இலக்கியம்கவிதைகள்

வாடும் நிலை போயகல வந்து நிற்பாய் தீபாவளி!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண், ஆஸ்திரேலியா

வண்ண வண்ண மத்தாப்பு
வகை வகையாய்ப் பட்டாசு
எண்ண வெண்ண நாவூறும்
இனிப்பு நிறை பட்சணங்கள்
கண் எதிரே உறவினர்கள்
கலகலப்பைக் கொண்டுவர
மண்மகிழ மனம் மகிழ
மலர்ந்து வா தீபாவளி  !

பெருநோயின் தாக்கத்தால்
பெருந்தாக்கம் விளைந்திருக்கு
தெருவெல்லாம் களையிழந்து
உருவுடைந்து நிற்கிறது
வருங்காலம் தனையெண்ணி
மக்கள் மனம் தவிக்கிறது
வாடும் நிலை போயகல
வந்து நிற்பாய் தீபாளி  !

புத்தாடை மனம் இருக்கு
புதுத்தெம்பு வரவேண்டும்
சொத்தான சுற்றமெலாம்
சுகங்காணும் நிலை வேண்டும்
நித்தியமாய் வாழ்நாளில்
நிம்மதியும் வர வேண்டும்
நீள் சுகத்தைச் சுமந்தபடி
நீ வருவாய் தீபாவளி  !

மனக் கலக்கம் போக்குதற்கு
வழிகொண்டு வந்துவிடு
மாசகன்று மருள் அகல
வரங்கொண்டு வந்துவிடு
மனை எல்லாம் மங்கலங்கள்
மீண்டும் வர வந்துவிடு
மனமகிழ விருந்து தர
வந்து நிற்பாய் தீபாவளி  !

உளமுடைந்து நிற்போர்க்கு
உயிர்ப்பூட்ட வந்துவிடு
வளமிழந்து நிற்பாரை
நிலையுயர்த்த வந்துவிடு
நிலமெங்கும் நிம்மதியே
நிலவிவிட வந்துவிடு
நலன்மிக்க செய்தியுடன்
வந்துநிற்பாய் தீபாவளி !

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க