை வார்த்து அவற்றுக்குப் புனர்ஜென்மம் கொடுக்கும் பிரம்மனின் தூரிகை நீ” என்று வண்ணத்துப்பூச்சியின் புகழ்பாடுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

பிரம்மனின் தூரிகை

மைபூசித் திருடும் கள்வன்போல்
கார்வண்டு தேன் எடுத்துச் சென்றுவிட
வெள்ளந்தியாக பூவண்ணம் மேனி பூசி
‘வெண்ணெய்’ப் பூச்சியாக நிற்கும் பேதை நீ…

பூக்கடைக்கு விளம்பரம்
தேவையில்லை என்றாலும்
பூவழகைப் புவனிக்குக்
கொண்டு சேர்க்கும் தூதுவன் நீ…

காதலியின் கண் துடிப்பைக்
கண்டுணரும் காதலன்போல்
பூக்களின் இதயத் துடிப்பை – சிறகினில்
புலம்பெயர்த்த சித்துவித்தைக்காரன் நீ….

வாடிச் சருகாகும் பூக்களின்
வண்ணத்தை வார்த்தெடுத்து
புனர்ஜென்மம் கொடுத்துவிடும்
பிரம்மனின் தூரிகை நீயன்றோ!

*****

சுவைக்கத் தெவிட்டாத கற்பனைத் தேனைத் தம் கவிதைகளில் கலந்து கொடுத்திருக்கும் கவிஞர்களை நெஞ்சினிக்கப் பாராட்டி மகிழ்கின்றேன்!

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வுபெற்றிருப்பது…

சிரிப்பூ…

பூவில் தேனெடுக்கப்
புதிதாய்ப்
பழகும் பட்டாம்பூச்சி
புறப்பட்டது தேனைத் தேடி…

பூவில்லாப் பூச்செடியில்
போய் அமர்ந்தது,
மொட்டுகள் மட்டுமே
நிறைந்த செடியில்
கிட்டவில்லை
தேன் அதற்கு,
தேடிச் சென்றது
வேறிடத்தை…

எட்டிப் பார்த்த
பூ மொட்டுக்கு
வந்த
அடக்கமுடியாச் சிரிப்பை
அடக்கிக்கொண்டது!

அடுத்த நாள்தான்
சிரித்தது–
அழகுப் பூவாய்…!

தேனெடுக்கப் புதிதாய்ப் பழகும் பட்டாம்பூச்சி, மொட்டிலே தேனெடுக்கப் பட்டபாட்டையும் அதுகண்டு மொட்டு மலர்ந்து சிரித்த கதையையும் தம் பாட்டில் சுவையாய்ப் பதிவுசெய்திருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *