தவறின்றித் தமிழ் எழுதுவோமே(பகுதி-4 இ)

பேரா.பெஞ்சமின் லெபோ

தவறை? தவற்றை? எது சரி?- இறுதிப் பகுதி.

தவறு  என எழுதுவது தவறு, ‘தவற்றை’ என எழுதுவதே சரி! ஏன், எப்படி, எதற்காக என்று (சாக்ரடீசு பாணியில் கேள்வி கேட்காமலே) சென்ற பகுதியில் பார்த்தோம். இடையில்,  கணிவினைஞர் (computer engineer) நண்பர்  கோபி(கோபாலகிருட்டிணன்) புதிர் போலக் கேள்வி ஒன்றை எழுப்பிச் சரியான விடையும் எழுதி மின்னஞ்சல் (05/09/11) அனுப்பி இருந்தார்:

“அவைகள்” உண்டு. “இவைகள்” இல்லை. நான் சொல்வது சரி தானே?இக் கேள்வியும் பதிலும் உங்களுக்குப் புரிகின்றனவா ? ‘அவை’ என்ற சொல்லுக்குச் ‘சபை’ (இது தமிழ்ச் சொல் அன்று) என்பது பொருள். ‘அவை’ (= சபை) ஒருமை, அதன் பன்மை ‘அவைகள்’.

‘இவை’ என்பதே பன்மைதான். அதற்கு மேல் ‘கள்’ போட்டால் மயக்கம்தான் வரும். (Here the suffix ‘kal’ is superfluous – ஆங்கிலம் எனக்கும் தெரியும்  என்று காட்டிக்கொள்ள வேணாமோ!).இதைத்தான் நண்பர் இலக்கிய நயத்தோடு குறிப்பிட்டிருந்தார். இப்படிக் ‘கள்’ போடுவதைப் பற்றிப்  பின்னொரு சமயம் (வாய்ப்பு வரின்) பார்ப்போம்.

இங்கே  கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி  ஒன்று உண்டு. அதற்காகத்தான் இந்தப் பீடிகை! இலக்கண  அறிவு நிறையப் பெற்றோர் யாரேனும் ஒருவர், ‘ஐயா, பீடிகை உம்மைத் தொகை ; பீடியும் கையுமாக இருக்க வேண்டா ; புகை  உடல் நலப் பகை’ என்று கூற மாட்டார்கள் என நம்புவோம்.

பீடிகை=முகவுரை-காண்க:http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88&table=winslow ).

அவை , இவை , எவை  பன்மைப் பெயர்ச்சொற்கள். இவற்றோடு உருபுகள் சேரும் போது என்ன ஆகும்? அவற்றை, இவற்றை, எவற்றை என வரும் இல்லையா? முன் பகுதியில் பார்த்த ‘தவற்றை’, ‘கிணற்றை’, ‘கயிற்றை’ போலவே இவை தோற்றம் தருகின்றன. எனவே இவை எப்படி உருபுகளை ஏற்கின்றனவோ அது போலவே அவை , இவை , எவை என்பன உருபுகளை ஏற்கின்றன. இப்படிச் சொல்வோர் இருக்கக் கூடும். இப்படிச் சொல்வது இலக்கணப் படியும் எரணப் படியும் (logic ; the fallacy of hasty generalisation) வழு.

ஏன், எப்படி, எதற்காக என்று புரிந்துகொள்ள ‘சாரியை‘ பற்றிய விழிப்புணர்வு தேவை. எனவே இப்பகுதியில் சாரியை என்றால் என்ன? என்பதைச்  சுருக்கமாகப்  பார்ப்போம். கட்டடம் கட்டும் போது செங்கற்களை ஒன்றன் மீது ஒன்றாக அல்லது அடுத்தடுத்து வைத்து அடுக்குவார்கள். அவற்றை அப்படியே விட்டு விட்டால் கட்டடம் உறுதியாக நிற்காது. அவற்றை இணைக்க, சேர்த்து அணைக்க-சிமென்ட், மணல், நீர் கலந்த – கலவையைக் கற்களுக்கு இடையில் பூசுவார்கள்.

அது போலப் பகுதி, விகுதி என்ற கற்களை இணைக்க ‘இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் ‘ கலந்த கலவை தேவைப் படும். முந்திய பகுதியில் உள்ள எடுத்துக்காட்டை நினைவு கூர்க. (‘படித்தனன் = படி + த் + த் + அன் + அன்.’) நினைவு கூர்க. இதில் இடம் பெறும் முதல்  ‘அன்’ தான்,  சாரியை.

(இரண்டாம் ‘அன்’,  விகுதியாகும்- உயர்திணை, ஆண்பால், படர்க்கை  ஒருமையைக் காட்டும் விகுதி – இவை எல்லாம் தமிழ் இலக்கணத்தில் பயிலப்படும் கலைச் சொற்கள். புரியவில்லை என்றால் கவலைப்பட வேண்டா ! ).

இத்தகைய  சாரியை  ஒன்பது (இன், வற்று, அத்து, அம், ஒன், ஆன், அக்கு, இக்கு, அன்’) என்பார் பெரியவர் தொல்காப்பியர். இவர் காலத்துக்கும் நம் நண்பர் நன்னூலார் காலத்துக்கும் இடையே பலப்பல நூறு, நூறு ஆண்டுகள் உள்ளன. தமிழ் இலக்கியமும் இலக்கணமும் வளர்ந்து வந்தன. அதனால், நன்னூலார், சாரியை தன்னை  இரண்டாகப் பிரித்துப் பொதுச் சாரியை என்றும் எழுத்துச் சாரியை என்றும் வகுப்பார். இதில் நமக்கு இங்கே வேண்டியது பொதுச் சாரியை மட்டுமே.  அதனைப்  பற்றி மட்டும் இங்கே காண்போம்.

தொல்காப்பியர்  காலத்தில்  ஒன்பதாக இருந்த சாரியை நன்னூலார் காலத்தில் பதினேழாகப் பெருகி விட்டது. (அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம், தம், நம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன்; காண்க: நன்னூல் நூ.243)

பிற்காலத்தில், இதே சாரியை இருபத்து மூன்றாகப் பெருகியது  என்பார் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் அவர்கள். (அன் ஆன் அம் ஆம் அல் அத்து அற்று இன் இற்று தன் தான் தம் தாம் நம்நும் அ ஆ உ ஏ ஐ கு து ன்).

இவற்றுள், இங்கே நம் கவனத்தில் கொள்ள வேண்டியவை இரண்டே: அற்று,அத்து (தொல்காப்பியர் காலத்துக்கு முன்பும் அவர் காலத்திலும் வழங்கிவந்த ‘வற்று’ என்ற சாரியை அவர் காலத்துக்குப்பின் ‘அற்று ‘ என்றாகி விட்டது. காண்க : தொல். எழுத்து – சூ. 119 ; நன். சூ. 244 ). இப்போது ‘சாரியை’ பற்றி ஓரளவு புரிந்தது அல்லவா ? இனி ,  ‘அவை’, ‘இவை’, ‘எவை’  உருபு ஏற்கும் அழகைப் பார்ப்போம்.

‘அவை’, (‘இவை’, ‘எவை’ )  + ஐ (ஆல்  , ஓடு, உடன்….) =?

இப்போது இங்கே ஒரு சிக்கல். ‘அவை’, ‘இவை’, ‘எவை’ என்னும் இச் சொற்களின் இறுதியில் ‘‘ என்னும் முழு உயிர் நிற்கிறது. இதனோடு சேர வரும் உருபுகள் எல்லாமே முழு உயிர்கள். ஐ (ஆல்  , ஓடு, உடன்….) உடலோடுதான் உயிர் சேரும். உயிரோடு உயிர் கலக்குமா? (காதலிலும் கற்பனையிலும் தான் கலக்கும்; இலக்கணத்தில் அன்று!).

இந்த உயிர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு செங்கற்கள். செங்கற்களை எப்படி இணைக்கிறார்கள்? கலவை கொண்டு. அந்தக் கலவையாகப் பயன்படுகிறது ‘சாரியை’. எந்தக் கலவையை எங்கே பயன்படுத்த வேண்டும் எனக் கொத்தனார் நன்கு  அறிவார்.

இலக்கணக் கொத்தனார்  (முக்கியமான) இருவர் நமக்கு உண்டு.  மொழியாகிய (மொழி=சொல்) கட்டடத்தைக் கட்ட இவர்கள்  வழி காட்டுகிறார்கள். மேலே கண்ட  சிக்கலுக்குக்  கொத்தனார்  பவணந்தி முனிவர் (நன்னூல் ஆசிரியர்) தீர்வு தருகிறார்:

வவ்விறு சுட்டிற்கு அற்று உறல் வழியே (நன்னூல், 250).

‘அவை’, ‘இவை’, ‘எவை’   ‘அற்றுச் ‘சாரியை பெற்று உருபு ஏற்கும்.

அவை=அவ்+ஐ+ஐ, அவ்+அற்று+ஐ, அவற்று +ஐ=அவற்றை. இது போலவே இவற்றை, எவற்றை என வரும். இப்படி,  இவை உருபு ஏற்கும் முறை வேறு, ‘தவறு’ போன்றவை உருபு ஏற்கும் முறை வேறு.

அடுத்து மகர ஒற்றில் முடியும் சொற்கள் தமிழில் ஏராளம் உண்டு. அவற்றுள், முதலாவதாக நம் கவனத்தைக்  கவருவது ‘எல்லாம்’என்ற சொல்.’எல்லாம்’ என்பது அஃறிணை, உயர்திணையிலும் அதுவே வரும்.

‘எல்லாம்’ என்பது  அஃறிணையாக வந்தால்,  நன்னூலார்  வழிகாட்டலின்  படி (நன்னூல், 245), ‘அற்று’ச் சாரியை  வந்து வேற்றுமை உருபின்மேல் ‘உம்’ என்ற முற்றும்மையும் பெறும். எல்லாம் + ஐ, எல்லாம்+அற்று+ஐ+உம்=எல்லாவற்றையும்.

உயர்திணைக்கு? இடையே நம் என்னும் சாரியையும், வேற்றுமை உருபின்மேல் உம் என்ற முற்றும்மையும் பெறும். காட்டு : எல்லாம்+ஐ, எல்லா + நம் + ஐ + உம்= எல்லா நம்மையும். இதுதான் பிற்காலத்தில் நம்+எல்லார்+ஐ+உம்= நம் எல்லாரையும் என மாறிவிட்டது.

இனி, மகர  ஒற்றில் முடியும் ஏராளமான சொற்களைத்  தவறாகவே எழுதி வருகிறோம். மனது, வலது, இடது,…இப்படிப்பட்ட சொற்கள் தமிழில் இல்லை, இல்லை, இல்லவே இல்லை! இவற்றுக்கு உருபுகளை ஏற்றி, மனதில், வலதோடு  , இடதை… என்று தமிழ்க் கொலை செய்கிறோம்!

இவற்றின்  சரியான  வடிவம்: மனம், வலம், இடம்… மிகப் பலரும் செய்கின்ற இந்தத் தவற்றுக்குக் காரணம், உண்மை வடிவை அறியாமையே! இப்போது சொல்லிவிட்டேன். இனியாவது திருத்தி எழுதுவோமா?

இந்த மகர  ஒற்றுகள் எப்படி உருபுகளை ஏற்கின்றன?. ‘அத்துச்’ சாரியை பெற்று இவை உருபுகளை ஏற்கும்: மனம்+ஆல், மனம்+அத்து+ஆல், மனத்து+ஆல்=மனத்தால். ஏனைய மகர ஒற்றுச் சொற்களும் இப்படியே ‘அத்து’ச் சாரியை பெறும். காட்டு : குளம்> குளத்தை ; இனம்> இனத்தோடு ; மடம்> மடத்தில் …

வேற்றுமைத் தொகையிலும் இப்படியே  வரும். காட்டு: அறம் + பால், அறம்+(ஐ)+(உடைய)+பால், அறம்+அத்து+(ஐ)+உடைய)+பால்= அறத்துப்பால்.

திருக்குறளில் வரும் அறத்துப் பாலைச் சிலர் ‘அறப்பால்’ என்று அழைப்பதும் உண்டு. அப்படி அழைப்பது மரபு அன்று. எனவே, மகர ஒற்றில்  வரும் சொற்களைக் கவனமாய் எழுதுவோம், ‘அத்து’ச் சாரியை போட்டு உருபுகளைச் சேர்ப்போம். சுருக்கிக் கூறின், சரியான வடிவங்கள்: ‘தவற்றை’, ‘அவற்றை’, ‘எல்லாவற்றை(யும்)’, ‘மனத்தை’.

இனி அடுத்து… ஏதாவது ஒரு  ‘தவற்றை’ச்    சொல்லுங்களேன். சொன்னால், அதனைத் திருத்த முயலாமே!

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “தவறின்றித் தமிழ் எழுதுவோமே(பகுதி-4 இ)

  1. ‘இவை’ என்பதே பன்மைதான். அதற்கு மேல் ‘கள்’ போட்டால் அவை மயக்கம்தான் வரும். அவைகள் மயக்கமும் வரும்.

  2. நன்று
    நலத்துடன் என்பதா
    நலமுடன் என்பதா சரி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *