குறளின் கதிர்களாய்…(334)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்...(334)
களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத்
தொளித்ததூஉ மாங்கே மிகும்.
– திருக்குறள் -928 (கள்ளுண்ணாமை)
புதுக் கவிதையில்...
கள்ளுண்பவன்
கள்ளுண்ணும் போதினிலே,
அவன் மறைத்து வைத்திருக்கும்
குற்றங்கள் வெளிப்பட்டுவிடும்..
எனவே அவன்
கள்ளுண்ணாத போது
யான்
கள்ளுண்ணுவதை அறியேனெனக்
கூறுவதைக் கைவிடுக…!
குறும்பாவில்...
கள்ளுண்கையில் வெளிப்பட்டிடும் குற்றங்கள்,
மறைத்ததைக் கள்ளுண்ணாதபோது கள்ளுண்ணுதல் அறியேனெனக்
கள்ளுண்பவன் கூறுதலை விட்டிடுக…!
மரபுக் கவிதையில்...
கள்ளை யுண்ணும் போதினிலே
கரந்தே செய்த குற்றங்கள்
தெள்ளத் தெளிவாய் வெளிவருமே
தெரிந்து விடுமே எல்லோர்க்கும்,
கள்ள மிதனை மறைத்தேதான்
கள்ள துண்ணா வேளையிலே
கள்ளுண லறியே னென்றொருவன்
களறுதல் கைவிட வேண்டியதே…!
லிமரைக்கூ..
வெளிவந்திடும் குற்றங்கள் குடித்திடும் போதே,
மறைத்ததை கள்ளுண்ணாதபோது யான் கள்ளுணல்
அறியே னென்றே பொய்யுரைக் காதே…!
கிராமிய பாணியில்...
குடிக்காத குடிக்காத
கள்ளு குடிக்காத,
குடிச்சிப்புட்டு குடிக்கலண்ணு
பொய்யச் சொல்லாத..
கள்ளு குடிச்ச போதயில
குடிச்சவன் வாயினாலே அவன்
செய்த குத்தமெல்லாம் வெளிவந்திடுமே,
அத மறச்சி
அவன் குடிக்காதபோது
எனக்குக் குடியப்பத்தி
தெரியாதுண்ணு பொய்சொல்லுறது
தேவயில்லியே..
அதால
குடிக்காத குடிக்காத
கள்ளு குடிக்காத,
குடிச்சிப்புட்டு குடிக்கலண்ணு
பொய்யச் சொல்லாத…!