குறளின் கதிர்களாய்…(348)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(348)

ஈட்ட மிவறி யிசைவேண்டா வாடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.

– திருக்குறள் -1003 (நன்றியில் செல்வம்)

புதுக் கவிதையில்...

பிறரை விடப்
பொருளதிகம் சேர்க்கவேண்டுமென்று
பொருள் சேர்ப்பதிலேயே
பற்றுள்ளம் கொண்டு,
புகழை விரும்பா மக்கள்
பிறந்து வாழ்தல்
பூமிக்குப்
பெரும் பாரமே…!

குறும்பாவில்...

அதிகம் பொருள் சேர்க்கவேண்டுமென்று
அதிலே பற்றுள்ளம் கொண்டு புகழ்விரும்பார் பிறப்பு,
அகிலத்திற்கு அதிகமான பாரம்தான்…!

மரபுக் கவிதையில்...

அடுத்தவர் தம்மை விடவும்பொருள்
அதிகம் சேர்த்திட வேண்டுமென்ற
திடமது கொண்டே அதன்மீது
தீராப் பற்றது கொண்டேதான்
கிடைக்கும் புகழதை விரும்பாத
கீழ்க்குணம் கொண்டோர் உலகினிலே
அடைந்து விட்ட பிறப்பதுவும்
அதிக சுமைதான் காசினிக்கே…!

லிமரைக்கூ..

பார்த்தே அடுத்தவர் தமையே,
பொருள்சேர்க்கும் பற்றுடன் புகழை விரும்பாதார்,
பிறப்பதுதான் பூமிக்குச் சுமையே…!

கிராமிய பாணியில்...

ஆசப்படாத ஆசப்படாத,
அதிகமா சொத்து சேக்க
அனியாயமா ஆசப்படாத..

அடுத்தவன விடவும்
அதிகமா சொத்து சேக்கணுண்ண
ஆசயில விழுந்து,
கெடைக்கிற புகழக்கூட விரும்பாதவன்
ஒலகத்தில பொறந்த
பொறப்பே வீண்தான்,
பூமிக்கே அவன்
பெரிய பாரம்தான்..

அதால
ஆசப்படாத ஆசப்படாத,
அதிகமா சொத்து சேக்க
அனியாயமா ஆசப்படாத…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.