பட்டினத்தடிகளின் பாடல்கள் – 5ம் பகுதி

0

தஞ்​சை ​வெ. ​கோபாலன்

பொது

உடை கோவணம், உண்டு உறங்கப் புறந்திண்ணை, உண்டு உணவிங்கு

அடை காய் இலை உண்டு, அருந்தத் தண்ணீர் உண்டு, அருந்துணைக்கே
விடை ஏறும் ஈசர் திருநாமம் உண்டு, இந்த மேதினியில்
வடகோடு உயர்ந்தென்ன, தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே. 1.

இந்த பூவுலகில் வாழ்வதற்கு வழியா இல்லை? உடுக்க கெளபீனம், படுத்து உறங்குவதற்கு வீட்டின் வாயிற்புறத் திண்ணை, பசிக்கிறதா கவலை இல்லை உண்பதற்கு இலைகள், காய்கள் இவைகள் உண்டு, தாகமெடுத்தால் அருந்துதற்குத் தண்ணீர் உண்டு, உற்ற துணையாக ரிஷப வாகனம் மீது அமர்ந்திருந்து அருள் பாலிக்கும் சிவபெருமானின் ஐந்தெழுத்துத் திருமந்திரமுண்டு, ஆதலினாலே இவ்வுலகில் எனக்கு என்ன கவலை. அமாவாசைக்குப் பின் வரும் மூன்றாம் பிறைச் சந்திரனுடைய வடகோடு உயர்ந்தால் என்ன, தென்கோடு தாழ்ந்தால்தான் எனக்கென்ன கவலை. (மூன்றாம் பிறையின் வடகோடு உயர்ந்து, தென்கோடு தாழ்ந்திருந்தால் மழைக்கு அறிகுறி. இப்படி உடுக்க, இருக்க, உண்ண, அருந்த, எண்ண எல்லாம் இலவசமாய்க் கிடைக்கும்போது சந்திரன் காட்டும் குறிகளின்படி மழை பெய்தால் என்ன, பெய்யாவிட்டால்தான் என்ன, நன்மைகள் விளைந்தாலென்ன, தீமைகள் விளைந்தால் என்ன).

இதே பாடல் வரிகளை மகாகவி பாரதியும் தன் சுயசரிதையில் “தேம்பாமை” எனும் துணை தலைப்பில் சொல்லும் கருத்தும் கவனிக்கத் தக்கது:–

“வடகோடிங் குயர்ந்தென்னே, சாய்ந்தா லென்னே,
வான் பிறைக்குத் தென் கோடு” பார்மீதிங்கே
விடமுண்டுஞ் சாகாமலிருக்கக் கற்றால்
வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே?
திடங் கொண்டு வாழ்ந்திடுவோம், தேம்பல் வேண்டாம்
தேம்புவதில் பயனில்லை, தேம்பித் தேம்பி
இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி
எதற்குமினி அஞ்சாதீர் புவியிலுள்ளீர்.”

இந்த வரிகளையும் பட்டினத்தாரின் மேற்சொன்ன வரிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

வீடு நமக்குத் திருவாலங்காடு, விமலர் தந்த
ஓடு நமக்கு உண்டு வற்றாத பாத்திரம் ஓங்கு செல்வ
நாடு நமக்கு உண்டு கேட்டதெல்லாம் தர நன்னெஞ்சமே
ஈடு நமக்குச் சொலவோ ஒருவரும் இங்கில்லையே. 2.

என் நெஞ்சே கேள்! நமக்கு வீடு திருவாலங்காடு எனும் புண்ணியத் தலமாகும் (காரைக்கால் அம்மையாருக்குக் கையிலையில் இருந்து சிவபெருமான் அருள் புரிந்தத் தலம் என்பதால்), சிவனடியார்களுக்கே உரிய பிட்சா பாத்திரமாக சிவன் அளித்த ஓடு இருக்கிறது, அது அட்சய பாத்திரம் அன்றோ! எடுக்க எடுக்க உணவளிக்கும் பாத்திரமாகிய அதுவும் இருக்கிறது, இந்த பரந்து விரிந்த நாடும் மக்களும் இருக்கிறார்கள் நமக்குத் தேவையானவற்றைக் கேட்டதும் அள்ளிக் கொடுக்க, அப்படிப்பட்ட எமக்கு இங்கு ஈடு இணை யார் இருக்கிறார்கள் சொல் பார்ப்போம். “மேலே ஆகாயம், கீழே பூமி” என்றொரு சொல் வழக்கு உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு எதற்கென்று கவலைப்பட வேண்டும்?

நாடிக்கொண்டு ஈசரை நாட்டம் உற்றாயில்லை, நாதரடி
தேடிக்கொண்டாடித் தெளிந்தாயில்லை, செகமாயை வந்து
மூடிக்கொண்டோமென்றும் காமாயுதங்கள் முனிந்த என்றும்
பீடிப்பையோ நெஞ்சமே உனைப்போல் இல்லை பித்தர்களே. 3.

ஓ என் மனமே! இறைவனின் கருணையை நாடிக் கண்டுகொள்ளவில்லை, அவன் பாதாரவிந்தங்களைத் தேடி அடைந்தாயில்லை, அவன் அருள் கருணையை உணர்ந்தாயில்லை, இது குறித்தெல்லாம் சிறிதும் கவலை கொள்ளாமல், உலக மாயா விவகாரங்களில் மயங்கி வீழ்ந்து, அவை தரக்கூடிய தொல்லைகளால் மனம் வருந்தி வாடுகிறேன் என்றும் சொல்லி வருந்துவாயேல், உன்னைப் போல பைத்தியக்காரர்கள் உலகில் வேறு எவரும் இல்லை என்பதை உணர்ந்து கொள்.

கையொன்று செய்ய விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்புமியான்
செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே. 4.

ஐயனே! இறைவா! எனது கைகள் ஏதாவது ஒரு காரியத்தைச் செய்து கொண்டிருக்க, விழிகளோ வேறெதையோ பார்த்துக் கொண்டிருக்க, மனமோ வேறெதையோ எண்ணிக் கொண்டிருக்க, வஞ்சனையை மாற்றி மாற்றிப் பேசுகின்ற நா வேறெதையோ பேசிக் கொண்டிருக்க, புலால் நாற்றம் வீசும் இந்த உடலானது எதையெதையோ அனுபவிக்க, செவிகள் எதையெதையோ கேட்டுக் கொண்டிருக்க பூஜை செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு நான் மலரை எடுத்து உன் சிலையில் அல்லது படத்தின் மீது போட்டால், இறைவா, அதை நீ எங்ஙனம் ஏற்றுக் கொள்வாய் வினைதீர்க்கும் அருள் கொண்ட இறைவா சொல்.

கண்ணுண்டு காணக், கருத்துண்டு நோக்கக் கசிந்துருகிப்
பண்ணுண்டு பாடச் செவியுண்டு கேட்கப் பல்பச்சிலையால்
எண்ணுண்டு சாத்த எதிர்நிற்க ஈசன் இருக்கையிலே
மண்ணுண்டு போகுதையோ கெடுவீர் இந்த மானிடமே. 5.

இறைவனின் தெய்வீகக் காட்சியைக் காண அவன் அளித்துள்ள இரு கண்கள் இருக்கின்றன; அவனுடைய கருணை உள்ளத்தை எண்ணி உருக நல்ல மனம் இருக்கிறது; அவனை எண்ணி உருகிப் பாட அவன் புகழ்பாடும் பாமாலைகள் பல உள்ளன; அவற்றைக் கேட்டு இன்புற்று அவனை வணங்க இரு செவிகள் உள்ளன; ஈசன் திருவடிகளைப் போற்றி பச்சிலைகளால் அர்ச்சிக்கப் பல மந்திரங்கள்உண்டு; இப்படிப் பல விதங்களால் அவன் அருளால் அவனடி தொழ வழிமுறைகள் இருக்கும்போது, இவற்றுக்காகவே இப்புவியில் பிறவியெடுத்த மானுடப் பிறவியில் உடலை வீணாக மண்ணுக்குத் தின்னக் கொடுக்கின்றோமே, கெடுக இந்த மானுடப் பிறவி.

சொல்லினும் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும்
அல்லினும் மாசற்ற ஆகாயம் தன்னிலும் மாய்ந்து விட்டோர்
இல்லிலும் அன்பரிடத்திலும் ஈசன் இருக்கும் இடம்
கல்லினும் செம்பிலுமோ இருப்பான் எங்கள் கண்ணுதலே? 6.

நெற்றியொற்றைக் கண்ணனான சிவபெருமான், அவன் புகழ்பாடும் சொற்களிலும், அந்த மந்திரச்சொற்களின் முடிவான பலன்களிலும், வேதங்களின் சாரத்திலும், இருளிலும், தெளிந்த வெட்டவெளி ஆகாயத்திலும், சிவனோடு ஐக்கியமாகிவிட்ட அன்பர்கள் இல்லங்களிலும், சிவனடியார்களிடத்திலும் இருக்கின்ற ஈசனை அங்கெல்லாம் சென்று பார்க்காமல், கல்லில் வடித்த சிலைகளிலும், செம்பில் வார்த்த சிலா வடிவங்களிலுமா இருப்பான். அன்பர் உள்ளங்களே அவன் வாழும் இடம் என்பதை உணர்தல் வெண்டும்.

வினைப்போகமே ஒரு தேகம் கண்டாய் வினைதான் ஒழிந்தால்
தினைப் போதளவு நில்லாது கண்டாய் சிவன் பாதம் நினை
நினைப்போரை மேவு நினையாளர் நீங்கி இந்நெறியினின்றால்
உனைப்போல் ஒருவர் உண்டோ மனமே எனக்கு உற்றவரே. 7.

இந்த மானுடப் பிறவியே நாம் செய்த முற்பிறவி வினைகளினால்தான் என்பதை உணர்ந்திருக்கிறோம்; அவ்வினைகள் நீங்கிவிட்டால் இந்த உடல் ஒரு நொடிப்போதும் இப்பூவுலகில் இல்லாமல் நீங்கிவிடும் என்பதும் உணர்ந்திருக்கிறோம்; ஆனபடியால் எம்பிரான் ஈசனின் பாதாரவிந்தங்களை எப்போதும் மனதால் நினை; அப்படி சிவ சிந்தனையில் திளைத்திருப்போரின் துணையையும் எப்போதும் நாடு; இறை சிந்தனை இல்லாமல் அவனின்றும் நீங்கி நிற்பார்தம் உறவினை நீக்கிவிடு; இப்படி நீக்குவன நீக்கி, சேர்வன சேர்ந்து வாழ்ந்தால் அவனைப் போல இறைவனருள் பெற்றவர் வேறு எவரும் இலர் என்பதை உணர்ந்து கொள்.

பட்டைக்கிழித்துப் பருவூசிதன்னைப் பரிந்தெடுத்து
முட்டச்சுருட்டியென் மொய்குழலாள் கையில் முன்கொடுத்துக்
கட்டியிருந்த கனமாயக்காரிதன் காமமெல்லாம்
விட்டுப்பிரிய என்றோ இங்ஙனே சிவன் மீண்டதுவே. 8.

வாழ்கின்ற வரையில் பட்டும் பீதாம்பரமும் அணிந்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்தாலும், முடிவில் காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே எனும் உண்மையை எனக்கு உணர்த்துவதற்காக வன்றோ அந்த ஈசன் என்பால் கருணை வைத்து என்னைப் பற்றியிருந்த காமக் குரோத ஆசைகள் எல்லாம் விட்டொழிக்க எண்ணியன்றோ என்னை ஆட்கொண்டிருக்கிறான். பட்டாடை அணிந்து கோலாகலமாக வாழ்ந்த நாளைக் குறிக்கும் வகையில் ஒரு பட்டுத்துணியை எடுத்துக் கிழித்து, போகும்போது இதுகூட உன் கூட வராது என்பதைக் குறிக்கும் வகையில் அதில் ஓர் பெரிய ஊசியையும் வைத்து நன்கு சுருட்டி அதனை அடர்ந்த கூந்தல் வாய்ந்த என் மனையாட்டியின் கையில் கொடுத்து, வாழ்வின் இரகசியத்தைப் புரியவைத்த அவன் கருணையை என்னவென்று சொல்வேன்.

சூதுற்ற கொங்கையு மானார் கலவியும் சூழ் பொருளும்
போதுற்ற பூசலுக்கு என் செயலாம் செய்த புண்ணியத்தால்
தீதற்ற மன்னவன் சிந்தையினின்று தெளிவதற்கோ
காதற்ற ஊசியைத் தந்துவிட்டான் என்றன் கைதனிலே. 9.

பருத்த கொங்கைகளையுடைய மனையாளும், மானின் விழிகளையொத்த இன்பம் தரும் மாதருடன் கொண்ட போகங்களும், உலக இன்பங்களை நுகர்தற் பொருட்டு சேர்த்து வைத்த செல்வங்களும், வாழ் நாள் முடிந்து போகுங்காலை இவைகளால் ஐம்பொறிகளும் படும் பாட்டுக்கு என்ன செய்யப் போகிறோம். ஏதோ முற்பிறவிப் பயனால் அன்பே உருக்கொண்ட இறைவன் ஈசன் நம் மனம் தெளிந்து வாழ்வின் உண்மைகளை உணர்ந்து கொள்ளவென்றோ காதற்ற ஊசியொன்றை என் கைகளிலே கொடுத்துப் உணர வைத்தான்.

வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தைப்
போதுற்று எப்போதும் புகலும் நெஞ்ச்சே இந்தப் பூதலத்தில்
தீதுற்ற செல்வம் என், தேடிப் புதைத்த திரவியம் என்
காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே. 10.

நெஞ்சே கேள்! திண் தோள் தகையாளரும், திரு அண்ணாமலையில் வீற்றிருப்பவருமான சிவபெருமானுடைய திருவடிகளே கதியென சரணம் அடைந்திடுவாய். எப்போதும் அவரையே துதி செய்திடுவாய். இப்பூவுலகில் செல்வத்தால் உருவாகும் தீமைகள் எத்தனை, பாடுபட்டுத் தேடி பணத்தைப் புதைத்து வைத்த செல்வம் தான் எத்தனை, இவை அனைத்தும் இவ்வுலக வாழ்வை நீங்கி போகும் காலை கூடவே எவை வரும், காதற்ற ஊசிகூட உன் கூட வராது என்பதை உணர்ந்து கொள்.

(இன்னும் உண்டு)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *