அணு உலைகள் பாதுகாப்பானது என்றால் விபத்து ஒத்திகை நடத்துவது எதற்கு? – சீமான் கேள்வி – செய்திகள்

2

அணு மின் நிலையங்கள் பாதுகாப்பானதுதான் என்று அணு விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அப்படியானால் அணு உலைகள் அமைந்துள்ள பகுதிகளில் விபத்து ஒத்திகை நடத்துவது ஏன் என்பதை அவர்கள் மக்களுக்கு விளக்க வேண்டும் என்று கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை:

”தங்களுடைய வாழ்விற்கும், எதிர்காலத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறி, கூடங்குளம் அணு மின் நிலையத்தை நிரந்தரமாக மூடிட வேண்டும் என்று இடிந்தகரையில் அப்பகுதி மக்கள் கடந்த 11 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் தமிழக முதலமைச்சர் அளித்த உறுதிமொழியினால் நிறுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.  கூடங்குளம் அணு மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் வாழும் மக்களின் அச்சத்தை போக்கும் வரை, அந்த அணு மின் நிலையத்தை இயக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் விடுத்துள்ள கோரிக்கை நியாயமானது.  அதனை நாம் தமிழர் கட்சி வரவேற்கிறது.

கூடங்குளம் மக்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொண்டுள்ள நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்று கல்பாக்கத்தில் இயங்கிவரும் இந்திரா காந்தி அணு சக்தி மையத்தின் இயக்குனர் எஸ்.சி.சேட்டல் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

கூடங்குளம் அணு உலை மிகவும் பாதுகாப்பானது என்றும், ஒரு வேளை நிலநடுக்கம் ஏற்பட்டாலும், அணு உலை அமைந்துள்ள பகுதி பாதுகாப்பான இடமாக இருக்கும் என்றும் சேத்தல் கூறியுள்ளார்.

விஞ்ஞானி சேத்தல் அவர்களுக்கு நாம் விடுக்கும் வினா இதுதான்: கூடங்குளம் அணு மின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்றால், அங்கு விபத்து ஒத்திகை நடத்தப்பட்டது ஏன்? கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அபாய சங்கு ஒலிக்கும், உடனடியாக மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று கதவுகளையும், சன்னல்களையும் அடைத்துக்கொண்டு, ஈரத் துணியால் முகத்தை மூடிக்கொண்டு உள்ளேயே இருக்க வேண்டும் என்றும், குழுந்தைகளுக்கும் அப்படி கட்டிவிட வேண்டும் என்றும், விபத்து பெரிதாக இருந்தால் கூடங்குளத்தில் இருந்து 5 கி.மீ. தூரத்திற்கு அப்பால் வேகமாக மக்கள் இடம் பெயர வேண்டும் என்று கூறி அங்கு விபத்து ஒத்திகை நடத்தப்பட்டது ஏன்? இந்த ஒத்திகையின் காரணமாகத்தானே கூடங்குளம் அணு உலை என்பது இத்தனை ஆபத்து நிறைந்ததா என்கிற வினாவும் அச்சமும் அங்கு வாழும் மக்களுக்கு ஏற்பட்டது? அதன் விளைவுதானே இத்தனை நாட்களும் இலட்சக்கணக்கான மக்கள் இடிந்தகரையில் கூடி நடத்திய மாபெரும் போராட்டம்?

கூடங்குளம் பகுதியில் மட்டுமல்ல, கல்பாக்கம் அணு மின் நிலையப் பகுதியிலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, மாவட்ட நிர்வாகங்களின் ஒத்துழைப்புடன் விபத்து ஒத்திகை நடைபெற்றுக்கொண்டுதானே இருக்கிறது? விபத்து நடந்தால் வெளியேறும் என்று கூறப்படும் அயோடின் கதிர்வீச்சுத் தாக்குதலில் இருந்து எப்படி தற்காத்துக்கொள்வது என்பதையெல்லாம் மக்களிடம் விளக்குவதும், அதற்கான மாத்திரைகளை வழங்குவதும் ஏன்?

நமது நாட்டின் அணு உலைகளில் விபத்தே ஏற்பட்டதில்லை என்று அணு விஞ்ஞானிகள் அடித்துக் கூறுகின்றனர். ஆனால், பல விபத்துகள் நடந்துள்ளன, அவற்றைப் பற்றிய விவரங்கள் வெளிவராமல் தடுக்கப்பட்டுள்ளன என்பதுதான் உண்மை.  அதேபோல், அணு உலைகள் அமைந்துள்ள பகுதியில் சுற்றுச் சூழலில் – குறிப்பாக அணு உலைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றியெல்லாம் முழுமையான ஆய்வு நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாற்று பல காலமாக உள்ளது.  கல்பாக்கத்தில் வாழும் மக்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள உடல் பாதிப்பு பற்றியெல்லாம் வெளியான விவரங்களுக்கு இந்திரா காந்தி அணு மின் நிலைய நிர்வாகம் திருப்தியளிக்கக் கூடிய பதிலை ஒருபோதும் தந்ததில்லை.

மற்ற தொழிற்சாலைகளைப் போன்றதல்ல, அணு மின் நிலையங்கள்.  தொழிற்சாலை தொடர்பான விபத்துகள் ஏற்பட்டால் அது சுற்றுச்சூழலை நிரந்தரமாக அழித்துவிடுவது இல்லை.  மாறாக, அணு மின் நிலையத்தில் இயற்கையினாலோ அல்லது மனித பிழைகள் காரணமாகவோ விபத்து நேர்ந்தால் அதன் பாதிப்பு பேரழிவாக இருக்கும் என்பதையே செர்னோபில் முதல் புகுஷிமா வரை நிரூபனமாகியுள்ளது.

எனவே, அணு உலைகள் பாதுகாப்பானவைதான் என்பதை ஐயத்திற்கிடமின்றி இந்திய அணு சக்தி ஆணையம் நிரூபிக்க வேண்டும்.  இல்லையெனில், அணு உலைகள் அனைத்தையும் மூடிட வேண்டும் என்கிற மக்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும்.”

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அணு உலைகள் பாதுகாப்பானது என்றால் விபத்து ஒத்திகை நடத்துவது எதற்கு? – சீமான் கேள்வி – செய்திகள்

  1. பிரான்ஸ் நாட்டு பிரதமர் அந்நாட்டிலுள்ள எல்லா
    அணு உலைகளையும் படிப்படியாக மூட இருப்பதாகவும்
    புதிதாக அணு உலைகளைத் திறக்க மாட்டோம் என்றும்
    அறிவித்துள்ளார். ஜப்பானில் புகுஷிமா அணு உலைப்
    பாதிப்பிற்குப்பின் படித்த பாடம் என்று அவர் சொல்கிறார்.
    எண்டோசல்பானுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்த
    ஒரே நாடு நம் இந்தியா என்பதில் நாம் என்ன பெருமிதம்
    கொள்ளமுடியும்? கூடங்குளம் அணு உலையை மூட
    வேண்டும் என்ற இடிந்தகரை மக்களின் போராட்டம்
    அன்னாஹசாரே போராட்டத்திற்கு சிறிதும் குறைந்ததல்ல!
    இரா.தீத்தாரப்பன், ராஜபாளையம்.

  2. நம்ம தமிழ்நாட்டிற்குத் தேவையற்றதுதான்.யார் கேட்பர்? ஃபைவ்ஸ்டார் உணவு போட்டு சிறிது நேரத்தில் இறந்து விடுவாய் என ஒருவர் கூறுகிறார்.அதற்காக அந்த உணவை நாம் ஏற்போமா..அல்லது நமது வீட்டு உணவே போதும் என்போமா?கால் வயிற்றுக் கஞ்சியாக இருந்தாலும் மரணபயம் இல்லாமல் வாழ்வதுதான் வாழ்க்கை.ஏற்கனவே நீர்நிலை,மலைவளம்,மழைவளம் அரசியல்வாதிகளால் காக்கப்படவில்லை.அவரவர் சுயநலத்திற்காக வாழும் காலம் இது. இதில் எதற்காக அப்பாவி மக்கள் உயிருடன் விளையாடவேண்டும்? 5 நாள் மழைக்கே மக்களை ஏன் என்று கேட்க நாதியற்று இருந்தனர்.நம்ம மக்களுக்குத் தகுந்த வாழ்ககையைத்தான் அமைச்சுக்கணும்.நாடே கிராமத்தால் சூழப்பட்டது. இதில் எதற்கு பிற நாட்டைப்போல அறிவியல் வளர்்சியெல்லாம்…அதுக்கெல்லாம் நேர்மையான ஜனநாயகம் வேணுமுங்க…இங்கே எல்லாமே பணநாயகம்தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.