பிரகாஷ் சுகுமாரன்

“உனக்கென்ன பைத்தியமா ??” கேள்வி கேட்டவர்களை நோக்கி அவன் சிரித்தான். கடந்த சில ஆண்டுகளாக அவனைப் பார்த்து வழக்கமாகப் பலர் கேட்கும் அதே கேள்விதான். எப்போதும் அந்தக் கேள்விக்கு அவனுடைய பதில் மௌனமும் சிரிப்பும்தான். அவனைச் சுற்றி வளைத்திருந்த கூட்டத்தில் அத்தனை பேரின் முகத்திலும் கோபம் கொப்பளித்தது. ஓரளவு அவனைப் பற்றி தெரிந்திருந்தாலும் முழுமையாகத் தெரியாததால் என்ன செய்வதென்று புரியாமல் அவர்கள் விழித்தனர்.

ஊரில் இதுவரை யாரும் செய்யாத விசித்திரச் செயலில் அவன் ஈடுபட்டிருந்தான். காலையில் ஊருக்குள் நுழைந்தவனுடைய உடலில் ஒட்டுத் துணி கூட இல்லை. கடைவீதியில் அவனைக் கண்ட பல பெண்கள் அலறி ஓடினர். சிறுவர்கள் கற்களை வீசியதில் அவனுடைய உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவனுடைய முகத்தில் சிரிப்பு மட்டுமே வெளிப்பட்டது. ஊர்த் தலையாரிக்குத் தகவல் கிடைத்ததும் வந்து அவனுடைய உடலில் துணியைப் போர்த்த முயன்றான். தடுத்த அவனை நையப் புடைத்தும் அவன் ஓட முயலாமல் சிரிப்பை மட்டுமே எதிர்வினையாகச் செய்தான். தலையாரியுடன் வந்த வீரர்கள் அவனைப் பிடித்து ஒரு அறைக்குள் அடைத்து ஊர்ப் பெரியவர்களுக்கு தகவல் அனுப்பினர்.

சூழ்ந்திருந்த கூட்டத்தைச் சிறிதும் சட்டை செய்யாமல் உடல் காயங்களை கவனித்த அவனை அடுத்து என்ன செய்வது என்பது குறித்து ஊர் பெரியவர்கள் விவாதித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியை கடந்து சென்று கொண்டிருந்த குதிரைப் படை தளபதி வந்து கூட்டத்தை விலக்கி அவனை வணங்கியபடி வழியனுப்ப முயன்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கடந்த சில தினங்களுக்கு முன் பக்கத்து ஊரிலும் ஒருவன்  இது போல நிர்வாணமாக நுழைந்த போது தடுக்க முயன்ற மக்களிடமிருந்து அரசுப் படைகள் அவனைப் பாதுகாத்ததும் கூட்டத்தினருக்குத் தெரிந்திருந்தது.

சுற்றியிருந்த மக்களை நோக்கி பேசிய குதிரைப்படை தலைவன், “அன்பான மக்களே உங்கள் கோபத்தின் காரணம் எனக்கு புரிகிறது. இருந்தாலும் இங்கு உங்களிடையே இப்படி நிற்பவர் இந்த நாட்டின் இளவரசு பட்டத்துக்குரியவர். அனைத்துப் போர்ப் பயிற்சிகளும் பெற்ற பெரும் வீரரான இவருடைய கட்டளையை ஏற்று நம்  நாட்டில் நுழைந்து பெண்களையும், செல்வத்தையும் கொள்ளையிட முயன்ற ஆயிரக்கணக்கான எதிரி வீரர்களை நானே கொன்று குவித்துள்ளேன். ஆனால் இவருக்கு இருக்கும் துணிவிலும், ஆற்றலிலும் ஒரு பங்கு கூட எனக்கில்லை. அன்பான மனைவி, அழகான குழந்தைகள் இருந்தும், பெரும் நிலப்பரப்புக்கு அரசனாகும் வாய்ப்பும், தகுதியும் இருந்தும் அவற்றை தூக்கியெறிந்து விட்டு இப்படி உள்ளார். பல ஆயிரம் பேரை கொன்ற என்னால் என் குடும்பத்தினர் முன்னிலையில் ஆடைகளை களைந்து ஒரு நிமிடம் கூட நிற்க தைரியம் இல்லாத நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன் நிர்வாணமாக நிற்கும் இவர் ஒரு மகாவீரர் “ என்றான்.

கூட்டத்தினரை விலக்கி வழியனுப்ப முயன்ற வீரர்களை மதிக்காத அவன் அங்கு கூடியிருந்த மக்களிடம் பேச முற்பட்டான். அவனை தாக்கியவர்கள் மீது அவனுக்கு கோபமில்லை என தெரிவித்தவனிடம் பெண்களும், குழந்தைகளும் நிறைந்த கடை வீதியில் அவன் நிர்வாணமாக வந்ததால் ஏற்பட்ட குழப்பத்தை ஆத்திரத்துடன் தெரிவித்த மக்கள் அமைதிக்கும், அன்புக்கும் பெயர் பெற்றவனும், கொடையாளனும், மதிப்பிட முடியாத செல்வத்தைக் கொண்டவனும், அப்பகுதியின் இளவரசனுமான அவன் அப்படி நடந்து கொள்வது தவறில்லையா என கேட்டனர்.

புன்னகை செய்த அவன் கூறினான் “இத்தனைப் பெரிய ஊரில் நான் ஒருவன் மட்டும் நிர்வாணமாக வருவது, உங்களுக்கு அருவருப்பை தந்ததால் என்னை தாக்கினீர்கள். ஆனால் ஒரு காலத்தில் உங்கள் மூதாதையர் இங்கு இப்படித்தான் வாழ்ந்தனர் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள். ஆடை என்ற ஒன்றை முதன் முறையாக பயன்படுத்தியவனும் அப்போது நிர்வாணமாக திரிந்தவர்களால் பைத்தியக்காரன் எனத் தாக்கப்பட்டிருக்கலாம் அல்லவா?” எனப் பதில் கேள்வி எழுப்பினான். இதற்குப் பதிலளிக்க முடியாமல் திகைத்த மக்களிடம், “ நாட்டின் இளவரசனாக இருந்தபோதும், மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்த போதும் நான் மகிழ்ச்சியாகவே இருந்தேன். இப்போது நம்மால் நமக்காக உருவாக்கப்பட்ட மாய உலகை மறுத்து நிர்வாணமாகத் திரியும் நிலையிலும் நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். ஆனால் செல்வம் பெருகியிருந்தாலும், வறுமையில் வாழ்ந்தாலும் ஏனோ பலர் வேதனையுடனே உள்ளனர். இயற்கையாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், உடல் ஊனம் உடையவர்களின் வேதனைக்கு ஏதோ ஒரு விதத்தில் அர்த்தம் தெரிகிறது. ஆனால் உடல் நன்றாக இருந்தும் பலர் வேதனையுடன் வாழ்வது எனக்கு வேதனையை அளிக்கின்றது.

எந்த நிலையிலும் என் மனதில் மகிழ்ச்சி மட்டுமே உள்ளது. எனக்கு யார் மீதும் கோபம் வந்ததில்லை. யாருடனும் பகையோ, பொறாமையோ, போட்டியோ, ஆதங்கமோ, ஆத்திரமோ ஏற்பட்டதில்லை. எதன் மீதும் பேராசையோ, நிராசையோ இல்லை. ஆனால் ஏனோ மக்கள் வேதனை அடைந்து வருவது மட்டும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அதற்காகச்  செல்வத்தைத் துறந்து, மனைவி, மக்களைப் பிரிந்து, அதிகாரங்களை விட்டு விலகி, பிச்சையெடுத்தும், கிடைத்த இடங்களில் தங்கியும், ஆடைகளைத் துறந்தும் எந்த நிலையிலாவது எனக்கு வேதனை ஏற்பட்டால் அதன் காரணத்தைத் தெரிந்து கொள்ள முயன்று, இப்போது மக்களின் வேதனைகளுக்கு காரணமான பெரும் உண்மையை கண்டுள்ளேன் “ எனத் தெரிவித்தான்.

“மனிதர்களின் வேதனைக்கான காரணங்களும், தவறாகப் புரிந்து கொண்டுள்ள பெரும் உண்மைகளும் தெரிந்து விட்டதால், அதை மக்களுக்கு புரிய வைத்து, அடுத்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்களாவது வேதனை அடையாமல் வாழ முயற்சி செய்து வருகிறேன். பழகிவிட்ட வாழ்வியல் முறையிலிருந்து மக்களை மீட்க புதிய சிந்தனையை உருவாக்கவும், இயற்கையின் வழியில் வாழ்வியலைப் பின்பற்றத் தூண்டவும் உடைகளைத் துறந்து நிர்வாணமாகத் திரிகிறேன் “ என்று அவன் கூறியபோது ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்த மக்கள் அவன் பேசுவதில் இருந்த உண்மை புரிந்தும் புரியாமல் அமைதி காத்தனர்.

 

படத்திற்கு நன்றி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க