தென்னகத்தின் முன்னோடிப் பெண் புரட்சியாளர்

0

-மேகலா இராமமூர்த்தி

ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய அனைவருக்கும் பொதுவான கல்விமுறையானது இந்தியாவில் பல மறுமலர்ச்சி நிகழ்வுகளுக்கு வித்திட்டது. அதன் நீட்சியாகத் தமிழகத்திலும் நெடுங்காலமாக நிலவிவந்த பெண்ணடிமைத்தனத்திற்கும், பெண்கல்வி மறுப்பிற்கும் எதிராகப் பல கலகக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.

அவ்வகையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெண்களின் முன்னேற்றத்துக்காகத் தென்னகத்தில் முதலில் ஓங்கி ஒலித்த பெண்குரலுக்குச் சொந்தக்காரர் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார் ஆவார்.

”அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு” என்ற உதவாத சித்தாந்தத்தில் ஊறியிருந்த மக்கள் வாழ்ந்திருந்த அன்றைய காலச்சூழலில், தம் முன்னேற்றத்திற்கெதிரான அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து சிறந்த கல்வியாளராகவும், சமூகச் சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்த முத்துலட்சுமி அம்மையார், தம் வாழ்க்கையைச் செம்மையாக்கிக் கொண்டால் போதுமென்று எண்ணாமல், பிற பெண்களும் வாழ்வில் முன்னேற வேண்டும், அவர்களுக்கெதிரான சமூகக் கொடுமைகள் மடியவேண்டும் என்று அரும்பாடு பட்டவர். அந்தச் சாதனைப் பெண்மணியின் வாழ்க்கையை, தன்னலமற்ற தொண்டுகளை அனைவரும் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம்!

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 1886ஆம் ஆண்டு, ஜூலை 30ஆம் நாள் நாராயணசாமி ஐயருக்கும், தேவதாசிச் சமுதாயத்தைச் சேர்ந்த சந்திரம்மாளுக்கும் மகளாய்ப் பிறந்தவர் முத்துலட்சுமி அம்மையார். தேவதாசிச் சமூகப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதால் தம் குடும்பத்திலிருந்து விலக்கிவைக்கப்பட்டார் நாராயணசாமி ஐயர் என்று தெரியவருகின்றது. இந்த 21ஆம் நூற்றாண்டிலும் சாதிக் கொடுமைகளும் ஆணவக் கொலைகளும் குறையாதிருக்கும் நிலையில், 19ஆம் நூற்றாண்டிலேயே மிகத் துணிச்சலாகச் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்ட நாராயணசாமி ஐயர் நம் பாராட்டுக்குரியவர்!

தந்தைவழித் தொடர்புகள் அற்றுப்போய் தாய்வழித் தொடர்புகளே இறுக்கமாய் இருந்த நிலையில், தேவதாசிகள் சமூகத்தில் சந்திக்கும் அனைத்துச் சிக்கல்களையும் சங்கடங்களையும் அனுபவபூர்வமாக உணரக்கூடிய வாய்ப்பு முத்துலட்சுமி அம்மையாருக்கு இளமையிலேயே அமைந்தது. பின்னாளில் தேவதாசி ஒழிப்புமுறைக்கு அவர் கடுமையாய்ப் போராடியதற்கு அதுவே காரணமாய் அமைந்தது எனலாம்.

முத்துலட்சுமி அம்மையாரின் தந்தையும், வேறுசில ஆசிரியர்களும் வீட்டிலேயே அவருக்குக் கல்வி கற்பித்தனர். அதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் முத்துலட்சுமி அம்மையார் கல்விபயில விரும்பினார். ஆனால் பெண்ணாக இருந்த காரணத்தால் ஆண்கள் மட்டுமே பயிலும் அக்கல்லூரியில் கல்வி பயில அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அம்மட்டோ? அவரைக் கல்லூரியில் சேர்க்கக் கூடாது எனவும் பழமைவாதிகள் பலர் அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கல்வியில் முத்துலட்சுமியாருக்கு இருந்த ஆர்வத்தையறிந்த புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான், மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறிக் கல்வி உதவித் தொகையுடன் கல்லூரியில் பயில முத்துலட்சுமி அம்மையாருக்கு இடமளித்தார்.

அங்குக் கல்வியை நிறைவுசெய்த பின்னர், 1907ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார் முத்துலட்சுமி அம்மையார். ஆண்கள் கூட்டத்துக்கிடையே அங்கே கல்விபயின்ற ஒரே மாணவியாகத் திகழ்ந்த அவர்,  அக்கல்லூரியின் அறுவை சிகிச்சைப் பிரிவில் முதலாவது மாணவியாகத் தேர்ச்சிபெற்றுத் தங்கப்பதக்கம் வென்று, 1912இல் ‘தங்க மங்கை’யாகக் கல்லூரியைவிட்டு வெளியில் வந்தார்.

அப்போது மேல்தட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைபெற்ற பெண்கள் பலர், பெற்ற குழந்தைக்குப் பாலூட்டாமலும் தேவையான பராமரிப்பை வழங்காமலும் அவற்றையெல்லாம் கவனிக்கும் பொறுப்பை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களிடம் ஒப்படைத்திருப்பதைக் கண்டு மனம் வருந்திய மருத்துவர் முத்துலட்சுமியார், பெற்ற தாயால் ஊட்டப்படும் தாய்ப்பாலின் சிறப்புகள் குறித்து அந்த மேல்தட்டுப் பெண்களுக்கு விழிப்புணர்வூட்டினார்.

மருத்துவம் படித்தவரும், முற்போக்குச் சிந்தனையாளருமான டாக்டர் சுந்தரரெட்டி என்பவரைத் தமது 28-வது வயதில் 1914ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் முத்துலட்சுமி அம்மையார். தம்மை எல்லாவகையிலும் சரி சமமாய் நடத்தவேண்டும்; தம்முடைய சமூகச் செயற்பாடுகளிலும், தனிப்பட்ட விருப்பங்களிலும் தலையிடக்கூடாது போன்ற நிபந்தனைகளின் அடிப்படையிலேயே முத்துலட்சுமியார் இந்தத் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார் என்ற செய்தி இன்றைய நவநாகரிகப் பெண்களுக்குக்கூட வியப்பளிக்கக்கூடிய ஒன்றே!

 1926-ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற உலகப் பெண்கள் மாநாட்டில் 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதில் இந்தியாவின் சார்பில் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார் கலந்து கொண்டார். அம் மாநாட்டில் ”ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேற வேண்டும்; பெண்களை அடிமைகளாக நடத்துவதை ஒழிக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

அன்னிபெசன்ட் அம்மையார் மற்றும் மகாத்மா காந்தியின் சித்தாந்தங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்த மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார், பெண்கள் முன்னேற்றத்திற்கான இயக்கங்களிலும் பங்கேற்றார். இந்திய மகளிர் சங்கத்தின் சார்பில் (Women’s Indian Association) 1926இல் சென்னை மாகாணச் சட்ட மேலவையின் உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார்.

தம்முடைய மருத்துவப் பணிக்கு அஃது இடையூறாக இருக்குமோ என்ற எண்ணத்தின் காரணமாக, ஆரம்பத்தில் அப்பொறுப்பை ஏற்க அவர் தயக்கம் காட்டியபோதிலும், பாரதி கண்ட புதுமைப் பெண்ணான அவர், உடனேயே அத்தயக்கத்தை உதறி, பெண்கள் தங்களது வீட்டைக் காக்கும் திறனை நாட்டை கட்டமைப்பு செய்வதிலும் காட்ட வேண்டுமென உறுதிபூண்டு அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 1927 முதல் 1930 வரையிலான காலக்கட்டத்தில் சென்னை மாகாணச் சட்டமேலவையின் துணைத் தலைவராகவும் அவர் பதவி வகித்தார்.

அப்போது, கோயில்களில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்குப் பொட்டுக் கட்டி இறைவனுக்கு மனைவியாக்கும் தேவதாசி முறையை ஒழிப்பதற்கான சட்டமசோதாவை முன்மொழிந்து, ”தேவதாசி நடைமுறையானது உடன்கட்டை ஏறுதலைவிட மிக மோசமானது; மதத்தின் பெயரால் நடைபெறும் குற்றச்செயல் அது” என்று துணிச்சலோடு வாதிட்டார்.

தேவதாசி ஒழிப்புமுறைக்கு எதிராகக் காங்கிரசைச் சேர்ந்த தீரர் சத்தியமூர்த்தி போன்றோர் இருந்தனர். “ தேவதாசி முறையானது பழங்காலந்தொட்டுப் பின்பற்றப்பட்டுவரும் சமயம் சார்ந்த ஒரு வழக்கம்; தேவதாசிகளே நம்முடைய மரபுசார் கலைகளைப் பாதுகாப்பவர்களாகவும் உள்ளனர். எனவே, இம்முறையை ஒழிக்கக்கூடாது” என்று அவர் சட்டமன்றத்தில் வாதிட்டபோது, அதுகேட்டுக் கொதித்தெழுந்த முத்துலட்சுமி அம்மையார், ”தேவதாசிகள் எனும் குலம் அழியாமல் காக்கப்பட வேண்டியது அவசியம் என்று நீங்கள் கருதும்பட்சத்தில், நெடுங்காலமாக தேவதாசிகளாக இருந்துவிட்ட பெண்களுக்கு அதிலிருந்து விடுதலை அளித்துவிட்டு, ஏன் உங்கள் பார்ப்பன குலப் பெண்களை தேவதாசிகளாக்கக் கூடாது?” என்று காட்டமாய்க் கேட்டார்.  

முத்துலட்சுமி அம்மையார் முன்மொழிந்த இந்த மசோதா, 1947இல் மெட்ராஸ் தேவதாசிச் சட்டம் (Madras Devadasi Act) என்ற பெயரில் சட்டமானது. இதன் மூலம் தேவதாசிகள் திருமணம் செய்து கொள்ளச் சட்ட உரிமை கிடைத்தது.

பெண்களின் திருமண வயதை 14ஆக உயர்த்தக் கோரும் மசோதா குறித்துச் சட்டமன்றக் கவுன்சிலில் விவாதம் நடந்தபோது, ”உடன்கட்டை ஏறும் பழக்கத்தால் ஏற்படும் துயரம் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே அனுபவிக்கக் கூடியதாய் இருக்கும்; ஆனால், குழந்தைகளுக்குத் திருமணம் செய்யும் பழக்கத்தால், பெண் குழந்தைகள் பிறப்பு முதல் இறப்பு வரையில் தொடர்ந்து துயரமான வாழ்வுக்கு அடிமைப்பட்டுப் போகும் நிலை உள்ளது. குழந்தைப் பருவ மனைவி, குழந்தைப் பருவத் தாய், ஏன் பல சமயங்களில் குழந்தைப் பருவத்திலேயே கைம்பெண் எனத் துயரங்கள் தொடர்கின்றன” என்று பெண்களின் அவல வாழ்வை உணர்வுபூர்வமாய்ப் பேசினார் முத்துலட்சுமி அம்மையார். `சட்டமன்ற உறுப்பினராக எனது அனுபவங்கள்’ (My Experience as a Legislator) என்ற தமது புத்தகத்திலும் இவற்றைக் குறிப்பிட்டுள்ளார் அவர்.

குழந்தைத் திருமண நடைமுறையை ஒழிக்கக் கோரும் மசோதா குறித்துப் பத்திரிகைகளில் செய்தி வெளியானபோது, பழமைவாதிகள் பொதுவெளியிலும், பத்திரிகைகள் மூலமும் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்கலைக்கழகப் பட்டதாரிகளும்கூட அதனை எதிர்த்தனர் என்று முத்துலட்சுமி அம்மையார் வேதனையோடு குறிப்பிடுகின்றார்.

உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்ட காந்தியடிகளை 1930இல் சிறையில் அடைத்தது வெள்ளை அரசு. அதை எதிர்த்துத் தம்முடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார் முத்துலட்சுமி அம்மையார்.

தேவதாசி முறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பெண்கள் தங்கிப் படிப்பதற்குத் தம்முடைய வீட்டில் ’அவ்வை இல்லம்’ என்ற பெயரில் 1930இல் ஓர் இல்லத்தைத் தொடங்கினார். 1936இல் அந்த இல்லம் மயிலாப்பூரில் ஒரு வாடகை இடத்துக்கு மாற்றப்பட்டு, பிறகு அடையாற்றுக்கு மாற்றப்பட்டது. முதலில் தேவதாசி முறையில் இருந்து வெளியில்வந்த பெண்களுக்காகத் தொடங்கப்பட்ட அந்த இல்லமானது பின்னாளில் அடைக்கலமும், கல்வியும் தேவைப்படும் எல்லாப் பெண்களுக்கும் உரியதாக மாற்றமும் வளர்ச்சியும் பெற்றது.

அக்காலக்கட்டத்தில் கல்வியாளர் சர் பிலிப் ஹார்டாக் (Sir Philip Hartog) என்பவர் தலைமையில் இந்தியாவின் கல்விவளர்ச்சி குறித்து ஆராய்வதற்கோர் குழு பிரிட்டிஷ் இந்திய அரசால் அமைக்கப்பட்டது. அக்குழுவில் இடம்பெற்றிருந்த ஒரே பெண் உறுப்பினர் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரே ஆவார். இந்தியாவிலுள்ள பெண்களின் கல்விநிலையை அறிய இந்தியாவெங்கும் ஏராளமான பயணங்களை மேற்கொண்டார் அவர். அவருடைய அந்த உழைப்பைப் போற்றும் வகையில், 1947ஆம் ஆண்டு இந்திய விடுதலையின்போது செங்கோட்டையில் ஏற்றப்பட்ட சுதந்தரக் கொடியில் இணைக்கப்பட்ட தலைவர்களின் பெயர்வரிசையில் முத்துலட்சுமி அம்மையாரின் பெயரும் இடம்பெற்றது.

புற்றுநோயால் தம்முடைய இளைய சகோதரி எதிர்பாராத விதமாக  மரணித்தது பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாருக்கு அளித்தது. அதற்குச் சில ஆண்டுகள் கழித்துத் தம்முடைய மேற்படிப்பைத் தொடர இலண்டன் சென்ற முத்துலட்சுமி அம்மையார், அங்கே இராயல் மார்ஸ்டென் (Royal Marsden) மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் எர்னஸ்ட் மைல்ஸை (Dr. Ernest Miles) சந்தித்துப்  புற்றுநோய்த் தாக்கிய நோயாளிகளுக்கு அவர் அளிக்கும் சிகிச்சைகளை நேரில் கண்டறிந்தார். தமிழகத்திலும் அதுபோன்றதொரு மருத்துவமனையை உருவாக்க வேண்டும் எனும் எண்ணம் அவர் உள்ளத்தில் அப்போது ஏற்பட்டது.

தாயகம் திரும்பியதும், நல்லுள்ளம் கொண்டவர்களிடம் நிதி திரட்டியும், இந்தியப் பெண்கள் சங்கத்தின் உதவியோடும் அடையாற்றில் புற்றுநோய் மருத்துவமனையைத் தொடங்கும் பணியில் முழுமூச்சாய் இறங்கினார் முத்துலட்சுமி அம்மையார். அன்றைய பாரதப் பிரதர் பண்டித நேரு அவர்கள் 1952இல் அம் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். 1954இல் மருத்துவமனை கட்டிமுடிக்கப்பட்டுச் செயற்படத் தொடங்கியது.

மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனைக்குப் பிறகு இந்தியாவிலேயே புற்றுநோய்க்காக உருவாக்கப்பட்ட இரண்டாவது சிறப்பு மருத்துவமனை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையே ஆகும். இன்று உலக அளவில் அம் மருத்துவமனை புகழ்பெற்றுத் திகழ்வதோடு, பல்லாயிரக்கணக்கான புற்றுநோயாளிகளின் நோயைத் தீர்த்துச் சாதனை படைத்துவருவதையும் நாமறிவோம். அதற்குக் காரணமாயிருந்தவர் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார்.

மருத்துவம் மற்றும் சமூகப் பணிகளில் சிறந்த பங்களிப்பு செய்தமைக்காக 1956ஆம் ஆண்டு முத்துலட்சுமி அம்மையாருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
(664) என்பார் வள்ளுவர்.

அதுபோல் பெண்களுக்கெதிரான சமூக அவலங்களை மேடைபோட்டுச் சுட்டிக்காட்டுவது எளிது; அதற்குத் தீர்வு காண்பது மிக அரிது.  ஆனால், முத்துலட்சுமி அம்மையாரோ செயல் வீராங்கனையாகவும் களமிறங்கிச் சாதித்தார்.

கல்வி எனும் கண்ணிழந்து, அறிவொளி குன்றி, வீட்டுக்குள் முடங்கியும் அடங்கியும் கிடந்து, ஆண்களின் பாலியல் சுரண்டலுக்கும் கொடுமைகளுக்கும் ஆளான பெண்குலத்தின் அடிமை விலங்கொடித்து, அவர்களின் முன்னேற்றத்துக்கும் நல்வாழ்வுக்கும் அயராது பாடுபட்டுச் சட்டங்கள் பல இயற்றிப் பெண்களின் வாழ்வில் விடிவெள்ளியாய்த் திகழ்ந்தவர் முத்துலட்சுமி அம்மையார். அவர் 1968ஆம் ஆண்டு தம்முடைய 81ஆவது அகவையில் காலமானார்.

அவருடைய பிறந்த நூற்றாண்டையொட்டி 1986இல் தமிழக அரசு அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டுச் சிறப்பித்தது. 2019ஆம் ஆண்டு கூகிள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு முத்துலட்சுமி அம்மையாரின் 133ஆவது பிறந்த ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்தது.

அன்பே வடிவாய்க் கொண்டு, உயர்ந்த கல்வியறிவு, சிறந்த கொள்கைகள் ஆகியவற்றை அணிகளாய்ப் பூண்டு, துணிச்சலையும் தன்னம்பிக்கையையுமே ஆயுதங்களாய் ஏந்திச் செயற்கரிய சாதனைகள் பலவற்றை அநாயாசமாக நிகழ்த்திச் சென்றிருக்கும் மகத்தான பெண்மணியான மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார், இன்றைய புதுயுகப் பெண்களும் அறிந்து பின்பற்றவேண்டிய சிறந்த வாழ்க்கை வழிகாட்டியாவார்!

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

https://en.wikipedia.org/wiki/Muthulakshmi_Reddy
https://www.bbc.com/tamil/india-45003076
https://www.dinamani.com/editorial-articles/special-stories/2020/mar/08/womens-day—muthulakshmi-reddy-3376050.html
https://www.vikatan.com/oddities/women/131624-memories-about-dr-muthulakshmi-reddy

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *