செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(329)

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

– திருக்குறள் – 104 (செய்ந்நன்றி அறிதல்)

புதுக் கவிதையில்...

தினையளவு மிகச்சிறிய
உதவியே
ஒருவன் செய்திருந்தாலும்,
உதவியதன் பயனை
நன்கு அறிந்தவர்கள்
அதனைப்
பனையளவு
பெரிய உதவியாகவே
கருதுவர்…!

குறும்பாவில்...

செய்த உதவி தினையளவு
சிறிதெனிலும் அதைப் பனைபோல் கருதுவர்,
உதவியதன் பயனை நன்கறிந்தோர்…!

மரபுக் கவிதையில்...

தினையின் அளவே சிறிதெனிலும்
தெரிந்தே செய்த உதவியதை
நினைவில் சிறிதெனக் கொண்டேதான்
நினைவ தகற்றிச் செல்லாமல்,
பனையி னளவுப் பெரிதாகப்
பண்பி லுயர்வெனக் கருதுவரே
அனைத்து முணர்ந்தே உதவியதன்
அரிய பயனதை அறிந்தவரே…!

லிமரைக்கூ..

செய்த உதவி தினையளவு,
உதவியின் பயனதனை நன்றாய் அறிந்தவர்கள்
கொள்வர் அதனைப் பனையளவு…!

கிராமிய பாணியில்...

மறக்காத மறக்காத
செய்த ஒதவிய மறக்காத,
சின்ன ஒதவியா இருந்தாலும்
செய்த ஒதவிய மறக்காத..

தெனயளவு
சின்ன ஒதவி
ஒருத்தருக்குச் செய்தாலும்,
அதனோட பயனப்பத்தி
நல்லாத் தெரிஞ்சவுருக்கு
அது
பனயப் போலப்
பெருசாத் தெரியுமே..

அதால
மறக்காத மறக்காத
செய்த ஒதவிய மறக்காத,
சின்ன ஒதவியா இருந்தாலும்
செய்த ஒதவிய மறக்காத…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.