விழியனின் இரு நாவல்கள் – ஒரு பார்வை

8

ராமலக்ஷ்மி

ramalakshmiஇன்றைய குழந்தைகளுக்குக் கணினி விளையாட்டுகள், கார்ட்டூன் படங்கள் இவையே பிடித்தமான பொழுது போக்குகளாகி வருகின்றன. அதே கணினியும் தொலைக்காட்சிப் பெட்டிகளுமே பெரியவர்களின் நேரத்தையும் ஆக்கிரமித்துக்கொண்டு வருகையில் வாசிப்பை எப்படிக் குழந்தைகளிடம் வளர்ப்பது? தாமும் மாறி, குழந்தைகளுக்கும் வாசிப்பை ஒரு விருப்பமான பொழுதுபோக்காக மாற்ற வேண்டியது பெற்றோரின் அத்தியாவசியக் கடமைகளில் ஒன்றாகிறது.

பாடப் புத்தகங்கள் அறிவை வளர்க்குமெனில் நல்ல குழந்தை இலக்கியங்கள் நாளைய உலகை எதிர்கொள்ளத் தேவையான நேர்மையை, மன வலிமையை, நற்பண்புகளை, நல்ல பழக்க வழக்கங்களை வளர்க்கும். மொழி வளம், கற்பனைத் திறன் பெருகும். பிழையற்ற தமிழ் வசமாகும்.

குழந்தைப் பருவத்தில் கோகுலம், அம்புலிமாமா, ரத்னபாலா, பாப்பா மலர், அணில் மற்றும் சாகசங்கள் நிறைந்த காமிக்ஸ்கள் எனப் புதியதோர் மாய உலகுக்குள் நம்மை கட்டிப் போட்ட கதைகள்தாம் எத்தனை? நல்ல நல்ல குழந்தை இலக்கியங்களைத் தேடித் தேடி வீட்டுப் பெரியவர்கள் வாங்கித் தந்தார்கள். இதோ நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு வாங்கித் தர, பள்ளிச் சிறுவர்களை மனத்தில் கொண்டு, அற்புதமான இரு நாவல்களைப் படைத்திருக்கிறார், கவிஞரும் எழுத்தாளரும், பதிவரும் புகைப்படக் கலைஞருமான விழியன் என்ற உமாநாத்.

***

vizhiyan book

நாவல் 1: காலப் பயணிகள்

ஒரே தெருவில் குடியிருக்கும் நான்கு மாணவர்கள் வினய், ராகவ், ப்ரீதா, ஆர்த்தி. இதில் சிறுமியர் இரட்டையர்கள். நல்ல நண்பர்களான இவர்கள் கையில் கிடைக்கிறது மாயப் புத்தகம் ஒன்று. அதன் மூலமாகக் கடந்த காலத்துக்கும் வருங்காலத்துக்கும் பயணித்து, வாழ்வின் வெற்றி ரகசியத்தை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதே ‘காலப் பயணிகள்’ நாவல். பதினாறு அத்தியாயங்களுக்கும் ஆவலை அதிகரிக்கும் விதமாக ‘அனுமானுடன் சந்திப்பு, இராமனும் போர்க்களமும், பாஞ்சாலங்குறிச்சி, கட்டபொம்மன் அரண்மனையில், வேங்கடரத்தினம் எனும் ஆச்சரியம்’ போன்ற சுவாரஸ்யமான தலைப்புகள்.

முன்னூறு ஆண்டுகள் முன்னுக்குச் சென்று சந்தித்த வேங்கடரத்தினம் நமக்கும் ஆச்சரியமானவர்தான். நாட்டுக்கு ஒருவர் அப்படிக் கிடைத்து விட்டால்..? அவர்கள் நுழைந்த வருங்காலத்தில் பிளாஸ்டிக் ஒழிந்து, எங்கெங்கும் மரங்கள் வளர்ந்து, புகைவரும் வண்டிகள் மறைந்து, சூரிய ஒளி பயன்பாடு பெருகி… எனப் பேராச்சரியங்கள் பல சாத்தியப்பட்டதற்கு.., இன்றைய மாணவர்களிடம் ஏற்பட்ட உலகளாவிய விழிப்புணர்வைக் காரணம் காட்டிய இடத்தில் ஆசிரியர், தன் நோக்கத்தைத் தொட்டு உயர்ந்து நிற்கிறார்.

அனுமானின் வழவழப்பான கூந்தலைப் பார்த்து அதைப் பராமரிக்க என்ன பயன்படுத்துகிறார் என ப்ரீதா கேட்க எண்ணுவது, ஜாக்ஸன் துரையை தான் சந்தித்த அனுபவத்தை நிஜக் கட்டபொம்மன் குழந்தைகளுக்கு விவரிக்கையில் “அரசே, ‘மாமனா.. மச்சானா.. மானங்கெட்டவனே’ இந்த வசனத்தை நீங்கள் பேசவேயில்லையே?” என வினய் கேட்பது… என ஆங்காங்கே நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை.

பெற்றோருக்குத் தெரியாமல் இந்தச் சாகசப் பயணங்களில் ஈடுபடுவதாக வருவது மட்டுமே நெருடல். சொன்னால் கதை நிகழ்ந்திருக்கவே வாய்ப்பில்லையே. ஹாரி பாட்டர் போன்ற மந்திர மாயப் புதினங்களில் தவிர்க்க முடியாது போகும் சில சமரசங்களுக்கும், நிதர்சனத்துக்குமான இடைவெளிதனைப் புரிந்தவரே இக்காலப் புத்திசாலிக் குழந்தைகள் எனத் தாராளமாக நம்பலாம். இருப்பினும் கூட அடுத்த கதையில் இதைச் சரி செய்து விட்டுள்ளார் ஆசிரியர்.

வினய்யின் செய்தித்தாள் வாசிக்கும் வழக்கம், குழந்தைகளின் நூலகம் செல்லும் ஆர்வம் கண்டு பெற்றோர் அடையும் மகிழ்ச்சி, நேரந்தவறாமை இவற்றுடன் ‘தீவிரமாக ஒரு செயலில் ஈடுபட்டால் தானாகவே வழிகள் பிறக்கும்’, நட்பின் இலக்கணம் நண்பர்களின் வெற்றியைக் கொண்டாடுவது போன்ற பல நற்சிந்தனைகளையும் கதையின் போக்கில் தேனில் தோய்த்த பலாச் சுளைகளாகக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். முத்தாய்ப்பாக வருகிறது ஆழமாய் மனத்தில் நிறுத்த வேண்டிய வெற்றியின் ரகசியம்.

***
நாவல் 2:  ஒரே ஒரு ஊரிலே…

அடுத்த நாவலின் தலைப்பே அழகு. ‘ஒரே ஒரு ஊரிலே…’ அட, இப்படித்தானே எல்லாக் கதைகளையும் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா ஆகியோர் நமக்கும், நாம் நம் குழந்தைகளுக்கும் சொல்ல ஆரம்பிப்போம். சுற்றிக் குழந்தைகளை அமர வைத்து, அவர்தம் கண் அகலக் கதை கேட்கிறதொரு பாணியிலே சொல்லிச் செல்கிறார் இக்கதையை.

பதினைந்து அத்தியாயங்கள் கொண்டது. அறிமுக அத்தியாயங்களை ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் எனத் தனித்தனியாக ஒதுக்கியிருக்கிறார். சோழவரம்பன் கதை சொல்லும் அத்தியாயம், குழந்தைகளை ரசிக்க வைக்கும். யார் சோழவரம்பன்? பார்க்கலாம்.

இந்தக் கதையிலும் நாயகர்களாக நண்பர்கள் அருண், செந்தில், சாப்பாட்டுப் பிரியன் சரவணன், ஆராதனா அவள் ‘வளர்க்கும் பிரிய நாய்’ சோழவரம்பன் மற்றும் எப்போதாவது இவர்களுடன் சேர்ந்து விளையாட அனுமதிக்கப்படும் வரலட்சுமி.

பள்ளி செல்லும் ஒரு நாளில் ஆரம்பிக்கிற கதையானது பள்ளி முடிந்து விடுமுறையைக் கழிப்பதிலும், அதன் முடிவில் பிரிந்து செல்ல நேரும் தோழர்கள் பிறகும் நட்பை எப்படி மறவாமல் தொடர்ந்தார்கள் என்பதையும் சிறுவர்களுக்குரிய அத்தனை மெல்லுணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் விவரிக்கிறது. சின்னச் சின்ன செல்லச் சண்டைகளையும் விட்டு வைக்கவில்லை.

தந்தையற்ற செந்திலுக்குப் பள்ளிக் கட்டணம் செலுத்த உதவுவது, கிரிக்கெட்டில் தம் தோழியர் மாநில அளவில் பெயர் பெறச் சிறுவர்கள் மனதார ஆசைப்படுவது, மலைக் கோவில் செல்ல தெளிவாகத் திட்டமிடும் திறன், வழியில் சந்திக்கும் டீக்கடைக்காரரின் தாயற்ற மகளிடம் காட்டும் கனிவு, பின்னொரு சமயம் அச்சிறுமி வீடு தேடி வருகையில் செய்யும் உபச்சாரம் என நற்குணங்களை அறிவுரையாக அன்றி, இந்நாவலிலும் கதையின் போக்கில் குழந்தைகளுக்கு உணர்த்துகிறார் ஆசிரியர்.

மினி பயணத்துக்குப் பெற்றோரிடம் ‘அனுமதி’ பெறவதற்கென்றே ஒரு அத்தியாயத்தை ஒதுக்கி, அதன் அவசியத்தை இயல்பு வாழ்வை ஒட்டிய இக்கதையில் வலியுறுத்தியதன் மூலம், ‘காலப் பயணிகள்’ கதையில் கண்ட ஒரே குறையை ஜாக்கிரதையாக நிவர்த்தி செய்திருக்கும் ஆசிரியரின் அக்கறையும் சிரத்தையும் பாராட்டுக்குரியது.

மலைக்கோவிலில் காணாமல் போன அருண் எங்கே எப்படிக் கிடைத்தான் என்பதை அவனது நண்பர்களைப் போலவே பதற்றத்துடன் வாசித்து அறிந்து கொள்ளட்டுமே உங்கள் பிள்ளைகளும்:)!

***

கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, புத்தகம் எங்கும் தூவப்பட்டிருக்கும் விதைகள், நிச்சயம் நாளை விருட்சங்களாகும். விண்ணைத் தொடும். வாழ்த்துகள் விழியன்.

இப்படியொரு சிறப்பான சிறுவர் இலக்கியத்தை நாளைய சந்ததியரின் நலன் கருதி வெளியிட்டிருக்கும் திரிசக்தி பதிப்பகத்தாருக்கு நன்றி.

நடுநிலைப் பள்ளி மாணவருக்கு இப்புத்தகத்தைத் துணைப்பாட நூலாக்கிட தமிழக அரசுக்குப் பரிந்துரைக்கிறேன்.

***

எங்கே கிளம்பி விட்டீர்கள்? கோடை விடுமுறை முடியும் முன் குழந்தைகளுக்குப் புத்தகத்தை வாங்கித் தந்திடவா? நல்லது. மகிழ்ச்சி!

விலை: ரூ.70. பக்கங்கள்: 122. வெளியீடு: திரிசக்தி பதிப்பகம்.

சென்னையில் கிடைக்கும் இடங்கள்: நியூ புக்லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006] மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே நகர்.

இணையத்தில் வாங்கிட: உடுமலை.காம்

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “விழியனின் இரு நாவல்கள் – ஒரு பார்வை

  1. வாழ்த்துகள் விழியனுக்கும் …..
    நல்லதோர் விமர்சனம் தந்த ராமலக்ஷ்மி அமர்களுக்கும்….

    அவரின் வேண்டுகோளே என்னுடையதும்

  2. நூல்களுக்கு மதிப்புரை எழுதுவதும் ஒரு இலக்கிய வகை தான். அவற்றின் முதல் பணி, நூலைப் பற்றிய ஆவலைக் கூட்டுவது / தணிப்பது, நடுநிலை வகித்து. அந்தக் கடமை, திறனுடன் செய்யப்பட்டுள்ளது. விமர்சகருக்கு வாழ்த்துகள். முதல் நாவல் சயின்ஸ் ஃபிக்ஷனிலும் தனித்துவம் வாய்த்தது. நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை. எனக்கு வியப்பு இல்லை. ஏனெனில், என் சிறு வயதில் இராக்கதன் ஒருவன் தினந்தோறும் கனவில் வருவான். இன்று பார்த்த சினிமா மாதிரி, டெட்டைல்ஸ்!
    இரண்டாவது நூலைப் பற்றி, பிறகு பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *