தவறின்றித் தமிழ் எழுதுவோமே!

0

பகுதி -9 இ : ‘கள் ‘ போடலாமா? – நாட்களா? நாள்களா?

பேரா. பெஞ்சமின் லெபோ

சென்ற பகுதியின்  இறுதியில்,

‘கள்’-ஐப் பற்றி இத்தனை  தூரம்/ நேரம்  சொல்லிய பிறகும் நாட்களா? நாள்களா? என்னும் சிக்கலைக் காண அடுத்த பகுதி வரை காத்திருக்க வேண்டும்.

ஆகக் ‘கள்’ -இன் மகிமை இன்னும் தொடர்கிறது. என நிறுத்தி இருந்தேன் .

இப்போது இந்தச் சிக்கலைக்  கொஞ்சம் அலசுவோம்.

‘நாள் கணக்கு நாட்கணக்கு ஆகுமென்றால், நாள் கழிவு நாட்கழிவு ஆகுமென்றால், நாள்கள் தாராளமாக நாட்கள் ஆகலாம்.என ஒருவர் இணைய தளத்தில் எழுதி இருந்தார் :

காண்க :http://www.treasurehouseofagathiyar.net/25300/25380.htm

அதையும் இதையும் கூட்டிக்கழித்து பொத்தாம் பொதுவாகக் கூறப்பட்ட கருத்து இது. இப்படி ஒப்புமை காட்டித் தவறான கருத்தை நிலை நாட்டுவதை வழு  (fallacy ) எனத் தருக்க நூல்  (logic) கூறும். இதற்கு  ‘ the fallacy of unsound analogy’ என்று பெயர். இவர் கூற்று, இந்த வழுவின் பாற்படும்.

தமிழ் இலக்கணமும் இதனை ஏற்காது. முன்பே நான் விளக்கியதைப்  போலப்  புணர்ச்சி இரண்டு சொற்களுக்கு இடையில்தான் நிகழும் என்பதை இவர் மறந்துவிட்டார்.இவர் கொடுத்துள்ள எடுத்துக்காட்டுகளில்

“நாள்’ என்ற சொல் நிலை மொழி ; கணக்கு எனபது வருமொழி.
“நாள்’ என்ற சொல் நிலை மொழி ; கழிவு எனபது வருமொழி..
புணர்ச்சிக்கு இருக்க வேண்டிய இரண்டு சொற்கள் இங்கே உள்ளன. எனவே புணர்சி விதி இங்குச் செல்லும்.
‘ள’கரம் ‘ட’கரமாகத் திரியும் என அறிவீர்கள் ; காட்டு :கள்+குடம்>கட்குடம்
(கள்ளை உடைய குடம் – இரண்டாம் வேற்றுமை  உருபும் பயனும் உடன் தொக்க தொகை ;
நன்னூல்  நூற்பா : ‘ல, ள வேற்றுமையில் தடவும்…  எழுத்ததிகாரம் மெய்யீற்றுப் புணரியல் 227.
புறநானூற்றில், ஔவையார், ‘தேட் கடுப்பன்ன நாட் படு தேறல்’ என்பார்.)

ஆக இவற்றின்  அடிப்படையில்,
‘நாள்’+’கணக்கு’> நாட்கணக்கு ஆகிறது
‘நாள்’+’கழிவு’> நாட்கழிவு ஆகிறது.
இந்த அடிபபடைகள் ‘நாள்’+ ‘கள்’  – உக்கு இல்லை. ஏன் ?
‘நாள்’ – நிலைமொழி ; ஆனால் ‘கள்’ வருமொழி இல்லை, ஏனெனில்  அது பன்மை விகுதிதான், முழுச் சொல் இல்லையே!
ஆகவே,

நாள்+கள் > நாள்கள் என்றுதான் வரும்,  வரவேண்டும். நாட்கள் என எழுதுவது தவறு.
இலக்கண விதிப்படி நாள்கள் என எழுதுவதே சரி என நிறுவினோம்

இலக்கிய வழக்கில்  ?
மேலே குறிப்பிட்ட அன்பர், ‘நாட்கள் என்ற -கள் விகுதி சேர்ந்த பயன்பாடே மிக அண்மைக் காலத்திலிருந்துதான் ஆரம்பித்திருக்கிறது.’என எழுதுகிறார். இதுவும் தவறான கருத்து ஆகும். வழக்கம் போல், கம்பனைப் பார்த்தால், புணர்த்து எழுதாமல்,  ‘கள்’ விகுதி சேர்த்தே எழுதுகிறான் மிகப் பல இடங்களில்  :

65627. வாள்கள் இற்றன இற்றன வரிசிலை வயிரத்
தோள்கள் இற்றன இற்றன சுடர் மழுச் சூலம்
நாள்கள் இற்றன இற்றன நகை எயிற்று ஈட்டம்

தாள்கள் இற்றன இற்றன படையுடைத் தடக்கை.
காண்க : சுந்தர காண்டம் கிங்கரர்  வதைப்படலம் 32
இன்னோர்  எடுத்துக்க்காட்டு:

காண்க : கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம், யுத்த காண்டம்  சிங்கமுகாசுரன் வதைப் படலம்

தாள்களும் கரங்களும் தலையும் சிந்தினர்
கோளுறு தசையொடு குருதி சிந்தினர்
மூளைகள் சிந்தினர் முடியும் கால்பொரப்
பூளைகள் சிந்தின போலப் பூதர்கள்.   246


நீளுறு பதலை சிந்தி நின்றமர் இயற்று கின்ற
கோளரி முகத்து வீரன் குறைந்திடு முடியு இற்ற
தோள்களும் முன்ன ரேபோல் தோன்றிடப் புகுதும் எல்லை
ஆளுடை முதல்வ னாகும் அறுமுகன் அதனைக் கண்டான்.	445



மேலும், வில்லிபாரதம் , திருவிளையாடல் புராணம் ...எனப் பலப் பைந்தமிழ் நூல்களில் 'நாள்கள்' என்ற சொல்லாட்சியைக் காணலாம். 'நாட்கள் ' என்னும் சொல்லாட்சி பழந்தமிழ் இலக்கியம்  எதிலும் இல்லை, இல்லவே இல்லை!
எனவே அண்மைக்கால பழக்கம் இதுவென அந்த அனபர் சொல்லுவது சரியில்லை. இலக்கிய வழக்குப்படியும்' நாள்கள்' என எழுதுவதே முறை.


உலகியல் வழக்கில் ?
'உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே' என்று தொல்காப்பியரும்,
'முன்னோர் மொழி பொருளே அன்றி அவர் மொழியும்பொன்னேபோல் போற்றுவோம்' என நன்னூல் பவணந்தி  முனிவரும் கூறியுள்ளனர்.


அண்மைக்காலத்  தமிழ்  அறிஞர்கள் உயர்திரு தி. முத்துக்கண்ணப்பர், ‘தமிழில் பிழையின்றி எழுதுவது எப்படி?’ என்ற நூலின் ஆசிரியர் . அ.கி.பரந்தாமனார், கலைக்களஞ்சியம் தந்த பெ. தூரன் …’நாள்கள்’ என எழுதுவதே சரி என்று சொல்லி இருக்கின்றனர். இக்காலத் தமிழறிஞர்  பேராசிரியர் கவிக்கோ ஞானச்செல்வன்,

‘நாள்+காட்டி= நாட்காட்டி, நாள்+குறிப்பேடு= நாட்குறிப்பேடு. இவை சரியானவை. ஆனால் நாள்+கள்=நாட்கள்-பிழையுடையது. கள் என்பது இங்கே பன்மை விகுதி மட்டுமே. சொல்லோடு சொல் சேர்ந்தால் புணர்ச்சி விதி வேண்டும். ஒரு சொல்லோடு “கள்’ என்பது சேரும்போது புணர்ச்சி விதி பொருந்தாது. “கள்’ என்பது பெயர்ச் சொல்லாயின் மயக்கம் தரும் ஒரு குடிவகைப் பெயர் என அறிவோம். கள் பழந்தமிழ்ப் பொருள். நாட்கள் எனில் நாள்பட்ட கள்- மிகப் பழைய கள் என்று பொருளாம். நாள் பட்ட கள் “சுர்’ என்று கடுப்புமிக்கதாய் இருக்கும் என்பர் பட்டறிவுடையோர். ஆகவே நமக்கெதற்கு நாட்கள்? நாள்கள் என்று இயல்பாக எழுதுவோமே?’ என்று  முத்தாய்ப்பாயச்  சொல்லி முடிக்கிறார் தம் கட்டுரையில்.

 

காண்க :http://thoguppukal.wordpress.com/2011/09/03/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e2%80%93-15-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9/

 

பேராசிரியர் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் ‘தினமணி’ இதழில்,  ‘பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!’ என்னும் தலைப்பில்  தொடர்ந்து எழுதி வருகிறார்கள்.

இப்படித் தமிழாழம் கண்டவர்களும் தமிழார்வம் கொண்டவர்களும் நமக்கு அறிவுறுத்தும் இலக்கணச் செய்திகளை  உள்வாங்கித் தவறின்றித் தமிழ் எழுதுவோமே! இனியேனும் ‘கள்’ – ஐப் பதமாக,   இதமாகப்  பயன்படுத்திப் பயன்பெறுவோம். 1330 அருங்குறளை  உலகிற்கு அளித்த .திருவள்ளுவரே இரண்டு  இடங்களில்தான் ‘கள்’ -ஐப் பயன்படுத்தி இருக்கிறார். திருக்குறளில் ‘பூதங்கள்’, ‘கீழ்கள்’ என்ற சொற்களில் மட்டுமே ‘கள்’ -ஐக் காண முடியும். அவை எந்தக் குறள்கள் எனத்  தேடிப்பாருங்களேன் .’கள்’ -உக்கு இத்துடன் விடை கொடுப்போம்!

அடுத்து, ‘இதுவா?’,  ‘அதுவா?’ எனத் தீர்மானிக்க இயலாத சொற்கள் – வௌவால் சொற்கள், இலாங்கு மீன் சொற்கள’ – சில உண்டு. அவற்றை  அடுத்த மிகுதியில் பாக்கலாம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *