பி.தமிழ்முகில் நீலமேகம்

பார்கவி  அந்த அடுக்குமாடிக்   குடியிருப்பிற்கு  வந்து ஒரு வாரம் தான் ஆகியிருந்தது. அவர்களது அடுக்குமாடித் தொகுதியில் மூன்று தளங்கள் இருந்தன. இவர்களது  வீடு முதல் மாடியில் இருந்தது. தரை தளத்தைத் தாண்டி முதல் தளத்துக்கு வருமுன் உயிரை கையில் பிடித்துக் கொண்டே தான் வருவாள் பார்கவி. அவளது மகள் மகி குட்டிக்கோ, அதைவிட பெரும் பயம். எப்போதும் அந்த தரை தளத்தினைத் தாண்டும் வரை அம்மாவை ஒண்டிக் கொண்டே தான் செல்வாள். இவர்களது பயத்திற்கான காரணம், தரைதளத்தில் இருக்கும் மூன்றாம் எண்  வீட்டிலிருக்கும் திரு. ரோஜர்  அவர்களது  செல்லப் பிராணியே அதற்குக்  காரணம்.

சீசர், கிட்டத்தட்ட அறுபத்தைந்து  பவுண்டு எடையும்,  முப்பது இன்ச் உயரமும் கொண்ட கம்பீர உயரம். காண்பவர் எவரும் சட்டென்று  பயந்துவிடக் கூடிய அளவுக்கு இருக்கும். ஆனால், திரு.ரோஜரோ , ” டோன்ட் ஒர்ரி. ஹீ  இஸ்  ஜஸ்ட் எ லிட்டில் பாய். ஹீ  வில் நாட் ஹார்ம்  எனிஒன்” (Don’t worry. He is just a little boy. He will not harm anyone)  என்று கூறுவார். அது மெல்ல உர்ரென்று  உருமினாலே, ஏதோ  ” பாய்வதற்கு தயாராக இருக்கிறேன். ஜாக்கிரதை ! ” என்று எச்சரிக்கை விடுப்பது போல் இருக்கும். பூட்டிய வீ ட்டினுள் தான் இருக்கும்.ஆனாலும் வெளியில் எவரும் நடக்கும் அரவம் கேட்டால் போதும், பயங்கரமாக குரைத்து, கதவைப் பிராண்டி, வெளியில் போய், வருபவர் மேல் பாய்ந்துவிட மாட்டோமா எனும்படியாகத் தான் இருக்கும் அதன் செய்கைகள்.

ஒரு மாதம் சென்றிருக்கும். சில நாட்களாகவே ஏனோ சீசரின் சப்தம் கேட்பதே இல்லை. ஏனென்று சில வேளைகளில் பார்கவி எண்ணினாலும், “அப்பாடா. சில நாட்களாக நாயின் சப்தமோ, அரவமோ இல்லாததால் நிம்மதியாக நடமாட முடிகிறதே”  என்றெண்ணி  அமைதியானாள்.

ஓர்நாள், துணிகளைத் துவைப்பதற்காக லாண்டரிக்குச்  சென்று  துணிகளை எல்லாம் மெஷினில் போட்டுவிட்டு, அங்கிருந்த சிறிய தகவல் பலகையை நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள். அப்போது, அவளது கண்ணில் அந்த அறிக்கை பட்டது.

சீசரைப் பற்றிய விபரங்கள்…. அதன் நிறம், உயரம், எடை, பெயர், வகை, அதன் புகைப்படம் போன்றவற்றை  குறிப்பிட்டிருந்தனர். ” இதனால் தான் சில நாட்களாக சீசரின் சப்தம் கேட்பதில்லை போலும் ” என்று மனதினுள் எண்ணிக் கொண்டு, தன வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பினாள் . அன்று மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பிய  மஹி குட்டியிடம்  “சீசர் காணாம போயிடிச்சாம் மஹி மா…. லாண்டரில நோட்டீஸ் போட்டிருக்காங்க ” என்றாள் .

” அச்சச்சோ ! காணாம போயிடுச்சா ? பாவம் மா … அது சாப்பிட எல்லாம் என்ன  பண்ணுதோ ! ” என்று  மஹி  பாவமான குரலில் கூறினாள். சில நாட்களில் சீசர் பற்றி மறந்தே போயினர்.

ஒரு நாள் மாலை, அதிகப்படியான குளிரும் இல்லாமல், மிகுதியான வெயிலும் இல்லாமல், சற்று இதமான சீதோஷணம்  நிலவியது. சற்று தூரம் காலாற நடந்து வரலாம் என தாயும் மகளும் கிளம்பினர். அவர்கள் இருந்த இடம், மரங்களடர்ந்த காட்டுப் பகுதி. சில காட்டுப் பகுதிகளை அழித்தே  அங்கு குடியிருப்புகளாகவும், அடுக்குமாடி  வீடுகளாகவும் கட்டி இருந்தனர். சற்று தூரம் நடந்து வந்தவர்கள், ” சரி , வீட்டுக்கு திரும்பி  போகலாம் ” என்றவாறு வீட்டிற்கு திரும்பி நடக்க ஆரம்பித்தனர். அவர்களது குடியிருப்பிற்கு அருகில் வந்ததும்  மஹி, ” ஏதோ முனகுற மாதிரி சத்தம் கேக்கல ? ” என்றாள்.

” இல்லையே ! ”  என்ற பார்கவியை  அங்கு அருகிலிருந்த பள்ளத்தாக்கினை  எட்டிப் பார்க்கச் சொன்னாள்  மஹி . எட்டிப் பார்த்தவளுக்கு  ஆச்சர்யம். அங்கு சீசர்  நின்று கொண்டு மேட்டின் மேல் ஏற முயற்சிப்பதும், சறுக்கி கீழே விழுவதுமாய் இருந்தது. அதைக் கண்டதும் பார்கவி, மேட்டின் மீது அமர்ந்து கொண்டு, கையை நீட்ட, சீசரும் சற்று முயன்று, பார்கவியின் கைகளை தொட, அப்படியே  அதைத் தூக்கி வெளியில் விட்டாள் பார்கவி. நடுங்கிக் கொண்டிருந்த சீசரை மெல்ல தடவிக் கொடுத்ததும், வாலாட்டி விட்டு, வேக வேகமாய் தன்  எஜமானனை தேடி ஓட  ஆரம்பித்தது.

வீட்டிற்கு  தாயும் மகளும் வந்து சேர்ந்தனர். அப்போது, இவர்களின் வருகைக்காக காத்திருப்பது போல,  வாசலில் சீசர் தனது எஜமானர் ரோஜருடன் நின்று கொண்டிருந்தது. இவர்களைக் கண்டதும் வாலாட்டிக் கொண்டே, சுற்றிச் சுற்றி வந்தது. ” வீ   ஃபௌண்ட்  ஹிம் இன் தி வூட்ஸ். ஹீ  வாஸ் மோனிங் ஃபார் ஹெல்ப். வீ  ரெஸ்கியூட் ஹிம்.” ( We found him in the woods. He was moaning for help. We rescued him) என்றதும், ” தேங்க்ஸ்  எ லாட். ஐ  வில் பே  யூ  தி ரிவார்ட் ” (  Thanks a lot, I will pay you the reward) என்றார் திரு.ரோஜர். ” நோ…நோ… வீ  டோன்ட்  வான்ட்  தி ரிவார்ட். இட்ஸ்  ஜஸ்ட் எ ஸ்மால் ஹெல்ப் ” ( No…No… We don’t want the reward. It’s just a small help) என்று  மறுத்து விட்டார் பார்கவி. நன்றியுடன் தாயையும் மகளையும் பார்த்து வாலாட்டியது சீசர். பின் தன் எஜமானனை சுற்றி வந்து அவரது காலடியில் படுத்தது.

அதன் பின், ஓர் நாளும் சீசர், இவர்களைப் பார்த்து குறைப்பதில்லை. மாறாக, நன்றியுடன் வாலாட்டியது .

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *