கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 14

0

-மேகலா இராமமூர்த்தி

இராமனைக் கண்டு காமம் மீதூரப் பெற்ற சூர்ப்பனகை, என்னுடைய இயல்பான கோர பயங்கர வடிவத்தோடும், கோணல் பற்களோடும், எல்லா உயிரினங்களையும் உண்டுசெரித்த பெரிய வயிற்றோடும் இவ் அழகன்முன் சென்று நின்றால் என்னை இவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஆதலால், கொவ்வைச் செவ்வாயும், குயில்போன்ற கொஞ்சு மொழிகளும் மயிலொத்த சாயலும் உடையவளாய் ஒயிலாகச் சென்றால் நம்மை ஏற்றுக்கொள்வான் என்றெண்ணினாள். தன் விருப்பம் நிறைவேறும் பொருட்டுத் திருமகளைத் தியானித்து அவளுடைய மூலமந்திரத்தை உள்ளத்தில் செபித்தாள். என்ன ஆச்சரியம்! வியத்தகுமுறையில் அவள் தோற்றம் மாற்றம் கண்டது. காண்போரை மயக்கும் பேரழகுப் பதுமையாய் அவள் நின்ற கோலத்தின் புதுமையை என்னென்பது!

அப்பேரெழில் உருவொடு அவள் நடைபயின்ற அழகை மெல்லோசையில் கம்பர் வருணிப்பதோ அவளினும் அழகாயிருக்கின்றது!

செம்பஞ்சும், ஒளிர்விடும் செழித்த தளிர்களும் வருந்தும்படி, சிறந்த அழகமைந்த தாமரைநிகர் சீறடிகள் உடையவளாய், அழகியசொல் பேசுகின்ற இள மயில்போலவும், அன்னம்போலவும், வஞ்சிக்கொடிபோலவும், நஞ்சனைய வஞ்சமகளாகிய சூர்ப்பனகை இராமனைச் சந்திக்க நடைபயின்று வந்தாள் என்கிறார் கம்பர்.

பஞ்சிஒளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்க
செஞ்செவிய கஞ்சம்நிகர் சீறடியள் ஆகி
அஞ்சொல்இள மஞ்ஞைஎன அன்னம்என மின்னும்
வஞ்சிஎன நஞ்சம்என வஞ்சமகள் வந்தாள்
. (கம்ப: சூர்ப்பனகைப் படலம் – 2859)

மயில் அவளுடைய சாயலுக்கும், அன்னம் அவளுடைய நடையழகுக்கும் உவமைகள் ஆயின. இங்கே பல உவமைகள் இவ்வாறு மாலை தொடுத்ததுபோல் தொடர்ந்து வருவதால் இப்பாடலை மாலையுவமை அணிக்குச் சான்றுகாட்டலாம்.

கம்பர் படைத்த இராமாயணத்தில்தான் கோரவடிவு கொண்ட சூர்ப்பனகை அழகிய பெண்ணாய் உருமாறி, ‘காமவல்லி’ என்று பெயர்மாறி இராமனைச் சந்திக்கச் செல்கின்றாள். ஆனால் வால்மீகி சூர்ப்பனகையை அரக்கி வடிவிலேயே இராமனைச் சந்திக்க வைக்கின்றார். அவள் இராமன்மீது கழிகாமம் கொண்டு பேசுகின்றாள். இராமன் அவள் மனப்போக்கை உணர்ந்துகொண்டாலும் தொடக்கத்தில் அவளைக் கடிந்துகொள்ளாமல் அவளுக்கு ஏற்றவகையிலேயே உரையாடுகின்றான். ஒருகட்டத்தில் விளையாட்டு வினையாக மாறத்தொடங்கவே, அவளைத் தண்டிக்குமாறு இளவல் இலக்குவனை ஏவுகின்றான். அவனும் சூர்ப்பனகையை உறுப்பறை (உறுப்புக்களைச் சிதைத்தல்) செய்கின்றான்.

இனிக் கம்பராமாயணத்தில் சூர்ப்பனகை இராமன் சந்திப்பு எவ்வாறு அமைந்திருக்கின்றது என்று காண்போம்.

பேரெழில் உருவொடு இராமனருகே சென்றாள் சூர்ப்பனகை. அவளைக் கண்ட இராமன், ”எவ்வுலகிலும் காண்டற்கரிதான அழகமைந்த இப்பெண்மணி யார்?” என்று வியப்போடு நோக்குகின்றான்.

மான்விழிகொண்ட மயிலாய் வந்த சூர்ப்பனகை இராமனை வணங்கிவிட்டுச் சற்றே நாணங்கொண்டவளாய் ஒதுங்கிநிற்கிறாள்.

”நின்வரவு தீதில் வரவாகுக!” என்று அவளை வரவேற்ற இராமன், ”உன் ஊரென்ன? பெயரென்ன? உறவினர் யார்?” என்று வினாக் கணைகளைத் தொடுக்கின்றான் அடுத்தடுத்து!

”நான் தாமரைப் பூவைத் தன் இருப்பிடமாகக் கொண்ட பிரமனுடைய புதல்வன் புலத்தியரின் மகனான விச்சிரவசின் மகள்; முப்புரங்களை எரித்தழித்த, காளைமீது ஊர்ந்துசெல்கின்ற சிவபிரானின் நண்பனான குபேரனின் தங்கை; எட்டுத்திசைகளிலுமுள்ள யானைகளின் வலி தொலைத்தவனும், கயிலை மலையைத் தன் கையால் எடுத்தவனும், மூவுலகுக்கும் காவலனாகத் திகழ்பவனுமான இராவணனின் தங்கையும் ஆவேன்; என் பெயர் காமவல்லி” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்வி முப்புரங்கள் செற்ற
சேவலோன் துணைவன் ஆன செங்கையோன் தங்கை திக்கின்
மாஎலாம் தொலைத்து வெள்ளிமலை எடுத்து உலகம் மூன்றும்
காவலோன் பின்னை காமவல்லி ஆம் கன்னி என்றாள்.
(கம்ப: சூர்ப்பனகைப் படலம் – 2867)

பிரமனுடைய மகன் புலத்தியன்; புலத்தியனின் மகன் விச்சிரவசு; அவனுடைய மகள் சூர்ப்பனகை. ஒருவரை மணஞ்செய்துகொள்ள வேண்டும் எனும் விருப்பமுடையோர் தம்முடைய மூன்று தலைமுறைகளையும் கூறி அறிமுகம் செய்துகொள்வது அக்கால வழக்கம். அவ்வகையில் தன்னை இராமனிடம் அறிமுகம் செய்துகொண்டதன் மூலம் தன் மண(ன)க்குறிப்பையும் சூர்ப்பனகை வெளியிட்டாள் என்று கொள்ளலாம்.

இலங்கையை முதலில் ஆண்டுகொண்டிருந்தவன் குபேரனே. இராவணன் அவனைத் துரத்திவிட்டு, இலங்கையைத் தனதாக்கிக் கொண்டான். அதன்பின்னர்ச் சிவனைக் குறித்துத் தவம்செய்து அவருடைய நண்பனானான் குபேரன். கொடுத்துச் சிவந்த கரங்களை உடையவன் எனும் பொருளில் அவனைச் ’செங்கையோன்’ என்கிறாள் சூர்ப்பனகை.

”அரக்கன் இராவணனின் தங்கையெனில் இவ்வழகிய உருவை நீ பெற்றது யாங்ஙனம்?” எனச் சூர்ப்பனகையை ஐயுற்றுக் கேட்கின்றான் இராமன்.

உடனே சுதாரித்துக்கொண்ட சூர்ப்பனகை, ”மாயங்கள் செய்வதில் வல்ல அரக்கர்களோடு நான் கூட்டுறவு வைத்துக் கொள்வதில்லை. இவ்வழகிய வடிவம் தவஞ்செய்து நான் தேவர்களிடம் பெற்ற வரத்தால் கிடைத்ததாகும்” என்று பொய்யுரைத்தாள்.

மெல்ல மெல்ல இராமன்மீது தான் கொண்டிருக்கும் மண விருப்பத்தை உரைக்கத் தொடங்கினாள் சூர்ப்பனகை. ”நீதிநெறி அறியா அரக்கி இவள்! ஏதோ தீய நோக்கத்துடனேயே இங்கே வந்திருக்கின்றாள்” என்பதை இராமனின் உள்ளம் அப்போது உணர்ந்தது. எனினும், அவளுடனான உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், அதனைத் தொடர்வதிலேயே ஆர்வம் கொண்டவனாய் இராமனைக் கம்பர் சித்திரித்திருக்கக் காண்கிறோம்.  இச்சித்திரிப்பு, பிற பெண்டிரை நயவாத அவன் பேராண்மைக்குப் பெருமை சேர்ப்பதாய் இல்லை.

இனி அவர்களுடைய உரையாடலின் தொடர்ச்சியையும் செவிமடுப்போம்!

சூர்ப்பனகையின் வரலாற்றை அறிந்த இராமன், ”அழகியே! நீயோ (புலத்தியர் மரபில் வந்த) அந்தணர்குலப் பாவை; நானோ அரச மரபில் வந்தவன். எனவே நாம் மணத்தல் முறையன்று!” என்றான் கேலியாக.

சூர்ப்பனகையும் விடவில்லை! ”என் தந்தை அந்தண மரபில் வந்தாலும் தாய் சாலகடங்கர் எனும் அரச மரபில் வந்தவள்; எனவே, என்னை நீ கந்தர்வ மணம் புரிந்துகொண்டால் விண்ணுலக தேவரும் மண்ணுலக அரக்கரும் உனக்கு ஏவல் செய்வர்!” என்றாள்.

பயனற்ற இவ் உரையாடல் தேவையின்றி நீண்டுகொண்டிருந்த வேளையில் பன்னசாலையின் உள்ளிருந்த சீதை அன்னநடையிட்டு வெளியில் வந்தாள்.

அவளைக் கண்ட சூர்ப்பனகை இராமன்மீது பதித்திருந்த தன் பார்வையை விலக்கிச் சீதையையே வெகுநேரம் வியப்போடு உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தாள். ”அழகுக்கு ஒரு வரையறை இல்லை எனும்படியாக அல்லவா இவள் விளங்குகின்றாள்! இவளைக் கண்ட கண்கள் வேறொரு பொருளில் செல்லா! கண்கள் மட்டுமா? கருத்தும் அப்படித்தான்! பெண்ணாகப் பிறந்த என் நிலையே இப்படியென்றால் ஆடவரின் நிலை என்னவோ?” என்று சிந்தித்துத் திகைத்தாள்!

பண்புஉற நெடிதுநோக்கி படைக்குநர் சிறுமைஅல்லால்
எண்பிறங்கு அழகிற்கு எல்லை இல்லைஆம் என்றுநின்றாள்
கண்பிற பொருளில் செல்லா கருத்துஎனின் அஃதே கண்ட
பெண் பிறந்தேனுக்கு என்றால் என்படும் பிறருக்கு என்றாள்.
(கம்ப: சூர்ப்பனகைப் படலம் – 2888)

”பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ?!” என்று கவியரசு கண்ணதாசன் ’மாலையிட்ட மங்கை’யை வருணித்துப் பாட்டெழுதியது இப்பாடலின் தாக்கத்தினால்தானோ?

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

  1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
  2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
  3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
  4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.