தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 19

1

இன்னம்பூரான்

தமிழ்நாடு

தணிக்கை அலுப்புத் தட்டும் விஷயம் தான். ஆனால், மக்கள் அதைச் செங்கோலாக பயன்படுத்த முடியும். அரசைக் கண்டித்துத் தண்டிக்க முடியும், தேவை ஏற்படுமானால். எனவே, அரசு ஆங்கிலத்தில் வரும் ஆடிட் ரிப்போர்ட்களை, என் பேசும் மொழியில், அலசிப், பகிர்ந்து கொள்கிறேன். எந்த வினா எழுந்தாலும், உகந்த பதில் அளிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன். தமிழ் மொழியிலும் ஆடிட் ரிப்போர்ட்டுக்கள் பிரசுரம் ஆகின்றன. சில நாட்களாகவே, ஊடகங்களில் தணிக்கைச் செய்திகள். மூலம் தென்படவில்லை. ஏ.ஜீ. ஆஃபீசில் விசாரித்தேன். உடனே விவரம் அனுப்புவதாகச் சொன்னார்கள். அத்துடன்  சரி. அதிகார பூர்வமான அறிக்கைகள் ஒரே நாளில் நான்கு, புதுச்சேரி அறிக்கைகள் உள்பட, இன்று வந்துள்ளன. அவை கிடைத்தவுடன், இதை எழுதுகிறேன்.

A. அரசு கம்பெனிகள், வாரியங்கள் பற்றிய ஆடிட் அறிக்கை இது. [Audit Report No.4 (Commercial) for the year ended 31 March 2010: 163 பக்கங்கள்]

  1. ரத்தினச் சுருக்கம்: 64 கம்பெனிகள், 2 வாரியங்கள், 11 முடங்கிய கம்பெனிகளில், 2.79 லட்சம் ஊழியர்கள். ரூ. 47,578.39 கோடி வரவு/செலவு; சேமித்த? நஷ்டம்- ரூ. 21,297.39 கோடி. இவற்றின் வரவு/செலவு கொஞ்ச நஞ்சமில்லை.  அரசின் வரவு/செலவில் ஐந்தில் ஒரு பங்கு. கபளீகரம்!. மூன்று வருடங்களாக ஆடிட் கரடி கத்தியதை ஆய்வு செய்தாலே, ரூ. 4000 கோடி  நஷ்டத்தையும் ரூ. 600 கோடி  வீணாப் போன முதலீடுகளையும் தவிர்த்திருக்கலாம் என்பது தெளிவு. சீர்திருத்தங்கள் மிகவும் தேவை.
  2. சொன்னதும், செய்ததும்: கடந்த 25 வருடங்களில் தனித் தனிக் கம்பெனிகளாக உலவி வரும் ஆதி திராவிடர் /பின் தங்கிய வகுப்புக்கள்/ சிறு பான்மையினர்  முன்னேற்றக் கம்பெனிகள் மூன்றுக்கும் இலக்கு ஒன்றே தான். (ஏன் திரி மூர்த்திகள்?) மூன்றும் முன்னேற்றம் பண்றாங்களோ இல்லையோ, அரசுப் பணத்தை வங்கியில் டிபாசிட் செய்து விட்டுச், சும்மா இருக்கிறார்கள். ஹூம் ! ரூ. 250 கோடி வரை! திட்டம் யாதுமில்லை, ஐயா. கிராமங்கள் பற்றிய விவரங்கள் இல்லை, ஐயா. தாமதம் உண்டு, ஐயா. தரிசு நிலம் வாங்கியதும் உண்டு. அளித்த பயிற்சியும், கொடுத்த வேலையும் வெவ்வேறு. உதவிக்கரம் யாருக்கு நீட்டவேண்டும் என்ற தெளிவு இல்லை. அரைகுறைக் கடனுதவி. யாருக்கும், அது உதவாது. உதவிக்கரம் நீட்டினால், லேவாதேவி ரேட்டு அதிகம், ஐயா. ஆடிட் கோரிக்கை: சற்றே விவரங்களின் ஆதாரத்துடன், திட்டமிட்டு, டிலே செய்யாமல், இந்த ஏழை பாழைகளுக்குச் சொன்னதைச் செய்யுங்கள்.
  3. சாரமில்லா மின்சாரம்: ஐயா! தனி மனிதனுக்கோராயிரம் வாட் மின்சாரம் என்பது 2012 வருட தேசீய இலக்கு. ஆனா பாருங்கோ! 4000 மெகாவாட் அதிகப்படி உற்பத்தி  தேவையிருந்தாலும், எடுத்த காரியத்தைச் செய்யாததாலும், திட்டமிட்ட ஹைட்ரோ திட்டங்களை அரோஹரா செய்ததாலும், 290 மெகாவாட் மட்டுமே அதிகப்படியாக உற்பத்தி.  இத்தனைக்கும் அதிகப்படி செலவு ரூ. 400 கோடி. இன்னொரு சமாச்சாரம். (40 வருடங்களாக ஆடிட் சொல்லி வரும் குற்றச்சாட்டு, இது). மின் உற்பத்திக் கலங்களுக்கு 35 வயதுதான் ஆயுசு. காயகல்பம் உண்டு. சத்தியமாக பலிக்கும். 16 ஸ்டேஷன்களுக்கு அர்ஜெண்ட் காயகல்பம் தேவை. கொடுத்ததோ, இரண்டு ஸ்டேஷனுக்கு மட்டும். (ஏனையா மின்வெட்டு வராது?) இந்த அழகில் ரூ. 2,175 கோடி பெறுமான வேலைகள், டெண்டர் இல்லாமல் (வேண்டப்பட்டவருக்கு?) கொடுத்ததால், சுங்கவரிச் சலுகை ரூ. 133 கோடி ரூபாய் போச்சு. நிலக்கரி வாங்கிய வகையில், மற்றொரு அரசு கம்பெனி வாங்கிய விலையோடு ஒப்பிட்டால், நஷ்டம்-ரூ. 337.76 கோடி. எண்ணூர் பேசின் பிரிட்ஜ் மின்கலங்களால் நஷ்டம் அதிகம். அவை சாரமில்லாதவை. சக்கை. (இங்கும் ஒரு பழங்கதை) ஏன் அவற்றைக் கட்டிக் கொண்டு மாரடிக்கிறார்கள் என்று புரியவில்லை. செலவு தான் கிட்டத்தட்ட ரூ. 300 கோடி ஜாஸ்தியாகியிருக்கிறது. கடன் சுமையும் நாலு வருஷங்களில் கிட்டத்தட்ட நாலு மடங்கு ஜாஸ்தி.
  4. ஒரு சூட்சுமம்: நிலக்கரி எரிப்பதால் சாம்பல் விழும். அதற்கும் காசு கிடைக்கும், கணிசமாக. ஆனால் விலை போன சாம்பல், விழுந்த சாம்பலை விட குறைவு. என்ன குப்பையைக் கிளறுகிறீர்களே என்று கேட்கிறீர்களா? கேட்டால், ஒரு பழங்கதை சொல்லி, விளக்குகிறேன். இப்போதெல்லாம் பழங்கதைகளை, கேட்டாலொழியச், சொல்வதில்லை.
  5. மாதிரிக்கு சில ஆடிட் துளிகள்: அரசு கேபிள் கார்ப்பரேஷன், மக்களுக்குத் தொலைக்காட்சிகள் அதிகச் செலவில்லாமல் கிடைக்க வேண்டும் என்று அக்டோபர் 2007-ல் உருவாக்கப்பட்டு, ஏப்ரல் 2008-ல் மத்திய அரசின் அனுமதி பெற்று, ஜூலை 2008-ல், அரசின் பங்கு ரூ. 25 கோடி, மற்றும் கடனுதவி ரூ. 36 கோடியுடன் தொடங்கி, மூன்று வருடங்களில் சாதித்தவை: அனாவசிய கட்டுமான வசதிகள் ரூ. 28.28 கோடி,  நஷ்டம் ரூ. 8.11 கோடி. காரணம்: லோக்கல் ஆபரேட்டர்களுடன் உறவாடாமல் இருந்தது. சன், சோனி, ஸ்டார் போன்ற ஜாம்பவான்களுடன் ஒவ்வாமை. ( அது தான் உள்குத்துத் திட்டம் என்று வாசகர்கள் சொன்னால், இல்லை என்று சொல்ல என்னிடம் சான்றுகள் இல்லை.)
  6. தலைகீழ்: ரூ. 28.08  கோடி செலவில் வாங்கிய உபகரணங்கள், ரூ. 142.50 கோடி செலவில் செட்-அப் பெட்டி வசதி செய்யா விட்டால், வேஸ்ட். அந்தச் செலவு செய்தால், நஷ்டம் உத்தரவாதம். ரூ. 28.08  கோடி செலவில் வாங்கிய உபகரணங்கள் என் செய்ய உதவும்?- உதவாது.
  7. வரவு எட்டணா! செலவு எட்டாயிரம் அணா: ரூ. 250 கோடி எதிர்பார்த்த இடத்தில் வந்தது ரூ. 1.50 கோடி. சுண்டைக்காய் ஒரு பணம்; சுமைக்கூலி பத்துப் பணம். ரூ. 1.50 கோடி தருவிக்க, ரூ. 11 கோடி செலவு. பேஷ்!
  8. பேரென்னெவோ பூம்புகார் கப்பல் கம்பெனி. ஒரே கரி. நிலக்கரி சுமக்க வாங்கின கப்பல்கள்: தமிழ்ப் பெரியார், தமிழ் அண்ணா, தமிழ்க் காமராஜ். தூத்துக்குடியில் கரிச்சுமையை இறக்க க்ரேன் வசதி இல்லை. கப்பலின் க்ரேன் தான் பயன்படவேண்டும். தமிழ் அண்ணா என்ற கப்பலில் இருக்கும் பத்தாம்பசலி க்ரேன் இரண்டும் ரிப்பேர். அதைச் சரி செய்வதில் அசாத்திய டிலே. காரணங்கள் ஆவணங்களில் இல்லை. பத்தாம்பசலி க்ரேன் என்று பதில் வேறு.  தமிழ்ப் பெரியார் என்ற கப்பலை மராமத்து செய்வதில் ஒரு சைனாக் கம்பெனியுடன் இழுபறி. அடுத்துச் சென்ற கம்பெனி படு தாமதம். சாமான் வாங்குவதில் செய்த டிலேயினால் அதிகப்படி செலவு ரூ. 56.37 கோடி. வேறு கப்பல்களின் க்ரேன் வாடகை அதிகப்படி செலவு ரூ. 50. 29 கோடி. கப்பல்களைக் குத்தகை எடுப்பதில், அரசின் விதிகளை இந்தக் கம்பெனி கண்டு கொள்ளவில்லை. மேலும், கடல் வாணிக நுட்பங்களை சரிவர இயக்காமல், இந்த கம்பெனி பல இன்னல்களுக்குள் சிக்கியது.
  9. எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன், அவசரப்பட்டு தேவையில்லாத இடங்களில் நிலம் வாங்கியதில் இருபது கோடி ரூபாய் முடக்கம்.
  10. சிப்காட் கம்பெனி அலிசன் ட்ரான்ஸ்மிஷன் என்ற மனுதாரருக்கு, அரசின் ஆணைக்கு உட்பட்டு, பாதி விலையில் நிலம் அளித்ததில் நஷ்டம்  ரூ. 8.32 கோடி.  இதில் பாரபட்சம்  இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது.
  11. மத்திய அரசு விதித்த சர்வீஸ் வரியை சிப்காட் வசூலிக்காததால் ரூ. 70 லட்சம் நஷ்டமாகி விடும். அதனுடன் வட்டி ரூ. 15 லட்சம் மற்றும் அபராதம் ரூ. 75 லட்சமும் நஷ்டம். [மத்திய அரசு இதைத் தள்ளுபடி செய்ய விரும்பாது; தணிக்கை அங்கும் திரும்பும் அல்லவா! அதற்கு ஒரு பழங்கதை உள்ளது, வாசகர்களே!]
  12. தமிழ்நாடு கட்டுமான கார்ப்பரேஷன் பத்து வருடங்களாக, வரவு செலவு முடிவு செய்யவில்லை. ஆள் இல்லையாம். பேஷ்!
  13. ட்ரான்ஸ்ஃபார்மர் போன்ற சாமக்கிரியைகளை வாங்குவது சிக்கலான விஷயம். ஒப்பந்தக்காரரின் திறன் போன்ற விஷயங்களை ஆராய வேண்டும். அத்தருணம் சாமர்த்தியம், வாய்மை, பின்னணி எல்லாம் கை கொடுக்கும். டெண்டர் விதிகளை சடங்கு மாதிரி, உதட்டசைவில் செய்வதால் நலம் ஒன்றுமில்லை. அப்படிச் செய்ததால், மின்சார வாரியத்திற்கு ஏழு கோடி ரூபாய் நஷ்டம். இது எந்த தெய்வத்திற்கு ப்ரீதி?
  14. B. Audit Report (Civil), Tamilnadu For the Year 2009-2010: 212 பக்கங்கள்

இரண்டாவது சுற்றில் வந்த இந்த அறிக்கை, தமிழ்நாட்டு அரசின் துறைகளையும், ஐந்தாவது சுற்றில் வந்த மற்றொரு அறிக்கை (85 பக்கங்கள்) தமிழ்நாட்டு அரசின் வருமானத்தையும் பற்றியவை. இந்த அறிக்கையிலிருந்து இரு துளிகள் மட்டும், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வகையில். வாசகர்கள் விரும்பினால், அண்ணா பல்கலை கழகத்தின் கலக்கங்கள், அசெம்ப்ளி அமர்க்களங்கள், மற்றும் பல ஆச்சரியங்களைப், பின்னர் பார்க்கலாம், பார்க்காமலும் விட்டு விடலாம்.

  1. இந்தத் தொடரின் 6-வது பத்தியில் ‘பூசணிக்காயைச் சோற்றில் மறைத்த மர்மம்!’ உடைக்கப்பட்டது. அதன் தொடர் இங்கே தென்படுகிறது. ‘ஒப்பந்தக் காரர்கள், அரசுடன் ஒப்பந்தம் செய்கிறார்களோ, இல்லையோ, தங்களுக்குள் செய்கிறாப்பில இருக்கே’ என்று, புள்ளி விவரங்களுடன், ஆடிட் வினவ, அரசு மேலதிகாரியும் ‘அப்படித்தான் தோன்றுகிறது எம்மால் யாதும் செய்ய இயலாது’ என்கிறார். எனக்கு வெட்கமாக இருக்கிறது. ஏனெனில், அரசின் ஆளுமையை, நிர்வாகத் திறனை, இந்தப் பதில் பழிக்கிறது. இந்த ஒப்பந்தக்காரர்கள் லேசுப்பட்டவர்கள் இல்லை. 17,513 டெண்டர்களில், 17,110 டெண்டர்களில், இரு ஒப்பந்தக்காரர்கள் தான் போட்டி. ஊன்றிக் கவனித்துப் பார்த்தால் ‘டூவில்டம்’ மும் ‘டூவில்டீ’யும் (அதாம்ப்பா! ஐயாவும் & பினாமியும்) போட்டி என்ற தோற்றம். கட்சிக்காரனுக்கு டெண்டர் என்று ஓப்பனா உரிமை கொண்டாடுகிறார்களே, புரியுதா?
  2. அசெம்ப்ளி சேதி என்ன? என்று கேட்பீர்கள்: இரண்டு சொட்டு மருந்து: (i) முன் வைத்த காலைப் பின் வைத்த காதை: கோபுரம் கட்ட நாளாகும். தேர்தலுக்கு முன்னால் கிரகப்பிரவேசம். ஒரு பாலாலய கோபுரம் ( தற்காலிக டூப்ளிகேட்) கட்டுக என்று ஆணை. நோ டெண்டர். வீண் செலவு: ` 3.28 கோடி. (ii) பைல் அஸ்திவாரம் போட்டாஹ. அளவு கோல் மாத்தினாஹ. அதிகப்படியாகக் கொடுத்தாஹ:` 2.46 கோடி.

 

நான் என்ன சொல்ல வரேன்னா? கேளுங்கோ. சொல்றேன்.

(தொடரலாமா என்று கேட்கலாமா?)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 19

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *