சாந்தி மாரியப்பன்

நம்மில் எத்தனை பேருக்கு அதிகாலையில் எழுந்திருக்கப் பிடிக்கும்?.அதுவும் பிரம்ம முகூர்த்தத்தின், அந்த, இருள் பிரிந்தும் பிரியாத அமைதியான நேரத்து அழகே தனிதான். ‘எழுந்திருக்கவா?… வேண்டாமா?’ என்று நம்மைப்போலவே யோசித்துக்கொண்டு உலகத்தில் யாராவது அவ்வளவு சீக்கிரம் விழித்துக் கொண்டிருந்தால் நாமும் விழித்துக் கொள்ளலாம் என்று சூரியன் மெதுவாக தன் கதிர்களை நீட்டி, ஓட்டைக்கண் வழியாக சோம்பலுடன் பார்க்க, “இப்போ, எழுந்திருக்கப் போறியா இல்லியா?” என்று எங்கிருந்தோ ஒரு சேவல் குரல் கொடுக்கும்.

அந்த எச்சரிக்கைக்குரலை கேட்டதும் அவன் சுறுசுறுப்பாகி, அடித்துப் பிடித்து தயாராகி, தன்னுடைய கடமையாற்றப் புறப்பட்டு விடுவான். என்ன கடமை என்றா கேட்கிறீர்கள்!!.. எவ்வளவோ இருக்கிறதே. முக்கியமாக தலை வரைக்கும் மூடிக் கொண்டு உறங்குபவர்களை முதுகில் சுள்ளென்று வெய்யிலை உறைக்கச் செய்தாவது எழுப்ப வேண்டுமே.

விடிகாலையில் எழுந்திருந்து நடைப்பயிற்சி செய்பவர்கள் பாக்கியவான்கள். அவர்களுக்கு அதிகம் மாசுபடாத, சுத்தமான காற்று சுவாசிக்கக் கிடைக்கிறதே. அதுவும் பக்கத்தில் பூங்காக்கள், கடற்கரை இருந்தால் இன்னமும் நல்லது. நாலைந்து தடவை குறுக்கும் நெடுக்குமாக நடந்து விட்டு, அப்படியே தாகமெடுக்கும்போது அங்கே விற்கப்படும், அருகம்புல் சாறு, இளநீர், வேப்பிலைச் சாறு போன்றவற்றை குடித்துக் கொள்ளலாம். நடந்த களைப்பில் பசியெடுத்தால் அங்கேயே விற்கப்படும், வடை சமோசா வகைகளை வயிற்றுக்குள் தள்ளி விடலாம். பயிற்சியினாலான பலன் என்று பார்த்தால் குறைந்த எடை மேலும் கூடியிருக்கும். அதனாலென்ன?.. மறுநாள் வந்து இன்னும் இரண்டு சுற்று நடந்தால் போகிறது.

அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதால், கிடைக்கும் நன்மைகள் பல. எதுவும் செய்ய நேரமில்லாதவர்கள் குறைந்த பட்சம் பத்து முறை சூரிய வணக்கமாவது செய்யலாம். இப்போதெல்லாம் மும்பை போன்ற பெரு நகரங்களில் வசிப்பவர்கள், அன்றைய உடற்பயிற்சிக்கு நேரமில்லாது போய் விட்டால், குறைந்த பட்சமாக அலுவலகத்திலிருந்தோ, வீட்டிலிருந்தோ ரயில் நிலையத்திற்கு நடந்து செல்வதையாவது வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

விடியல் நேரத்துச் செக்கர் வானம்

கிராமங்களின் அதிகாலைக்கென்றே ஒரு தனியழகு இருக்கிறது. மேய்ச்சலுக்கோ, வயலுக்கோ ஓட்டிக் கொண்டு போகும் மாடுகளின் கழுத்து மணிச் சத்தமும், ‘ச்ளப்… ச்ளப்..’ என்று பெண்கள் வாசல் தெளிக்கும் ஓசையும், இரவு முழுவதும் மரங்களில் அடைந்திருந்த பறவைகள், அன்றைய உணவைத் தேடிப் புறப்படும் ‘களபுள’வென்ற கூச்சலுமாகக் கலந்து ஓவியமொன்று கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பெறுவதைப் போல, கிராமங்கள் கொஞ்சம் கொஞ்சமாக துயிலெழும். விடியலிலிருந்தே கூவிக்கூவி எல்லோரையும் எழுப்பி கடமையாற்றிய சேவல்களும், சேய்களுடன் தாய்க்கோழிகளும் குப்பையைக் கிளறி இரை தேடக் கிளம்பி விடும்.

உதயமாகத் தொடங்கும் சூரியன்

விடியலில் சாணம் தெளித்து கோலம் போடுவதால் ஒரு மருத்துவ நன்மையும் இருக்கிறது. சூரியனின் இளங்கதிர்கள் சாணத்துடன் வினைபுரிவதால் ‘மீத்தேன்’ எனும் ஒரு வாயு உற்பத்தியாகிறது. இதை சுவாசிப்பது உடலுக்கு நல்லது. அதுவுமில்லாமல், இந்த வாயு விஷப்பூச்சிகள் வீட்டை அண்டாமலும் காக்கிறதாம். இப்போதெல்லாம் சாணம் தெளிப்பதை விடுங்கள்.. விடிகாலையில் வாசல் தெளித்து கோலம் போடுவதே அருகி விட்டது.

காகமே.. சூரிய லட்டு தின்ன ஆசையா!!!

சில இடங்களில் இரவே இதையெல்லாம் செய்து வைத்து விடுகிறார்களாம். விடிகாலையில் குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவது ஒரு நல்ல உடற்பயிற்சி. அரிசி மாவினால் கோலமிடும்போது அது எறும்புகளுக்கும் உணவாகிறது. அன்னதானம் செய்தால் புண்ணியமாச்சே!! அதுவுமில்லாமல், அந்த நேரத்து சுத்தமான காற்றை சுவாசிப்பதென்பது ஆரோக்கியத்துக்கும் நல்லதென்றுதான் நம் முன்னோர்கள் இந்தப் பாரம்பரியத்தையெல்லாம் கொண்டு வந்தார்கள். நாம் நோக்கத்தை விட்டுவிட்டோம். வெறும் பாரம்பரியத்தை மட்டும் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.

கடமையாற்றப் புறப்பட்டு விட்டான்.

விடிகாலையில் எழுந்திருப்பதால் பல நன்மைகளும் இருக்கின்றன. ஒரு நாளில் குறைந்த பட்சம் இரண்டு மணி நேரமாவது நமக்குக் கூடுதலாக கிடைக்கிறது. உடற்பயிற்சி செய்ய, விரும்பிய புத்தகத்தைப் படிக்க, நல்ல இசையைக் கேட்க, அன்றைய முக்கியமான வேலைகளை அவசரப் படாமல் நிதானமாக செய்து முடிக்க, அவசர அவசரமாக விழுங்காமல் நிதானமாக ரசித்து உண்ண, முக்கியமாக கையில் தேநீர்க் கோப்பையுடன் காலை நேரச் சூரியனின் அழகை ரசிக்க எல்லாவற்றுக்குமாக,.. அத்துடன், இந்த இடுகையைப் படிக்கவும் நேரம் கிடைக்கிறது…

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “அதிகாலைப் பொழுதில்

  1. ராத்திரி லேட்டா இதை படித்தேனா? காலையில் லேட். சாதரணமா வைகறையான் நான். ஒரு விஷயம்: ‘…சூரியனின் இளங்கதிர்கள் சாணத்துடன் வினைபுரிவதால் ‘மீத்தேன்’ எனும் ஒரு வாயு உற்பத்தியாகிறது. இதை சுவாசிப்பது உடலுக்கு நல்லது…’ இதை நாம் நம்பவில்லை. ஆனால் கலையில் கோலம் நலம். சரியா?

  2. வாசித்ததற்கு நன்றி ஐயா,

    காலையில் கோலம் போடுவது நிச்சயமாக நல்லதுதான்.. நகரங்களில் விஷேச தினங்களன்று மட்டுமாவது இதைக் கடைப்பிடிப்பதே சந்தோஷப்பட வேண்டிய விஷயம்தானே 🙂

    மீத்தேனை அதிக அளவில் சுவாசிப்பது கெடுதல்தான். ஆனால், குறைந்த அளவிலான மீத்தேன் சுற்றுப்புறங்களிலிருக்கும் கிருமிகளை ஒழிக்கிறது என்று சொல்லப்படுகிறது 🙂

  3. உடற்பயிற்சிக்காக நேரம் ஒதுக்க விரும்பாதவர்கள் அன்றாடப் பணிகளையே ஒரு தியானமான ஒரு உடற்பயிற்சியாகத் திட்டமிட்டு செய்யலாம். காலை நமக்காக அன்றாடம் வருகிறது. காலையை பலரும் கண்ண்டைத்து புறக்கணிக்கிறோம்.. கிராமத்துக் காட்சியை சித்திரமாக்கி அளித்தமைக்கு நன்றிகள்…

  4. ”’ஹா’..ஹா …,,,ஹோ ,,ஹோ ,,..என்று பாராட்ட முடியவில்லை ,,எதோ பரவாஇல்லை என்று பாராட்ட வேண்டும் போல்இருந்தது,  உதயத்தின் ,அழகானபடம் என்னை கவர்ந்தது ,சானம்பூசுவது ,கிராமத்தில் இன்றும் நடக்கும் ,  கிருமி நாசினி ,என்பது மட்டுமே எனக்கு தெரியும் ,அனால் அதில் சூரியன் கதிர் வீச்சில் ,ஹீ லியம் வாயு ,உதிக்கும் என்பதை தெரிய படுத்திய உங்களுக்கு நன்றி ,..தேவா….”   

  5. வாசித்ததற்கு நன்றி நீலகண்டன்,

    வாசித்ததற்கு நன்றி தேவா,… பரவாயில்லைங்க.. ஒண்ணு ரெண்டு குறைச்சுக்கிட்டு அந்த ஆயிரம் பொற்காசுக் கிழியைக் கொடுங்க 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *