அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (02.08.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “படக்கவிதைப் போட்டி – 269

 1. சுமை

  உச்ச வெயில்
  உச்சம் தொடும் வேளை
  உச்சந்தலையில் கூடைச்சுமை
  வச்சு நடக்கும் காளையே!
  தலைச்சுமைகளைத்
  தாங்கித் தாங்கித்தான்
  தலையாயக்
  குடும்பச் சுமையைக் குறைக்கின்றாயோ!
  தலைச்சுமைகள்
  தாங்கும் உழைப்பே
  தலைவிதியென்று
  தளர்ந்து விடாதே!
  தலைச் சுமை தாங்கும்
  உடல் பலம் உள்ளதேயென்று
  உவகை கொள்.
  தலைக்கனமில்லா
  உழைப்புடன்
  தலைமேல் கனம்.
  அது
  தன்னம்பிக்கையின்‌ அடையாளம்!‌.
  இன்றைய‌
  சுமைகளே
  நாளைய
  சுகங்கள்!

  கோ சிவகுமார்
  மண்ணிவாக்கம்
  சென்னை

 2. படக்கவிதைப்போட்டி -269

  நெய்தல் நிலம்

  சுட்டெரிக்கும் சூரியக்கோடை
  இவன் பிரத்யேகம்.
  உவக்கும் சொட்டுகளை
  வெள்ளை பூக்களாக்கும்
  மந்திர தொழில் இவனது.

  ரெண்டு நாளாய்
  நல்ல மழை.
  காகிதம் போல்
  காய்ந்த குடிசை
  போனது கடல் நோக்கி.
  வேறெங்கு போக?
  கதியே கடல்.

  வேலைக்குத் திரும்பினான்.
  பாத்தி பாத்தியாக
  பங்கிடப்பட்டு கிடந்தது
  இவன் வாழ்வு.

  நடக்கிறான்…உழைக்கிறான்…
  ஆற வாய்ப்பில்லா
  தன் பெருவிரல்
  கீறல் காயங்களுடன்
  ஒற்றைக்கூடையில்
  ஒட்டுமொத்தமாய்
  யார் யார் வீட்டு
  உப்புகற்களையோ சுமந்தபடி.

  —ரா.விஜயகுமாரி
  திசையன்விளை
  திருநெல்வேலி.

 3. துணிவும் அச்சமும்…

  உச்சி வெயிலில் வேர்த்தொழுக
  உப்புச் சுமையை ஏற்றியேதான்
  துச்சமாய்த் துன்பம் துடைத்திடவே
  துணிந்தே பணியைச் செய்வதெலாம்,
  பச்சிளம் பிள்ளையும் பசியாறப்
  பொருட்கள் வாங்கிச் சென்றிடத்தான்,
  அச்சமும் உண்டு மழைவந்தால்
  அந்தப் பிழைப்பும் போய்விடுமே…!

  செண்பக ஜெகதீசன்…

 4. கல்லுப்பு காயங்கள்..!

  கல்வியைவிட கல்லுப்பு
  கடிதென அறியவில்லை

  காலமோடினாலும் கட்டைவிரல்
  காயங்கள் ஆறுவதேயில்லை

  உப்பளங்களில் தொலைந்த
  வைரக்கல் மின்னுவதேயில்லை

  எட்டாக வளைந்தாலும்
  ஏழையை எழவிடுவதில்லை

  சட்டையில்லா உடம்பில்
  கல்லுப்பை மட்டுமில்லை

  கடலையே சுமந்தாலும்
  வறுமையே வாழ்வினெல்லை…

  – புவிதா அய்யாதுரை

 5. படக்கவிதைப் போட்டி 269

  தேக்குமரக்கைகள் தாங்கிப் பிடிக்கும் கூடை
  தேகம் பலமென்று தெரிவித்ததே
  வானத்தை நீ விற்க்கிறாயோ
  வாரி வாரி கூடை வழிய
  தெருத்தெருவாய் சுற்றி விற்பவரோ
  தெரிந்தவர்க்கு மட்டும் கொண்டு சேர்ப்பவரோ
  அழுக்கேறிய உன் தலைப்பாகை
  அதுவும் உனக்கோர் அழகுதான்
  வியர்வையிலே துவைத்தெடுத்து
  விண்ணில் பறக்க விடுவாயோ
  பதிலை சொல்லு முதியவரே
  வழி நெடுக நடப்பவரே
  பெருத்த வியாபாரம் செய்வீர்
  வசதியாய் வளர்ந்து வாழ்வீர்!!!

  சுதா மாதவன்

 6. மாறாத விதி
  தலைச்சுமை உழைப்பாளி
  வியர்வையின் முதலாளி
  நியாயமான ஊதியம்
  காணாத ஏமாளி
  யார் அறிவார் அவன் வலி

  மூன்றில் ஒரு பங்கு ஊதியமே
  தருவதில் இல்லை நியாயமே
  மீதமுள்ள இரண்டு பங்கு
  செல்லுமிடம் வேறு எங்கு

  நேற்று இன்றா இந்த சுரண்டல்
  தொன்றுதொட்டு வரும் பிரண்டல்
  உப்பு மீது வரி
  தப்பு என்று
  கண்டித்து தானே
  தண்டி யாத்திரை
  ஐம்பதாய் ஆரம்பத்தில் ஆசிரம சீடர்கள்
  லட்சம் தாண்டி லட்சியத்தில் இறுதியில்

  உப்பு மூலம் உருவான சுதந்திர போராட்டம்
  தப்புக்கு தடை போடும் சுதந்திரம் வரட்டும் விரட்டும்
  எதிர்பார்த்த கூட்டம் ஏமாற்றத்தின் உச்சகட்டம்
  அந்த கூட்ட்த்தின் ஒருவன் இவன் தலையில் அதே உப்பு
  அந்த வெள்ளைக்கூட்ட்த்தை மிஞ்சுகிறதே கொள்ளைக்கூட்டம்

  சுதந்திர காற்று சுவாசித்த போதும்
  உழைப்பை உறிஞ்சிம் நச்சுக் காற்று
  அனல்காற்றாய் வீசும்நிலை இந்த நிலை

  உலகிலேயே முதல் அயோக்கியத்தனம்
  வியர்வை சிந்தும் உழைப்பு
  உரிய ஊதியம் அரிதாகப் போவதே

  அயோக்கியத்தனத்தில் முதலிடமா
  அன்னை பாரதமே

  உழைப்பவன் வியர்வை
  கேட்கிற பார்வை
  தீர்வை கண்டால்
  நியாத்தின் சத்தியத்தின்
  போர்வையில் பயணிக்கிறாய்…..

 7. ஏமாற்றம்

  உப்பாளத்தின் வெப்பத்திலே
  கொப்பளம் கொண்ட கால்கள்!
  அப்பாளமாய்க் காய்ந்துவிட்டப்
  பொத்தலான தேகம்…

  சொத்துபத்து ஏதுமில்லை
  உழைப்பு ஒன்றே சொந்தம்
  ஓயாமல் உழைத்த போதும்
  மழையில் கரைந்த உப்பாய்
  ஊதியமும் கரைந்து போகும்
  விலைவாசியெனும் முகிலால்

  கூடைக்கூடையாகத் திட்டம்
  கூவிக்கூவிச் சொன்னார்
  ஏழைக் கூடை ஏறவில்லை
  ஏமாற்றம் மட்டும் மிச்சம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *