எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

7

அண்ணாகண்ணன்

வல்லமை மின்னிதழ், 7 ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தப் பயணத்தில் உடன் நிற்கும் ஆசிரியர் பவளசங்கரி, மேகலா இராமமூர்த்தி, சாந்தி மாரியப்பன், முனைவர் காயத்ரி பூபதி, முனைவர் செல்வன் உள்ளிட்ட ஆசிரியர் குழுவினர், வழங்கி நிர்வாகி ஆமாச்சு, தள நிர்வாகி சீனிவாசன், ஆலோசகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வறிஞர்கள், வாசகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்.

vallamai_8th_year

8ஆம் ஆண்டில் நுழைந்துள்ளதை முன்னிட்டு, வாசகர்களுக்கு ஓர் இனிய பரிசாக, வல்லமையின் ஆண்டிராய்டு செயலியை வெளியிட்டுள்ளோம். கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்க இங்கே சொடுக்குங்கள் – https://play.google.com/store/apps/details?id=com.vallamai.android இனி, ஆண்டிராய்டு திறன்பேசி வைத்திருப்போர், தங்கள் செல்பேசியிலேயே வல்லமையைப் படித்து மகிழலாம். இதனைக் குறுகிய காலத்தில் உருவாக்கிய கலீல் ஜாகீருக்கு நன்றி.

சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வாரந்தோறும் வல்லமையாளர் விருதுகளை வழங்கி வருகிறோம். முனைவர் செ.இரா.செல்வக்குமாரைத் தொடர்ந்து, முனைவர் செல்வனின் ஒத்துழைப்புடன் 222ஆவது வாரமாக வல்லமையாளர் விருதினை வழங்கியுள்ளோம். வாசகர்களின் பேராதரவுடன் படக் கவிதைப் போட்டி, 112ஆவது வாரத்தை எட்டியுள்ளது. கடினமான இப்பணியை மேகலா இராமமூர்த்தி செம்மையாக ஆற்றி வருகிறார்.

கிரேசி மோகனின் புதுமையான கோணத்தில் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் இரட்டை விருந்தாக, ஓவியமும் கவிதையுமாகத் தினந்தோறும் வெளியாகி வருகிறது. முனைவர் சுபாஷிணியின் அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம், 87 வாரங்களை எட்டியுள்ளது. இன்னம்பூரானின் நாளொரு பக்கம், இசைக்கவி ரமணனின் சித்தத்தில் சில சித்திரக் குமிழிகள், அண்ணாமலை சுகுமாரனின் வரலாறுகளின் வேர், க. பாலசுப்பிரமணியனின் கற்றல் ஒரு ஆற்றல், திருமந்திரத்தில் தேன் துளிகள், நிர்மலா ராகவனின் நலம் .. நமறிய ஆவல், மீனாட்சி பாலகணேஷின் இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் என ரங்கோலிக் கோலமாகப் படைப்புகள் அணி வகுக்கின்றன.

சி. ஜெயபாரதனின் அறிவியல் கட்டுரைகள், எழிலரசி கிளியோபாத்ரா , உமர் கயாம் ஈரடிப் பாக்கள் என ஒவ்வொன்றும் தனித்துவமும் முக்கியத்துவமும் வாய்ந்தவை. எளிய தமிழில் இவ்வளவு விரிவான விண்ணியல் / அறிவியல் ஆக்கங்கள், அச்சிதழ்களில் வெளிவருவதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. மலர்சபாவின் நான் அறிந்த சிலம்பு, சக்தி சக்திதாசனின் இங்கிலாந்திலிருந்து ஒரு மடல், செண்பக ஜெகதீசனின் குறளின் கதிர்களாய்… என அடுக்கடுக்கான படைப்புகள், வாசகர் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

தொடர்கள் மட்டுமல்லாது தனிப் படைப்புகளும் தங்கள் தனி முத்திரையைப் பதித்து வருகின்றன. இவ்வகையில் வையவன், விப்ரநாராயணன், பழமைபேசி, ஒரு அரிசோனன், எஸ்.வி.வேணுகோபாலன், மீ.விசுவநாதன், மு. இளங்கோவன், எம். ரிஷான் ஷெரீப், தமிழ்த்தேனீ, கவிஞர் ஜவஹர்லால், ஜெயராமசர்மா, முல்லை அமுதன், மணிமுத்து, வேதா. இலங்காதிலகம், ராஜகவி ராகில், நா. பார்த்தசாரதி, கருமலைத்தமிழாழன், பெருவை பார்த்தசாரதி, கவியோகி வேதம், சுபாஷிணி திருமலை, சரஸ்வதி ராஜேந்திரன், உமாஸ்ரீ, பொன்.ராம், நாகினி, பா.ராஜசேகர் உள்ளிட்ட பலரின் பங்களிப்புகளும் வல்லமைக்கு வலிவும் பொலிவும் சேர்த்து வருகின்றன.

வல்லமை வாசகர்களின் கேள்விகளுக்குப் பேராசிரியர் இ.அண்ணாமலை அளித்த பதில்களின் தொகுப்பு, அடையாளம் பதிப்பகத்தின் சார்பில் விரைவில் நூல்வடிவம் பெறுகிறது. வல்லமையாளர்களின் தொகுப்பும் விரைவில் மின்னூலாக வெளிவர உள்ளது.

வல்லமையில் இன்று வரை 12,363 இடுகைகளை வெளியிட்டுள்ளோம். 12 ஆயிரம் பின்னூட்டங்களைப் பெற்றுள்ளோம். பல்லாயிரம் வாசகர்கள், உலகெங்கும் இருந்து வல்லமையைத் தொடர்ந்து வாசித்து வருகிறார்கள். வல்லமையின் கூகுள், பிளிக்கர், பேஸ்புக், வாட்சாப் குழுமங்கள், தொடர்ச்சியான கருத்துப் பரிமாற்றங்களுக்குக் களம் அமைத்துள்ளன. சிந்தனை, செயல், முன்னேற்றம் என்ற இலக்குடன் திடமாக, ஆக்கப்பூர்வமாகச் செயலாற்றி வரும் வல்லமையை வாழ்த்துங்கள். தொடர்ந்து வாசியுங்கள். படைப்புகளை அனுப்புங்கள். ஆர்வமுள்ளோர், ஆசிரியர் குழுவுடன் இணைந்து செயல்படலாம். உங்கள் ஆலோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.

இன்னும் செய்வதற்கு நிறைய இருக்கிறது. உங்கள் ஆதரவுடன் அவற்றைச் செய்து முடிப்போம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இணைந்திருங்கள், இன்னும் சாதிப்போம்.

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

  1. வல்லமை குழுவிற்கு என் வாழ்த்துக்கள்… இந்த இதழ் மேலும் வளர்ந்து பல வல்லமையாளர்களை உருவாக்குவதற்கு வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றேன்.

  2. எட்டாண்டு நிறைந்து பட்டொளி வீசும் வல்லமை வலையிதழ், நற்றமிழில், நடைத்தமிழில் நளினமாக இலக்கியப் படைப்புகளை வழங்கி வருவது பெருமைக்குரியது.

    அனுதின, மாத, வருடப் படிப்பாளர் எண்ணிக்கைக் காட்டும் சுயவலை இலக்க இயக்கத்தை இணைத்தால் வல்லமையின் வலு இன்னும் மிகையாகும்.

    வல்லமை ஆசிரியர் குழுவுக்குப் பாராட்டுகள்.

    சி. ஜெயபாரதன்

  3. வல்லமை குழுவினர்களுக்கும், படைப்பாளிகளுக்கும்,, வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த நல் வாழ்த்துக்கள்.

  4. எட்டாண்டு பூர்த்தி செய்து
    முட்டாளுக்கும்அறிவுதரும்
    வல்லமையே..நீ வாழ்க!!!
    சொல்லாலே..நீ வளர்க!!!!
    (ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி)

  5. வல்லமையை இன்றுதான் பார்த்தேன். தொடர்வேன்

  6. வல்லமை தனது எட்டாவது அகவயை எட்டியிருப்பது பெருமகிழ்ச்சியைத் தருகிறது. இவ்விதழைச் சிறப்பாக இயக்கிவரும் ஆசிரியர் குழுவிற்கும் தொடர்ந்து கட்டுரை வழங்கிவரும் ஆர்வலர்களுக்கும் இடைவிடாது வாசித்து வரும் வாசகர்களுக்கும் வாழ்த்துக்களும் பாரட்டுக்களும். தொடர்ந்து இவ்விணைய இதழ் உலகமெங்கும் தமிழோசையைப் பரப்ப இறைவரனை வேண்டி வாழ்த்துகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *