குறளின் கதிர்களாய்…(327)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்...(327)
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தத்
தகுதியான் வென்று விடல்.
– திருக்குறள் – 158 (பொறையுடைமை)
புதுக் கவிதையில்...
செல்வம் கல்வி இவற்றின்
பெருக்கால் வந்த
செருக்கால்
தீங்கு தமக்குச் செய்வோரை,
அவர் போல்
தீங்கு ஏதும் செய்யாமல்
தம் பொறுமை என்னும்
தகுதியால் வென்று விடுக…!
குறும்பாவில்...
இறுமாந்து தீங்கு செய்தோரை
எதிர்த்துத் தீங்கு செய்யாமல் பொறுமையெனும்
தகுதியால் வென்றிடுக…!
மரபுக் கவிதையில்...
பெருகிடும் செல்வம் கல்வியினால்
பெற்றிடும் செருக்கால் இறுமாந்தே
தருவர் நமக்குத் தீங்கதுவே,
தக்க பதிலடி கொடுக்கவவர்
வருந்தத் தீங்கு செய்யாமல்
வாழ்ந்து காட்டு பொறுமையெனும்
பெருமை மிக்கத் தகுதியினால்
பெற்றே அவரிடம் வெற்றியையே…!
லிமரைக்கூ..
வந்திடும் செருக்கு மிகுதியால்,
தீங்கதனால் செய்வோரை ஒறுக்காதே வென்றிடு
பொறுமை என்னும் தகுதியால்…!
கிராமிய பாணியில்...
வேணும் வேணும் பொறுமவேணும்,
வாழ்க்கயில செயிக்கணுண்ணா
வேணும் வேணும் பொறுமவேணும்..
காசுபணம் அதிகமாத்தான்
சேந்துண்ண கெவுறுவத்தில
நமக்கு ஒருத்தன் கெடுதிசெஞ்சா,
அவன செயிக்க
பொறுமங்கிற ஒரு தகுதியே
போதுமானது..
அதால
வேணும் வேணும் பொறுமவேணும்,
வாழ்க்கயில செயிக்கணுண்ணா
வேணும் வேணும் பொறுமவேணும்…!