வாழ்ந்து படிக்கும் பாடங்கள் – 17

0

என்.கணேசன்

கர்வம் என்றும் முட்டாள்தனமே!

வெற்றி மிக இனிமையானது. அதிலும் வெற்றி மீது வெற்றி வந்து சேர்கையில் அது கொடுக்கும் பெருமிதம் அலாதியானது. அது தற்செயலாக வராமல் நம் சிந்தனை, உழைப்பு ஆகியவற்றின் விளைவாக ஏற்படுகிறது என்றால் அந்தப் பெருமிதமும், மகிழ்ச்சியும் நியாயமானதும் கூட. வாழ்க்கையில் நிறைய முன்னேறிய பிறகு, நிறைய சாதித்த பிறகு அந்த நிறைவு கிடைக்குமானால் அதை நாம் பாடுபட்டதற்கான உண்மையான கூலி என்றே கருத வேண்டும். ஆனால் சில சமயங்களில் இதனுடன் இலவச இணைப்பாக ஒன்று வரக்கூடும். அது தான் கர்வம். அதை அவ்வப்போதே களையா விட்டால் அது ஒரு படுகுழியில் நம்மை கண்டிப்பாக ஒரு நாள் தள்ளக் கூடும். ஒரு அருமையான திருக்குறள் உண்டு.

அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை

வியந்தான் விரைந்து கெடும்.

(மற்றவர்களுடன் ஒத்து நடக்காமல், தன் உண்மையான வலிமையின் அளவையும் அறியாமல் தன்னையே வியந்து பெரிதாக எண்ணிக் கொண்டிருப்பவன் விரைவிலேயே அழிந்து போவான்.)

’தன்னை வியந்தான்’ என்ற சொல்லில் திருவள்ளுவர் கர்வம் பிடித்த மனிதர்களை மிக அருமையாக விளக்கி விடுகிறார். கர்வம் பிடித்தவர்கள் அதிகமாகச் செய்யும் வேலை தங்களை எண்ணி வியப்பது தான். அல்லது அவர்களை வியந்து பேசுபவர்களின் வார்த்தைகளைப் பெருமையுடன் கேட்டுக் கொண்டிருப்பது தான். அவர்களால் இந்தத் திருக்குறளில் சொன்னது போல மற்றவர்களுடன் ஒத்து நடக்க முடியாது, அவர்களின் உண்மையான வலிமையின் அளவும் தெரியாது. ஒரு கற்பனைக் கண்ணோட்டத்திலேயே அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விடுவார்கள்.

கர்வத்தால் அழிந்தவர்கள் வரலாற்றின் எல்லா பக்கங்களிலும் அதிகம் பேர் இருக்கிறார்கள். உலகம் இது வரை பார்த்த அத்தனை சர்வாதிகாரிகளும் கர்வம் பிடித்தவர்களே. ஹிட்லர், முசோலினி முதல் இன்றைய கடாஃபி வரை தங்களையே வியந்து ஏமாந்தவர்களே. அவர்களைச் சுற்றிலும் முகஸ்துதி செய்யும் நபர்களை மட்டுமே இருக்க அனுமதித்தவர்களே.  உண்மையான நிலவரத்தை அறியாதது மட்டுமல்ல அதைத் தெரிவிக்க முயன்றவர்களை எதிரிகளாக நினைத்தவர்களாக அவர்கள் இருந்ததாக வரலாறு சாட்சி சொல்கிறது. அழியும் கடைசி மூச்சு வரை கற்பனை உலகத்திலேயே இருந்த அவர்கள் விழித்துக் கொள்ளும் போது எல்லாமே அவர்கள் கட்டுப்பாட்டை விட்டுப் போயிருந்திருக்கிறது.

உதாரணத்திற்காகத் தான் சர்வாதிகாரிகளை மேற்கோள் சொன்னோமே தவிர அந்த அளவிற்கு போவது மட்டுமே என்ற அர்த்தம் கொள்ளாதீர்கள். எந்த அளவிலும் கர்வம் முட்டாள்தனமே. அது பல நேரங்களில் இருப்பவர்களுக்கு இருப்பதே தெரியாமல் தங்கும் மகிமை வாய்ந்தது. அடுத்தவர்களை எல்லாம் அலட்சியமாக வைப்பது, அடுத்தவர்களின் சாதனைகளைக் கண்டு கொள்ள மறுப்பது, தங்களைத் தவிர யாருமே உயர்வாகத் தெரியாதது போன்ற தன்மைகள் எல்லாம் இருந்தால் கர்வம் அங்கிருக்கிறது என்று பொருள். அதனை உடனடியாகக் களைந்து விடுங்கள்.

ஏனென்றால் கர்வம் உண்மையில் ஒரு முட்டாள்தனமே. ஆழமாகச் சிந்திக்க முடிந்தவனுக்குக் கர்வம் கொள்ள முடியாது. கர்வம் என்பது நம்மை பிறருடன் ஒப்பிடும் போது மட்டுமே எழ முடியும். ஒப்பிடாத போது கர்வம் கொள்ள முடியாது. ”அடுத்தவர்களை விட நான் திறமையானவன், நிறைய சாதித்தவன், அதிகச் சக்தி வாய்ந்தவன், அதிகம் வெற்றி கண்டவன், அதிகம் சம்பாதிப்பவன்…” என்பது போன்ற எண்ணங்களே கர்வம் எழ அடிப்படையான காரணம்.

அறிவுபூர்வமாக சிந்தித்தால் அந்த ஒப்பீட்டிலும் ஒரு உண்மையை நம்மால் உணர முடியும். ஒரு சில விஷயங்களில் ஒரு சிலரை விட நாம் நிறையவே முன்னேறி இருக்கிறோம் என்றால் வேறு சில விஷயங்களில் அதே மனிதர்களை விட பின்தங்கி இருக்கிறோம். ஒன்றிற்காகப் பெருமைப்பட்டுக் கொண்டால் இன்னொன்றிற்காக நாம் சிறுமைப்பட்டே அல்லவா ஆகவேண்டும்.

அதே போல் ஒரு விஷயத்திற்காக நாம் நம்மை உயர்வாக நினைத்துக் கொண்டால் அதில் நம்மை விடவும் உயர்வாக இருக்கிறவர்கள் கண்டிப்பாக இருப்பார்களே. அப்படியென்றால் கர்வப்பட என்ன இருக்கிறது? வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நம்மை விட உயர்ந்தவர்களும் என்றும் இருப்பார்கள், நம்மை விடவும் தாழ்ந்தவர்களும் என்றும் இருப்பார்கள். அப்படித் தாழ்ந்தவர்கள் மத்தியில் நாம் உயர்வாகத் தெரிவது இயற்கை. இப்படிப் பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து ஒப்பிட்டுப் பார்த்து விட்டு கர்வம் கொள்வது அறிவின்மையே அல்லவா?

நம் அறிவுபூர்வமான சிந்தனையை மேலும் நீட்டினால் திறமை, உழைப்பு மட்டுமல்லாமல் நம் முன்னேற்றத்திற்கும், வெற்றிக்கும் காரணமாக விதியின் உடன்பாடும் சேர்ந்திருப்பதை நம்மால் அறிய முடியும். சில சமயங்களில் நம்மை விட அதிகத் திறமை இருப்பவர்களும், அதிகமாய் உழைப்பவர்களும் நம் அளவு வெற்றியோ, முன்னேற்றமோ காணாமல் இருப்பதை நாம் சர்வ சாதாரணமாகக் காணலாம். இப்படி இருக்கையில் கர்வம் கொள்வது அறியாமையே அல்லவா?

கர்வம் என்ற இந்த முட்டாள் தனத்திற்கு ஒரு மனிதன் தரும் விலை மிக அதிகம். கர்வம் அடுத்தவரை மதிக்க விடாது; அடுத்தவரை அலட்சியப்படுத்தும். அது மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள அனுமதிக்காது. அது நல்ல அறிவுரைகளை மதிக்கவோ ஏற்றுக் கொள்ளவோ விடாது. அது உள்ளதை உள்ளபடி பார்க்கத் தூண்டாது. அது நண்பர்களை இழக்க வைக்கும்; பகைவர்களைப் பெருக்கி வைக்கும். மொத்தத்தில் கர்வம் நம் வாழ்க்கையில் நன்மைகள் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி, தீமைகள் அனைத்தும் முந்தி நிற்க வைக்கும். இன்னொரு விதத்தில் சொன்னால் ஒரு மனிதன் அழிவதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் அவன் கர்வம் செய்து முடிக்கிறது.

எனவே தன்னம்பிக்கையோடு இருங்கள். ஆனால் அது கர்வமாக மாறி விட என்றுமே அனுமதிக்காதீர்கள். சாதித்தவற்றில் மகிழ்ச்சி அடையுங்கள். ஆனால்

சாதிப்பதே நீங்கள் ஒருவர் தான் என்ற பொய்யான அபிப்பிராயத்தில் இருந்து விடாதீர்கள். கர்வம் தலை தூக்கும் போதெல்லாம் உங்கள் குறைகளையும், உங்களை விட அதிக உயரம் சென்றவர்களையும் நினைவில் கொண்டு கர்வத்தை விலக்கிக் கொள்ளுங்கள். உங்கள் எல்லா மேன்மைகளையும் மங்க வைத்து, உங்களை யதார்த்தத்திலிருந்து விலக்கியும் வைக்கும் கர்வத்தை எதிரியாக எண்ணி அப்புறப்படுத்துங்கள்.

 

கடாஃபி படத்திற்கு நன்றி

முசோலினி படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.