சைவத்தைப் பேணிய அம்மையார்-4
சு.கோதண்டராமன்
அம்மையாரின் பெம்மான் காலாலும் கண்ணாலுமே பகைவர்களை அழித்தவன். முப்புரம் எரிக்க அவனுக்குத் தேவைப்பட்டது ஓரம்பு தான். வில்லைக் கூட அவன் கையில் ஏந்தி இருக்கவில்லை. ஆனால் தேவாரக் காலத்தில் அவனிடம் சூலம், மழு ஆகிய ஆயுதங்கள் விளங்குவதைக் காண்கிறோம். பல பகைவர்களை வென்றதன் அடையாளமாகத் தேவாரக் காலத்தில் கொக்கிறகு, ஆமை ஓடு ஆகிய வெற்றிச் சின்னங்கள் அவனிடத்தே விளங்குகின்றன.
இறைவன் புலித்தோலும் மான் தோலும் அணிந்திருப்பதாக அம்மையார் சொல்ல, தேவாரக் காலத்தில் கோவணம் அணிந்தவனாகவும், நக்கனாகவும் கூறப்பட்டுள்ளான். கையில் மான் ஏந்தியவனாகவும் காணப்படுகிறான். பொன்னாரம் மற்றொன்று பூண் என்று அம்மையார் வேண்டியதற்கிணங்கப் பிற்காலத்தில் அவனிடத்தில் தோடு, குழை ஆகிய அணிகளும் விளங்குகின்றன.
அம்மையாரால் கூறப்படாத தக்கன் கதை தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல, பிரமன் தலையைச் சிவன் கொய்தது பற்றிய புராணக் கதையும் அம்மையாருக்குப் பின்னரே எழுந்திருக்க வேண்டும்.
சிவன் இராவணனை மலையின் கீழ் அடர்த்து பாதத் தனி விரலால் செற்றதாக அம்மையார் கூறுகிறார். ஆனால் கைலாயம் என்ற பெயரை ஒரு இடத்தில் கூடக் குறிப்பிடாததால், சிவனைக் கைலாயத்தில் உறைபவராகச் சொல்லும் வழக்கும் அம்மையார் காலத்துக்குப் பின்னரே தோன்றி இருக்கக் கூடும்.
தேவாரக் காலத்தில் இறைவன் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து நான்கு முனிவர்க்கு அறம் உரைத்தது கூறப்படுகிறது. இதுவும் அம்மையாருக்குப் பின் ஏற்பட்ட மாற்றம் ஆகும்.
அம்மையாரின் இறைவன் உமை காண ஆடுகிறான். தேவாரக் காலத்தில் இறைவன் காளி காண ஆடுகிறான்.