குறளின் கதிர்களாய்…(363)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(363)

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ யருள்கெடுத்
தல்ல லுழப்பிக்குஞ் சூது.

– திருக்குறள் – 938 (சூது)

புதுக் கவிதையில்

சூதாட்டம்
கைப்பொருள் அழித்துப்
பொய்சொல்ல வைத்து
மனதில் தோன்றும்
அருளையும் அழித்துவிடும்,
அதனால்
இம்மை மறுமை
இன்பங்களைத் தடுத்தே
துன்பத்தில்
துடிக்க வைத்திடுமே…!

குறும்பாவில்

பொருளழித்துப் பொய்செல்ல வைத்து
மனத்தகத்தே அறமதைக் கெடுத்து, சூது
இருமையிலும் துன்பமே தரும்…!

மரபுக் கவிதையில்

உள்ள பொருளை அழித்துவிட்டே
உண்மை மறந்து பொய்சொல்லும்
கள்ளத் தனமும் கற்கவைத்து
கனிந்த இதயம் காட்டுகின்ற
உள்ள அறத்தைக் கெடுத்தேதான்
உலகில் இம்மை மறுமையிலும்
கொள்ளா அளவில் இடர்தருமே
கொடிய பழக்கம் சூததுவே…!

லிமரைக்கூ

கொடிய பழக்கம் சூது,
பொருளழித்துப் பொய்யனாக்கி மனவறம் கெடுத்துத்
துன்பமே தந்திடும் தீது…!

கிராமிய பாணியில்

வேண்டாம் வேண்டாம்
சூதாட்டம் வேண்டாம்,
வேதன தந்திடும்
சூதாட்டமே வேண்டாம்..

அது
கையில உள்ள
காசயெல்லாம் அழிச்சி
பொய்சொல்ல வச்சி,
மனசுல வருற
எரக்கமே இல்லாமக் கெடுத்து
ஒலக வாழ்க்கயிலயும் அப்புறமும்
இன்பமே இல்லாம ஆக்கித்
துன்பத்தயே தந்திடுமே..

அதால
வேண்டாம் வேண்டாம்
சூதாட்டம் வேண்டாம்,
வேதன தந்திடும்
சூதாட்டமே வேண்டாம்…!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க