யோசனை: கூடங்குளம் > சென்னை நடைப் பயணம்

(நறுக்.. துணுக்.. – 4)

அண்ணாகண்ணன்


கூடங்குளத்தில் அமளி துமளி நடக்கையில், கல்பாக்கம் மக்களுக்கும் இந்தியாவின் இன்ன பிற அணு உலையைச் சுற்றியுள்ள மக்களுக்கும் இந்த விழிப்புணர்வு ஏன் இன்னும் வரவில்லை? கைகா அணுமின் நிலையத்தைச் சுற்றி மட்டும் சற்றே எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது. கூடங்குளத்தில் அணு உலை கூடாது எனில், இந்தியா முழுவதுமே கூடாது. இந்த இலக்குடன் மக்கள் கூட்டாகப் போராடக் காணோம்! இதை ஒரு வட்டாரப் பிரச்சினையாக அணுகினால், முழுமையான தீர்வு கிட்டாது.

அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அணு மின்சாரத்திற்கு மாற்றாக, சூரிய ஒளி, கடலலை, காற்றாலை, தாவரக் கழிவுகள்… உள்ளிட்டவற்றிலிருந்து மின்சாரம் எடுத்து, பற்றாக்குறையை ஈடுகட்ட முயலலாம். மின்சாரத்தின் பயன்பாட்டைக் குறைக்கலாம்.  நான் முன்னர் குறிப்பிட்டது போல், நடக்கும் விசையிலிருந்தும் மின்சக்தி ஈட்டலாம்.

யோசனை 6 – நடக்க நடக்க மின்சாரம் http://annakannan.blogspot.com/2009/10/6.html

நீங்கள் நடக்க நடக்க மின்சாரம் பிறக்கும் http://www.eegarai.net/t73733-topic

அணு உலையை எதிர்த்துப் போராடுபவர்கள், மின்சாரக் காலணியை அணிந்து, கூடங்குளம் முதல் சென்னை வரை நடந்து வரலாம்;  இதற்கு அடுத்த கட்டமாக, கூடங்குளம் முதல் தில்லி வரை நடக்கலாம். பிரச்சாரத்திற்குப் பிரச்சாரமாகவும் ஆகும்; மின்சாரத்திற்கு மின்சாரமும் கிடைக்கும். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை விட, இது உற்பத்தித் திறனுடன் கூடிய போராட்டமாக இருக்கும்.

சிறு துளி பெருவெள்ளம்; இப்படி ஒவ்வோர் அடியிலும் நாம் மின் பற்றாக்குறையைச் சமாளிக்கலாம். காந்தியடிகள், தண்டி யாத்திரையின் இறுதியில் உப்பு அள்ளியதைப் போல், நாமும் மின்சார யாத்திரை கிளம்பி, இறுதியில் ஒவ்வொருவரும் சில அலகுகள் (யூனிட்டுகள்) மின்சாரத்தை ஈட்டலாம். ஆபத்தான அணு உலை வழியைக் கைவிட்டு, இப்படி எளிய முறையிலும் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் என அரசுக்குக் காட்டும் விதமாக இந்த விழிப்புணர்வுப் பயணம் அமையும்.

படத்திற்கு நன்றி : http://www.dianuke.org

2 thoughts on “யோசனை: கூடங்குளம் > சென்னை நடைப் பயணம்

 1. அணு உலை பற்றிய செய்தி படித்தேன். அணு உலை மின்சாரத்திற்கு
  மாற்று பல வழிகள் இருக்கின்றன. முக்கியமாக நடந்தே
  மின்சாரத்தைத் தயாரிக்கும் வழி அருமை. கால்நடை
  மின்சாரம் என்பது ஒன்றும் இழிவானதல்ல. நம் கால்களே
  நமக்கு வேண்டிய மின் சக்தியை தயாரிப்பது நமக்கு
  எவ்வளவு பெருமையான விஷயம். இந்த இடத்தில
  “மடியிலான் தாள் உளாள் தாமரையினாள்” என்ற
  வள்ளுவரின் வாசகம் தான் நினைவுக்கு வருகிறது.
  இரா.தீத்தாரப்பன், ராஜபாளையம்.

 2. கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சனையினை இவ்வளவு தூரம் பெரிது படுதுபவதற்க்கு காரணம் “நிஜ காரணம்” என்ன என்ன என்பது யாருக்கும் இன்று வரை புரியவில்லை. உங்களது கருத்துக்கள் அதுவும், கூடங்குளத்தில் அணு மின்நிலையம் கூடாது எனில் இந்தியாவில் உள்ள அணு மின்நிலையங்கள் அனைத்தும் கூடாது என்பது நல்ல யோசனை. மேலும், நடக்க நடக்க மின்சாரம் நன்றாக உள்ளது இது சாத்தியமென்றால் இனி மின்சாரத்தட்டுபாடுகளை ஓரளவுக்கு சமாளித்துகொள்ளலாம். இந்தியா முழுவதும் நடைபயணம் என்பது கொஞ்சம் சாத்தியமில்லை என்றாலும், தினமும் நடைபயிற்சி மேற்கொள்ளும் கடற்கரை பகுதி மற்றும் நகர்களில் உள்ள பூங்காக்கள் போன்றவற்றில் இந்த “நடக்க நடக்க மின்சாரம்” உருவாக்க அந்தந்த மாநகராட்சி… நகராட்சி… ஊராட்சி… போன்ற உள்ளாட்ச்சிகள் மூலமாக அனைத்து நடைமுறைகளையும் உருவாக்கலாமே. இதனால் அந்தந்த பகுதியில் உள்ள தெருவிளக்குகளாவது பயன் பெரும். என்ன உண்மைதானே…? இதற்கிடையில், கூடங்குள பிரச்சனையின் ஆணிவேரினை கண்டுபிடித்து வெட்டி எரிய வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல…! பொதுமக்களாகிய நமது கடமையும் கூட…! பொது மக்களும் இதுபோன்ற பொது பிரச்சனைகளில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்காமல் அணுமின்நிலையம் ஓபன் பண்ண சம்பந்த பட்ட அலுவலர்கர்களுக்கு ஆதரவாக உடனடியாக ஆங்காங்கே களம் இறங்க வேண்டும். பொது மக்களேஇது போன்ற நாட்டுக்கு தேவையான பிரச்சனைகளில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்காமல். உடன் வந்து ஆதரவு தெரிவியுங்கள். கண்டிப்பாக நாடு நலம் பெறும்.
  by சங்கரநாராயணன் பாலசுப்ரமணியன்
  சென்னை.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க