பணத்தால் என்ன பயன்?

பொ.கருணாகரமூர்த்தி
அன்புடன் அண்ணா கண்ணன் அவர்களுக்கு,
பொருட்களை மீள்பயன்படுத்துவது எப்படி என்பது தொடர்பாக தங்கள் தாயாருடன் செய்துகொண்ட பயனுடைய செவ்வியை இன்று பார்த்தேன்.
நான் சீருந்துச் சாரதியாக ஊழியம் செய்த காலத்தில் என் வாடிக்கையாளப் பெண்மணியிடம் பெற்றுக்கொண்ட என் அனுபவமொன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். இது ‘பெர்லின் நினைவுகள்’ நூலிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இனி என் அனுபவம்:
ஒருமுறை லேசாக ஒரு பக்கம் சாய்ந்தபடி கைத்தடி ஒன்றை ஊன்றிக்கொண்டு வந்த ஒரு வயதான மாது, வண்டியுள் ஏறிய பின்னாலும் காலைச் சரியாக மடித்து வைத்து உட்காரச் சிரமப்பட்டார்.
ஆசனத்தின் பட்டியைப் பொருத்துவதற்கு அவருக்கு உதவி செய்துவிட்டு பெருகிய அனுதாபத்தில்,
“ஏதோ ஆக்ஸிடென்ட் ஆயிடிச்சுப் போல…” என்றேன்.
“ஜா……. என் துர் அதிஸ்டம்.”
“எப்போ….?”
“ இப்போ ஆறு மாசந்தான்.”
“ எப்படி நடந்துச்சு…? ”
“ சைக்கிளில்ல என் பாட்டுக்கு வீதியில ஓரமாய்ச் சென்றுகொண்டிருந்தேனா.”
“…ம்.”
“ நிறுத்தப்பட்டிருந்த காரொன்றின் பக்கமாகச் சென்றபோது அதற்குள் இருந்து Penner (பேமானி) எதையும் கவனியாமல் திடீரெனக் கதவைத் திறந்தான். நான் வந்த வேகத்தில் அந்தக் கதவு நெற்றிமுகமாக என் முழங்கால் சிரட்டையிலே அடித்ததிலே அது சிதறிப்போச்சு. இப்போது அதை அகற்றிவிட்டு பிளாஸ்டிக் சிரட்டை பொருத்தியிருக்கிறார்கள். ஒரு மாதம் ஆஸ்பத்திரியில் கிடந்தேன்.”
“அடப்பாவமே.”
இயல்பாகவே நான் யாருடன்தான் கதைத்தாலும் கதைக்கிற விஷயங்களை விடவும், எதைக் கதைக்கக் கூடாதென்பதில் ஜாக்கிரதையாக இருப்பேன். அன்று என் நாக்கில் ஏறியிருந்த ராகுவோ, சனியனோ ஏதோவொன்று “விபத்து நிவாரணம்……. இழப்பீடென்று நிறையப் பணங்கிடைத்திருக்குமே……” என்கிறது.
அவர் பதினைந்து விநாடிகள் மௌனமாக இருந்தபோதுதான் ‘வேண்டாத விஷயம்’ ஒன்று தொடப்பட்டது புலர்ந்தது.
மௌனம் கலைந்த அம்மணி கதைக்கத் தொடங்கினார்.
“நான் அந்த விஷயத்தில் அதிஷ்டக்காரியாக இருக்கவேணும். வாழ்க்கையில் பணம் இல்லையென்று என் காரியங்கள் ஒன்றும் என்றைக்குமே ஆகாமல் போனதில்லை. எப்போதும் என்னிடம் பணம் நிறைவே இருந்திருக்கிறது, இருக்கிறது. என்றைக்குமே நான் பணத்தைத் தேடி அலைந்தவளுமல்ல. இழப்பீட்டுக் காப்புறுதியிலிருந்து வேறு இப்போது எழுபதினாயிரம் மார்க்குகள் என் வங்கிக் கணக்கில் ஏற்றியிருக்கிறார்கள். காலத்திலேயே செகன்ட் ஹான்ட் பஜாரில்தான் என் உடுப்புகளை வாங்குவேன். அப்படி எளிமையாக வாழ என்னைப் பழக்கப்படுத்திக் கொண்டவள் நான். வயசான காலத்தில் பணத்தை இடுப்பில் சொருகிக்கொண்டு நானென்ன ‘றொக்’ டான்ஸா ஆடமுடியும்…… டாய்லெட் க்ளோவில் குந்துவதே எவ்வளவு சிரமம் தெரியுமா…… எனக்கு வேண்டியதெல்லாம் என் ஆரோக்கியம். என் வயசான காலத்தில் பிறருக்குத் தொந்தரவு தராமல் என் காரியங்களை நானாகவே கவனிக்க முடியும்படியான ஒரு தேகம். அன்றைக்கு இந்தக் காலையே எடுக்கவேண்டியிருந்தது என்றால் இரண்டு இலக்ஷம் மார்க்குகள் அதிகமாகவே கிடைத்திருக்கும். மனிஷருக்கு வேண்டிய காலத்தில்… வேண்டிய வகையில் உதவ முடியாத இலக்ஷங்களெல்லாம் சும்மா வெறும் இலக்கங்கள்தான். இவ்வளவு பணத்தையும் எடுத்துக்கொண்டு என் முழங்காலை பழையபடி எனக்குத் தரக்கூடிய ஒரு மீட்பனை யாராலும் என்னிடம் அழைத்துவர முடியுமா?”
என்னைப்போல் இப்படி எத்தனை பேர்தான் அவர் இரணத்தில் எலுமிச்சை பிழிந்தார்களோ, மனுஷியின் நியாயமான கோபத்தின் முன் நான் வார்த்தைகளாலும் பயன் இழந்தேன். எந்தப் பதில்தான் அவருக்குச் சாமாதானத்தைத் தந்துவிடும்?
ஆரோக்கியம் எத்தனை பெரிய ஐஸ்வர்யம் என்பது அதை இழக்கும்போதுதானே புரிகிறது. என் கேள்வியின் அபத்தம் மிகையாக உறைத்தது. மௌனமாக இருப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை.
நன்றி.
பிரியமுடன் தங்கள்
பொ.கருணாகரமூர்த்தி