அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 22 (மறுகிற் பெண்டிர்)
ச. கண்மணி கணேசன் (ப.நி.),
முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்,
ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.
முன்னுரை
அகஇலக்கியத்தில் ஊர்ப்பெண்டிர், சீறூர்ப் பெண்டிர், அயலில் பெண்டிர், சேரிப்பெண்டிர், முதுபெண்டிர், முதுவாய்ப் பெண்டிர், நல்கூர் பெண்டிர், அரியல் பெண்டிர், கெடுமகப் பெண்டிர், ஆளில் பெண்டிர், மறுகிற் பெண்டிர் என பலதரப்பட்ட பெண்டிர் இடம் பெற்றுள்ளனர். சேரிப் பெண்டிர் சிறுபாத்திரத் தகுதி பெற்றமை பற்றி முன்னர்க் கண்டோம். இக்கட்டுரையில் மறுகிற் பெண்டிர் பற்றிக் காண்போம்.
தெருப்பெண்டிர்
மறுகு என்பது தெருவைக் குறிக்கிறது. தலைவி வசிக்கும் தெருவில் தாமும் வசிக்கும் பெண்கள் மட்டுமே ‘மறுகிற் பெண்டிர்’ என்ற தொடரால் சுட்டப்படுகின்றனர். ஒரே ஒரு பாடலில் மட்டும் இடம்பெறும் இத்தொகைப் பாத்திரம் பேசியமை பற்றித் தோழி உரைப்பதால்; சிறுபாத்திரத் தகுதி உடையதாகிறது.
அம்பல் என்னும் அகஇலக்கியக் கலைச்சொல்லுக்கு விளக்கம் தரும் பாத்திரமாக அமைவதே இதன் சிறப்பாகும்.
“சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
மறுகிற் பெண்டிர் அம்பல் தூற்றச்
சிறுகோல் வலந்தனள் அன்னை” (நற்.- 149)
தெருவில் பெண்கள் சிலரும் பலருமாகக் கூடிக்கூடிப் பேசுகின்றனர். ஒருவருக்கு ஒருவர் கடைக்கண்ணால் ஜாடை காட்டுகின்றனர். இன்னார்… இப்படி… என்று எல்லோர்க்கும் கேட்கும்படி வாய்விட்டுப் பேசாமல் கிசுகிசுக்கின்றனர். அப்படிப் பேசும் போது இயல்பாக அமையும் அவரது உடல்மொழி பற்றிய புனைவு தொகைஇலக்கியத்தின் நடப்பியல் பாங்கைத் தெளிவுறுத்துகிறது. மூக்கின் உச்சியைச் சுட்டுவிரல் சேர்வது கட்புல உருக்காட்சியாக அமைந்து அழகூட்டுகிறது.
அம்பலுக்கும் அலருக்கும் இடையிலுள்ள நுட்பமான வேறுபாடும் இதே பாடலில் விளக்கம் பெறுகிறது. அன்னை மகளைக் கோலால் அடிக்கும் கொடுமையைச் சகிக்க முடியாத தோழி; தலைவனோடு உடன்போக்கை வற்புறுத்தி;
“நடுநாள் வருஉம் இயல்தேர்க் கொண்கனொடு
செலவயர்ந் திசினால் யானே
அலர் சுமந்து ஒழிக இவ் அழுங்கல் ஊரே” (மேலது).
எனத் தூண்டுகிறாள். ‘அவனுடன் சென்றுவிட்டால் அதன் பிறகு இவ்ஊர்மக்கள் எல்லோரும் வாய்விட்டு வெளிப்படையாகப் பேசுவர். அந்த ஆரவாரம் மிக்க அலரோடு அவர்கள் ஒழியட்டும்’ என்கிறாள் தோழி.
முடிவுரை
ஒரு பெண்ணின் களவுக்காதல் பற்றிக் கௌவை(பழி) தோன்றினும்; அதை அம்பலாக மட்டுமே பரிமாறிக் கொள்கின்றனர் மறுகிற்பெண்டிர். அக்காதலில் மெய்யுறு புணர்ச்சி நிகழ்ந்ததாகத் தெரியும் போதும்; உடன்போக்கு மூலம் கற்புவாழ்வாக மாறும் போதும் அலர் தூற்றுகின்றனர்.