ஆன்மீகத்தை அகம் நிறைத்தார் பாரதி!

0

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … ஆஸ்திரேலியா

பாட்டுத்திறத்தாலே பாரினைப் பார்க்க வைத்தவர் பாரதி. இந்தியத் திரு நாட்டின் ஈடில்லாப் புதல்வர் பாரதி.அஞ்சாமையுடன் அறமுரைத்தவர் பாரதி.அன்னைத் தமிழை அரியாசனம் வைத்தவர் பாரதி.ஒற்றுமைக்கு உர மூட்டியவர் பாரதி.ஒடுக்கப்படுதலை உதறியே எறிந்தவர் பாரதி. நம்பிக்கையினை உயிர்மூச்சாய் ஆக்கியவர் பாரதி. மூடத்தனத்தின் முடைநாற்றம் போக்கியவர் பாரதி.உயர்திணை அஃறிணை என்று பாராமலே உணர்வு டன் பார்த்தவர் பாரதி.

பாரதியார் ஒருபக்கம் பார்த்தவர் அல்ல. அவரின் நோக்கு பரந்து விரி ந்தது. அவரின் படைப்புகளும் பலதிறப்பட்டன. தேயத்தைப் பாடினார். சாதி யைப் பாடினார். சன்மார்க்கத்தைப் பாடினார். பெண்மையைப் பாடினார். மனிதர்க்குத் தேவையான உண்மையை பாடினார்.முடைநாற்றம் வீசுகின்ற மூடத்தனத்தைப் பாடினார். பாப்பாவுக்கும் பாடினார். படித்தவர்க்கும் பாடி னார். பாமரர்க்கும் பாடினார். கவிபாடி ஓயாத பாரதியார் கதைகளும் எழு தினார். கட்டுரைகளும் எழுதினார். புதுக்கவிதை என்னும் வழியிலும் பய ணம் செய்தார். ஆயினும் இவற்றை எல்லாம் எழுதும் வேளை  ஆன்மீக உணர்வுடனேயே எழுதியிருக்கிறார். ஆன்மீகமே உறுதுணை என்னும்  அசையா நம்பிக்கையினை அகம்முழுவதும் பாரதி வைத்திருந்தார் என்பது கருத்திருத்த வேண்டியதாகும்.

பாரதி என்பவர் பாரதநாட்டின் சொத்தாகி நின்றார். ஆனால் இன்று பாரெ ங்கும் பாரதியைக் கொண்டாடி வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. நாத்திகரும் கொண்டாடுகிறார்கள். ஆத்திகரும் கொண்டாடி பெருமைப்படுகிறார்கள். பாரதி நாத்திகரா அல்லது ஆத்திகரா என்று எண்ணிப் பார்க்கும் பொழுது  அவரை எந்தவிதத்தில் எடுப்பது என்று வரும் பொழுது அவர் ஆத் தீகத்தில் அமிழ்ந்து விடுவதைக் காணமுடிகிறது எனலாம். எழுச்சி யைப் பாடினாலும்எதிர்ப்பைப் பாடினாலும்,   விடு தலையைப் பாடினா லும்வெற் றியைப் பாடினாலும் – ஆன்மீகத்தை அகத்தில் நிறைத்தே பாரதி பாடியிருக்கிறார் என்பதையே  கண்டிட முடிகிறது.

பக்தி உடையர் காரியத்தில்
பதறார்! மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்கும் தன்மையைபோல்
மெல்லச் செய்து பயனடைவார்!
சக்தி தொழிலே அனைத்துமெனில்
சார்ந்த நமக்கு சஞ்சலமேன்?
வித்தைக்கு இறைவா! கணநாதா
மேன்மைத் தொழிலிற் பணியெனையே!

வித்தைக்கு இறைவனாக இருப்பவனே கணநாதனே என்கிறார்.அகத்தினில் பக்தியை அமர்த்தி இருப்பவர்கள் வாழ்க்கையில் பதறார் சிதறார் என்று நம்பிக்கையுடன் பாரதி சொல்லுகிறார்.உலகின் இயக்கமே சக்திதான். அந்தச் சக்திதான் எம்மையெல்லாம் வாழ்விக்கிறது. வழியினைக் காட்டு கிறது என்பதில் முழு நம்பிக்கையினை பாரதி கொண்டிருந்திருக்கிறார்.

பாரதி சிந்தனையில் பெரும்பங்கு வகித்த ஆன்மீகத்தைப் பற்றியும்பார தியின் ஆன்மீகத் தேடலின் நோக்கம் பற்றியும்எதை இலக்காகக் கொண்டு பாரதி தன் ஆன்மீகத் தத்துவத்தைக் கட்டமைத்தான். என்பது பற்றியும் பார் ப்பது முக்கியமாகும். பாரதி பாப்பாவுக்கு என்று பாட்டு எழுதுதினான்.பாப்பா பாட்டுத்தானே என்று  சாதாரணமாக எடுத்து விடக் கூடாது. பசுமரத்தாணி போல் ஆன்மீகத்தை – ஆன்மீகம் என்று காட்டாமலேயே பாரதி அதற்குள் புகுத்தி விடுகிறான். எதைப் பார்த்தாலும் அதிலெல்லாம் ஆன்மீகக் கருக் கள் முளைக்க வேண்டும் என்பதுதான் அவனின் அகத்தின் அவாவாக அமைந்தது எனலாம்.

கொத்தித் திரியுமந்தக் கோழி – அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் – அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.

பாலைப் பொழிந்துதரும் பாப்பா, – அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.

வண்டி இழுக்கும்நல்ல குதிரை – நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, – இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.

பொய் சொல்லக் கூடாது பாப்பா – என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா – ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.

துன்பம் நெருங்கிவந்த போதும் – நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு – துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.

வேத முடையதிந்த நாடு, – நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் – இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.

சாதிகள் இல்லையடி பாப்பா; – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதிஉயர்ந்தமதிகல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; – தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; – இது
வாழும் முறைமையடி பாப்பா.

இப்பாடல்கள் அத்தனையும் பாப்பாவுக்குப் பாடப்பட்ட பாடல்கள்தான். ஆனால் இப்பாடல்கள் வழியே பாரதி தெய்வீக உணர்வை ஊட்டுகிறான். சிந்தனைகளை ஆன்மீகம் என்னும் வெளிச்சத்தில் காட்டியும் நிற்கிறான் என்பதை அகமிருத்துவது அவசியமாகும். பாப்பாக்களுக்குச் சொல்லப்பட்ட அத்தனையும் வளர்ந்த எங்களுக்கும் நல்ல வரமாக இருக்கிறது என்பதை மறுத்து உரைத்திட முடியுமா சொல்லுங்கள்! சாதி பற்றிச் சொல்லுகிறான். உயர்வு தாழ்வு பற்றி உரைக்கின்றான். அறத்தை, அன்பை, அகிம்சையை, என்று எல்லாவற்றை யும் இதில் கொண்டுவந்து தந்துவிடுகிறான். பாரதி காட்டும் இத்தனையும் நல்ல ஆன்மீகம்தானே! 

கீதையினைத் தொடாதவர்கள் இல்லையென்றே சொல்லலாம்.இந்தியத் திருநாட்டின் தலைவர்கள் யாவருமே கீதையினை மனமிருத்தி வைத் திருந் தார்கள்.கீதையின் நாயகன் கண்ணனே தெய்வமாய் காட்சி கொடுத்தான். கீதை யும் கீதை சொன்ன கண்ணனும் பாரதியின் உள்ளத்தில் ஊன்றியே இருந்ததை அவனின் பல சிந்தனைகள் எமக்கெல்லாம் தெரியப் படுத்தியே நிற்கின்றன. பாரதியின் தத்துவத் தேடல்களே அவரின் படைப்புகளாக மலர்ந்திருக்கின்றன என் பது மனங்கொள்ளத்தக்கதாகும். ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்காகவோமொழியி னருக்காகவோ,நாட்டினர்க்காகவோ அல்ல அவரின் தேடல்களாகும். அந்தத் தேட ல்கள் மனிதகுலம் முழுமைக்குமான தேடல்கள் என்றுதான் எண்ணுதல் வேண்டும்.. எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கவே நாளும் சிந்தித்த பாரதி அனைத்து உயிர்க் குலத்துக்குகுமான சமத்துவத்தைக் கீதையில் கண்டார். பாரதியின் தேடல் முழுமை பெற்ற இடம் அதுதான்.

“எல்லாம் கடவுள் மயம் அன்றோஎவ்வுயிரினும் விஷ்ணுதானே நிரம்பியிருக் கிறான்ஸர்வமிதம் ப்ரஹம்! பாம்பும் நாராயணன்நரியும் நாராயணன். பார்ப்பா னும் கடவுளின் ரூபம்பறையனும் கடவுளின் ரூபம். இப்படியிருக்க ஒரு ஜந்து வை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தால் அஞ்ஞானத்திற்கு லட்சணம். அவ்விதமான ஏற்றத்தாழ்வு பற்றிய நினைப்புகள் உடையோர் எக்காலத்தும் துக்கங் களிலிருந்து நிவர்த்தியடைய மாட்டார். வேற்றுமையுள்ள இடத்தில் பயமுண்டுஆபத்துண்டுமரணமுண்டுஎல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம். அதுவே முக்திக்கு வழி.” 

என்று பகவத்கீதைக்கு பாரதி எழுதியிருக்கும் – முன்னுரையில் காட்டியிருக்கும் சிந்தனை அவரின் ஆன்மீகத்தின் நிலையினைக் காட்ட முயலுகிறதல்லவா! 

பாரதி பகவத்கீதையினை எப்படிப்பார்க்கிறார். அவரின் உள்ளம் எப்படி ஆன்மீக த்தை நாடி நிற்கிறது என்பதை அவரின் ஒவ்வொரு வார்த்தைகளும் புலப்படுத்தி யே நிற்கின்றன. பாரதியின் இந்த உள்ளம் விநாயகர் நான்மணி மாலையினை ஆக்கி அளிக்கும் நிலையில் அதனுள்ளும் வெளிப்பட்டும் நிற்கிறது என்பதையும் காணமுடிகிறது.

நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்
  இமைப்பொழுதும் சோராதிருத்தல்
  சிந்தையே இம்மூன்றும் செய்”

மறவாதிருப்பாய் மடமை நெஞ்சே
    கவலைப் படிதலே கருநரகமம்மா
    கவலையற்றி ருத்தலே முக்தி”

துயரிலாது இங்கு
  நிச்சலும் வாழ்ந்து நிலைபெற்று ஓங்கலாம்
  அமரத் தன்மை எய்தவும்
  இங்கு நாம் பெறலாம் இஃது உணர்வீரே”

மனமே எனைநீ வாழ்வித்திடுவாய்
    வீணே உழலுதல் வேண்டா”

மேவி மேவித் துயரில் வீழ்வாய்
  எத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய்
  பாவி நெஞ்சே பார்மிசை நின்னை
  இன்புறச் செய்வேன் எதற்குமினி அஞ்சேல்”

என்று விநாயகர் நான்மணி மாலையியில் பாரதியின் உள்ளத் தினின்றும் வெளி வரும் அத்தனையும் கீதையின் அடியோற்றி அதன் அர்த்தமாய் ஆன்மீக வெளிச்சமாய் அமைந்திருக்கிறது என்பது கருத்திருத்த வேண்டியதே. பாரதியின் விநாயகர் நான்மணி மாலை யினை மனம் முழுக்கப் பதித்தால் கீதையின் பல கருத்துக்கள் ஆன் மீக முத்தாய் முகிழ்த்து வருவதை நாமனைவரும் கண்டு தெளி யலாம்.

அச்ச மில்லை அமுங்குத லில்லை
  நடுங்குத லில்லை நாணுதலில்லை
  பாவமில்லை பதுங்குத லில்லை
  ஏது நேரினும் இடர்பட மாட்டோம்
  அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம்
  கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்
  மூட நெஞ்சே முப்பது கோடி
  முறையுனக் குரைத்தேன் இன்னும் உரைப்பேன்
  தலையில் இடி விழுந்தால் சஞ்சலப்படாதே
  ஏது நிகழினும் நமக்கேன் என்றிரு
  பராசக்தி உளத்தின் படியுலுகம் நிகழும்
  நமக்கேன் பொறுப்பு”

இதுதான் பாரதியின் அகமுரைக்கும் ஆன்மீக நிலையாகும்.இவ்வாறு பாரதி விநாயகர் நான்மணி மாலை பாடிட பகவத்கீதை பாரதிக்கு ஒளிவிளக்காய் அமைந்தது எனலாம். பாரதியின் ஆன்மீகம் இப்ப டியே அவரின் பாடல் வழியில் பயணிக்கிறது.

பாரதியின் ஆன்மீகப் பார்வை என்பது எல்லை கடந்தது. இந்தி யனாய், தமிழனாய், அந்தணகுலத்தவனாய், புரட்சியாளனாய். இருந்தாலும் அவனின் சிந்தனை என்பது பரந்து சிறகடித்தது என்பதை த்தான் – அவனின் படைப்புகள் பறைசாற்றி நிற்கின்றன எனலாம்.

ஆத்திசூடி இளம்பிறை யணிந்து
  மோனத்திருக்கும் முழு வெண் மேனியன்
  கருநிறங் கொண்ட  பாற் கடல்மிசைக் கிடப்போன்
  மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
  ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
  உருவத்தாலே உணர்ந்துணராது
  பல வகையாகப் பரவிடு பரம்பொருள்
  ஒன்றேஅதனியல் ஒளியுறுமதி வாம்;
  அதனிலை கண்டார் அல்லலை அகற்றினர்;
  அதனருள் வாழ்த்தி அமர்வாழ்வு எய்துவோம் “

      ‘ தெய்வம் நீ என்றுணர் 

என்று ஆத்திசூடியில் பாரதி கடவுள் கொள்கையினைக் காட்டும் பாங்கும் அவனின் தெளிந்த ஆன்மீகத்தை வெளிப்படுத்தி நிற்கிறதல்லவா! 

பாரதி கடவுள் நம்பிக்கை மிக்கவனாகவே இருந்தான். அவனின் எந்தச் செயலிலும் எப்படியோ தெய்வம் பற்றிய சிந்தனை வந்தே நிற்கும். இதற்கு அடைப்படையே அவனின் அகத்திருந்த ஆன்மீகமே எனலாம்.

”  காக்கைச் சிறகினிலே நந்த லாலா நின்றன்
  கரியநிறந் தோன்று தையே நந்த லாலா
  பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா
  பச்சை நிறந் தோன்று தையே நந்த லாலா
  கேட்கு மொலியிலெல்லாம் நந்த லாலா
  கீத மிசைக்குதடா நந்தலாலா
  தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா
  தீண்டுமின்பந் தோன்றுதடா நந்த லாலா”

பாரதியின் கடவுள் பற்றிய இந்தச் சிந்தனை ஆன்மீக நிலையின் பெரு நிலை என்றே கொள்ள முடிகிறது. மரமும்பறவையும்தீயும்ஒலியும்வண்ணமும் கடவுளாகவே பாரதியின் பார்வைக்குத் தெரிகிறது. இது பாரதியின் உன்னத ஆன்மீகப் பார்வை என்றே கொள்ள முடிகிறது.

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்”

  “என் குடும்பம் வண்ணமுறக் காக்கின்றான்
    நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரி யனுமாய்
    பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய்
    எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்”

  ” இங்கிவனை யான் பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்
    கண்ணன் என தகத்தே கால்வைத்த நாள்முதலாய்
    எண்ணம் விசாரம் எதுவுவன் பொறுப்பாய்ச்
    செல்வம் இளமாண்பு சீர் சிறப்பு நற்கீர்த்தி
    கல்வி அறிவு கவிதை சிவ யோகம்
    தெளிவே வடிவாம் சிவஞானம் என்றும்
    ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றன காண்
    கண்ணனைநான் ஆட்கொண்டேன் கண்கொடேன் கண்கொண்டேன்”

பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்,
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்
மண் மீதுள்ள மக்கள்பறவைகள்,
விலங்குகள்பூச்சிகள்புற்பூண்டுமரங்கள்
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும்தேவ தேவா!

ஞானாகாசத்து நடுவே நின்று நான்
பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குகதுன்பமும்மிடிமையும்நோவும்
சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிரெல்லாம்
இன்புற்று வாழ்க’ என்பேன்! இதனை நீ
திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி
அங்கனே யாகுக!” என்பாய் ஐயனே! 

வெட்ட வெளியாய் அறிவாய் வேறுபல சத்திகளைக்
கொட்டு முகிலாய் அணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய்
தூல அணுக்களாய் சூக்குமமாய் சூக்குமத்தில்
சாலவுமே நுண்ணியதாய் தன்மையெலாம் தானாகி
தன்மை ஒன்றில்லாததுவாய் தானே ஒருபொருளாய்
தன்மை பலவுடைத்தாய் தான்பலவாய் நிற்பதுவே

சுத்த அறிவே சிவமென்றுரைத்தார் மேலோர்;
சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;
வித்தகனாம் குரு சிவமென்றுரைத்தார் மேலோர்,
வித்தையிலாப் புலையனுமஃதென்னும் வேதம்;

பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று
பேசுவது மெய்யானால் பெண்டிரென்றும்
நித்த நுமதருகினிலே குழந்தை யென்றும்
நிற்பனவுந் தெய்வமன்றோ நிகழ்த்துவீரே?

உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன்றில்லை;
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர் வகைமட்டுமன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;

வெயிலளிக்கும் இரவிமதிவிண்மீன்மேகம்
மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்

ஆன்மீகம் என்றால் என்ன என்பதை பாரதி நன்கே அறிந்து வைத்திருந்திருக்கிறான்.உண்மையான ஆன்மீகம் எது என்பதை அவன் உள்ளத்தில் நன்றாகவே பதித்து வைத்திருந்திருக்கிறான். இப்படி அவன் இருந்த காரணத்தால்த்தான் அவனின் ஒவ்வொரு கவிதைகளும் ஆன்மீக உணர்வினை அடிநாதமாகக் கொண்டு மலர்ந்தன என்பதை மறுத்துவிட முடியாது..

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்று அப்பர் பெருமான் அஞ்சாமல் உரைத்தார் என்றால் அவரின் ஆன்மீகம்தான் காரணம் எனலாம். அனல்வாதம் புனல்வாதம் செய்து அஞ்ஞானி களை சம்பந்தப் பெருமான் வெற்றி கொண்டார் என்றால் அங்கும் ஆன்மீகம்தான் அடிப்படை எனலாம். காரைக்கால் பெருமாட்டியை  “அம்மையே” என்று ஆண்டவனே அழைத்தார் என்றால் ஆன்மீக ம்தான் என்பதை மனமிருத்தல் அவசியமாகும்.

  ” அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”

என்று பாரதி பாடவும்அதன் வழி நடக்கவும் அவருக்கு அருந்து ணையாக அமைந்தது அவரின் அகத்தில் அமர்ந்திருந்த ஆன்மீகமே எனலாம். பாரதியை புரட்சிக்கவி, புதுமைக்கவிபுயலாய் புறப்பட்டு வந்த கவிபாமரக்கவிஎன்றெல்லாம் வியந்து நின்றாலும் பாரதி ஆன்மீகம் என்னும் பாதையில் பயணித்த அருங்கவி என்று சொல்லுவதுதான் பொருத்தமாய் இருக்கிறது அல்லவா!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *