பவளசங்கரி திருநாவுக்கரசு

Pavalasankariரயில் பயணங்கள் கூட மிக இனிமையானவைதான். முன்பதிவு செய்யப்பட்ட குளுகுளு வசதியுடனான பஞ்சு மெத்தை இருக்கைகள். அத்தோடு கலகலவென அரட்டை அடித்துக்கொண்டு, நல்ல பொழுதுபோக்கான ஆசாமிகளுடன், நேரம் போவதே தெரியாமல் வம்பை வளர்த்துக்கொண்டு, அவ்வப்போது கொறிப்பதற்கு ஏதாவது தீனி. இடையில் சுகமான உறக்கம் கொஞ்சம். இப்படி ஒரு இரயில் பயணம் என்றால், ஏன் ஒருவர் வெறுக்கப் போகிறார்….?

பாரிராசன், வியாபார நிமித்தமாக அடிக்கடி பயணம் செல்லக்கூடியவர். ஆனால் சரியான சுகவாசி. ஒவ்வொரு முறை பயணம் செய்யும் போதும், அவருக்குப் பயணச் சீட்டு, அது தொலைதூர விமானப் பயணம் ஆனாலும் சரி, அல்லது எட்டிப் பிடிக்கும் துரத்தில் இருக்கும் எட்டயபுரமானாலும் சரி, வேலையாட்கள் முன்கூட்டியே பயணச்சீட்டைப் பதிவு செய்வதோடு, அவரை ரயிலில் வழியனுப்ப இரயில் நிலையம் வரை வந்து பெட்டி, படுக்கைகளை அடுக்கி வைத்துச் செல்வார்கள். அன்றும் அப்படித்தான், அவர்கள் வந்து எல்லாம், சரி செய்துவிட்டுச் சென்றார்கள். மனிதர் வந்து நிதானமாக ஆசுவாசமாக உட்கார்ந்தவர், சுற்றிலும் நோட்டம் விட்டார். அருகில் இரண்டு இளைஞர்கள், கலகலவென மலையாளத்தில் சம்சாரிச்சிக்கினு இருந்தார்கள்.

இரயிலில் கூட்ட நெரிசல். கோடை விடுமுறை சமயம். நம் வள்ளல் பாரிராசனோ, சொகுசாக ஆடல் பாடலாக, தன் இரட்டை நாடி சரீரத்தை யதார்த்தமாகப் பரப்பி உட்கார்ந்துகொண்டார். பக்கத்தில் இருப்பவர்களைச் சரி கட்டுவது அவருக்கு அவ்வளவு சிரமான காரியம் அல்ல. ஒற்றை நாடி சரீரம்தான் என்றாலும் பாவம் உட்காருவதற்கு சிறிதளவாவது இடம் கொடுக்க வேண்டுமல்லவா…….

அந்த இளைஞர்கள் அவருடைய படாடோபத்தையும் வயதையும் பந்தாவையும் பார்த்துவிட்டு, சற்றே ஒதுங்கி வேறு பவ்யமாக உட்கார்ந்து கொண்டால், நம் வள்ளலுக்குக் கேட்கவும் வேண்டுமோ! சுகமாகக் காலை நீட்டிச் சாய்ந்துவிட்டார். வழியெல்லாம் போன் வேறு…. தான் பெரிய வியாபார காந்தம் என்பதை வெளிப்படுத்தும் விதமாக.. பசங்கள் மிரண்டுத்தான் போனார்கள். கொஞ்சம் அவர் அசைந்தாலும், அவர்கள் இன்னும் கொஞ்சம் ஒடுங்கி உட்காருவது பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் இருந்தது. எப்படியாவது இந்தப் பெரிய மனிதரிடம் நல்ல பெயர் வாங்கிவிட்டால் தங்கள் வாழ்க்கைக்கும் ஒளி கிடைக்கலாம் என்ற நப்பாசை வேறு.

‘தம்பி, அந்த பேண்ட்ரியில் போய் ஒரு தண்ணீர் பாட்டில் கூலா வாங்கி வர முடியுமா’ என்று கேட்டதுதான் தாமதம் இருவரும் எழுந்து கொண்டார்கள். ‘இதோ ஐயா’ என்று.

அவரும் பெருமையாகப் புன்னகைத்துக்கொண்டு ஒரு ஐந்நூறு ரூபாய் தாளை அனாயாசமாக உருவி,

‘இந்தாப்பா, சில்லரை இல்லை’ என்று கூறி நீட்டினார்.

வெகு பவ்யமாக வாங்கிச் சென்ற இளைஞர்கள், கர்ம சிரத்தையாக பாட்டிலை வாங்கி வந்து நீட்டினார்கள்.

ஒரு பெரிய மனிதரின் பழக்கம் கிடைத்த பெருமிதம், அவர்கள் முகத்தில். இருக்காதா பின்னே…….. ஏதோ நண்பன் அவனுடைய அவசர வேலைக்காக, இரண்டாம் வகுப்புப் பயணச் சீட்டு கிடைக்காதலால் முதல் வகுப்பு ஏ.சி கோச்சில் டிக்கெட் வாங்கிக் கொடுக்க, அடித்தது யோகம் என்று இருவரும் வந்திருப்பது இங்கு மற்றவர்களுக்குத் தெரியவா போகிறது….? வேலை வெட்டி இல்லாமல் அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு, பயணச் சீட்டும் தங்கும் இடமும் கொடுத்து, சாப்பாட்டிற்கும் பணம் கொடுத்து, யாருக்குக் கிடைக்கும் இந்த வாய்ப்பு! எப்படியோ இந்தப் பெரிய மனிதரைப் பிடித்து ஒரு நிரந்தர வேலைக்கு ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என்று கணக்குப் போட்டார்கள் இருவரும்.

ஆனாலும் பேராசைதான் என்றாலும், இவ்வளவு பெரிய மனிதருக்கு வேலை வாங்கிக் கொடுப்பது பெரிய விசயமா… தாங்களும் பள்ளியிறுதி வகுப்பு வரை படித்திருக்கிறோமே என்ற தன்னம்பிக்கை வேறு. அவ்வளவுதான், இருவரும் போட்டி போட்டுக்கொண்டு பாரிராசன் வள்ளலுக்குப் பணிவிடை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அவர் எள் என்றால் எண்ணெயாக நின்றார்கள். பாவம் இந்தப் பெரிய மனிதர்களின் வள்ளல் தன்மை பற்றி அறிந்திலர் இருவரும்!

மனிதர் இது போன்று ஏமாளிகள் கிடைத்தால் விடுவாரா என்ன…. அவ்வப்போது பேண்ட்ரிக்கு அனுப்புவது, பெரிய மனது பண்ணி அவர்களுக்கும் சிறு தீனி வாங்கிக்கொள்ளச் சொல்வது [ஆனாலும் அவர்கள் இருவரும் நல்ல பெயர் வாங்குவதிலேயே குறியாக இருந்தவர்கள், அதெல்லாம் சாப்பிடவேயில்லையே!] கால் மட்டும்தான் அமுக்கிவிடவில்லை இருவரும். அதைத் தவிர அவருடைய சொகுசுக்கு உண்டான அத்தனை பணிவிடைகளையும் சுணங்காமல் செய்தார்கள்.

வயிறு நிறைந்து, கண்கள் சுழற்ற ஆரம்பிக்க, இவர்கள் பாவம் அப்போதுதான், தங்களுடைய சுய புராணத்தை ஆரம்பிக்க இருந்தார்கள். ஆனால் மனிதரோ தூங்குவதற்கு மும்முரமாக ஏற்பாடு செய்துகொண்டிருந்தார். பெட்டியை மேலே இருந்து எடுக்கச் சொல்லி அதிலிருந்து, காற்று ஊதும் தலையணையை எடுத்து ஒருவர் கொடுக்க, ஒருவர் ஊத, மகராசன் அதைச் சுகமாகத் தலைக்குப் பின்னால் வைத்துக்கொண்டார். பிறகு பெட்டியைப் பூட்டி எடுத்து, தலைமாட்டில் வைத்துக்கொண்டார். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பரிதாபமாகப் பார்த்துக்கொள்ள மனிதர் எதையுமே கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. சென்னையிலிருந்து ஆலப்புழா செல்லும் விரைவு வண்டி அது. அவர் இறங்க வேண்டிய இடம், கோவை. கோவை வந்தவுடன் எழுப்பி விட வேண்டும் என்ற கண்டிசன் வேறு போட்டுவிட்டு ஆனந்தமாக நித்திரை கொள்ள ஆரம்பித்து விட்டார். இந்த அப்பாவி இளைஞர்கள் கொட்டக் கொட்ட விழித்துக்கொண்டு கோவை வரக் காத்திருந்தார்கள்.

கோவை நெருங்கும் நேரம் மனிதர் எழுப்பினாலும் எழுந்திருக்கும் வழியைக் காணோம். இளைஞர்களுக்கு அவரைத் தொட்டு எழுப்பப் பயம். அவருடையது ஒரு சிறிய பெட்டியும், ஒரு பெரிய பெட்டியும் ஆக இரண்டு உருப்படிகள். சிறிய பெட்டியைத்தான் தலைமாட்டில் வைத்துக் கொண்டார் பத்திரமாக.

இதற்குமேல் பொறுமை காக்க முடியாது என்று ஒரு இளைஞன் அவரை மெதுவாக தட்டி எழுப்பினான். மனிதர் அப்படியே ஆடி அசைந்து எழுந்திருக்க முயன்றார்.

‘ஐயா, வண்டி கோவை நெருங்கி விட்டது. சீக்கிரம் எழுந்திருங்கள். அங்கு 10 நிமிடம்தான் நிற்கும்.’

‘அடப்பாவிங்களா, முன்னாடியே எழுப்ப மாட்டீங்களா……. என்னடா ஒரு சூட்டிப்பே இல்லாத பசங்களா இருக்கீங்க…. நீங்கள்ளாம் என்னாத்த வேலை பார்த்து கிளிச்சி பெரிய ஆளா வரப் போறீங்க…?’

அவ்வளவுதான், அவர்கள் முகம் பொசுக்கென்று வற்றிப் போய், தாங்கள் அவருடைய விலாசம் கேட்க நினைத்ததைக் கூட மறந்து விட்டார்கள். நல்ல வேளையாக அவருடைய விசிட்டிங் கார்ட் ஒன்று கீழே விழ அதைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தனர் இருவரும். எப்படியும் ஊருக்குப் போயாவது அவரைத் தொடர்புகொண்டு வேலை கேட்டு விட வேண்டும் என்று திட்டம் இருவருக்கும்…… ஆனால் ஒரு பெரிய ஆப்பு காத்திருப்பது பின்னால்தான் தெரிந்தது இருவருக்கும்.

ஆம், மனிதர் கழிவறைக்குச் சென்றவர், அங்கு 10 நிமிடம் எடுத்து கொண்டதோடு ஆடி அசைந்து வருவதற்குள் வண்டி கோவை ரயில் நிலையம் வந்து நின்றுவிட்டது. அரக்கப் பரக்க ஓடிவந்தவர், சின்ன பெட்டியைத் தான் எடுத்துக் கொண்டு, பெரிய பெட்டியை அந்த இளைஞரில் ஒருவரை கொண்டுவந்து கொடுக்கச் சொன்னார். அவர்களும் இந்த ஒரு வேலைதானே செய்துவிடலாம் என்று முடிவெடுத்து வேகமாக செயலில் இறங்கினர்.

‘அப்பாடி……… மனிதர் ஒரு வழியாக இறங்கவும், வண்டி கிளம்பவும் சரியாக இருந்தது.ஒரு பெரிய கடமையை முடித்த திருப்தியுடன் இருவரும் நிம்மதியாக கண்ணயர்ந்தனர். தூங்கி விழித்து, புறப்படத் தயாராகும்போது தான் ஒரு பெரிய அதிர்ச்சி இருவருக்கும். பெட்டி மாறியிருந்தது. ஆம் பாரிராசன் இறங்கும் அவசரத்தில் தன் பெட்டியை வைத்துவிட்டு அவர்களுடைய சிறிய பெட்டியை எடுத்துச் சென்றுள்ளார். இருவருக்கும் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. அடடா பெட்டியில் என்னென்ன் முக்கிய சாமான்கள் வைத்துள்ளாரோ தெரியவில்லையே என்று அச்சம் அடைந்தனர். சரி கீழே இறங்கியவுடன் முதலில் அவருக்கு போன் செய்து விவரத்தைச் சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

போன் எண்ணை எடுத்து ஒரு வழியாக போன் செய்ய எண்ணைப் போட்டு,

‘ஹலோ, பாரிராசன் ஐயாங்களா……..’

‘ஆமாம், நீங்க யாரு…?’

‘ஐயா, நாங்கதான் ரயிலில் உங்களோடு பயணம் செய்தோமே. அவங்கதான். ஐயா…..நீங்க…’

‘டேய், திருட்டு பசங்களா……. என் பெட்டியை ஏண்டா மாத்தினீங்க…இப்ப பெட்டியைத் திறந்து பார்த்துட்டு அதில பெரிசா பணமெல்லாம் இல்லன்னதும் ஒன்னும் தெரியாத மாதிரி போன் பண்றீங்களா…..?’

‘ஐயோ, இதென்ன, இப்படி பேசறீங்க… உங்க பெட்டியில என்ன இருக்குன்னே எங்களுக்குத் தெரியாதே… இப்பதான் உங்க பெட்டி மாறினதே எங்களுக்குத் தெரியும். உடனே போன் பண்ணறோம்…’

’அடேய், அதெல்லாம் எனக்குத் தெரியாது…… அந்த பெட்டில முக்கியமான பில்லு, கிரெடிட் கார்ட் எல்லாம் இருக்கு. உங்களால அதை  வைச்சுக்கிட்டு ஒன்னும் பண்ண முடியாது. ஆனா எனக்கு அது ரொம்ப முக்கியம். மரியாதையா கொண்டாந்து குடுத்துபிடுங்க…… இல்லேன்னா போலீசுல புடிச்சி குடுத்துடுவேன் பார்த்துக்கோங்க………’

இருவருக்கும் வேர்த்துப் போய் குலை நடுங்க ஆரம்பித்துவிட்டது. இது ஏதுடா வம்பாகப் போய்விட்டதே……. யார் முகத்துல இன்னைக்கு முழிச்சோமோ தெரியலையே….. ஆண்டவனே என்று விதியை நொந்துகொண்டு,

‘ஐயா, அவசரப்பட்டு வார்த்தையைக் கொட்டாதீங்க…..உண்மை தெரியாம ஒரு பெரிய மனிதர் வாயில் இப்படி கீழ்த்தரமான வார்த்தையெல்லாம் வரலாமா…..? உங்களை எவ்வளவு பெருமையா நினைச்சிருந்தோம். இப்படி இவ்வளவு அநாகரீகமாக நடந்துக்கறீங்க…… நல்லாயிருங்க ஐயா. உங்களோட பெட்டியை அப்படியே திறந்து கூட பார்க்காம கொரியர் பண்ணுகிறோம். திறந்து நீங்க சரி பார்த்துக்கோங்க……. இன்னொரு முறை இது போல அடுத்தவர் மனத்தைப் புண்படுத்துகிற பாவத்தைச் செய்யாதீங்க…….நன்றி ஐயா..’

பாரிராசனுக்கு முகத்தில் ஈயாடவில்லை…. கன்னத்தில் யாரோ பளார் என்று அறைந்தது போல் உணர்ந்த மனிதர், கன்னத்தைத் தேய்த்துக்கொண்டே திருதிருவென விழித்தார்!

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வள்ளல் பாரிராசன்

  1. உளவியல் ஆய்வு ஒன்றை மனதில் வைத்து, ‘பாரிராஜன்’ போன்றோரின் இயல்பை விமரிசிக்கிறேன். அழும்பு செய்து தன் காரியத்தை சாதித்துக்கொள்ளும் சிறார்கள் தான் இந்த மாதிரி வளர்ந்து விடுகிறார்களாம். தன்னலம் நாடி, தன்னுயர்வை கற்பனையால் கண்டு, அது நிஜம் என்று நம்பி விடுகிறார்களாம். நினைத்துப் பாருங்கள். பல பாரிராஜன்களைப் பார்த்திருப்பீர்கள். குழந்தைகளைக் கவனமாக வளர்க்க வேண்டும் என்பதற்கு, இது ஒரு பாடம்.

  2. பவழம்
    தொடர்ந்து எழுதுங்கள்
    வாழ்த்துக்கள்.
    கமலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *