குறளின் கதிர்களாய்…(373)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(373)

உடைசெல்வ மூணொளி கல்வியென் றைந்து
மடையாவாம் ஆயங் கொhளின்.

– திருக்குறள் – 939(சூது)

புதுக் கவிதையில்

உடுத்தும் உடை
உரிய செல்வம்
உண்ண உணவு
உயர்ந்த புகழெனும் பெருமை
உயர்கல்வி இவை ஐந்தும்
சூதாட்டத்தை விரும்பி
மேற்கொள்ளும்
மன்னனிடம்
சென்று சேராதே…!

குறும்பாவில்

உடை செல்வம் உணவு,
புகழ் கல்வி என்னும் ஐந்தும்
சூதாடும் மன்னனைச் சேராதே…!

மரபுக் கவிதையில்

மானம் காக்க உடுத்துமுடை
மண்ணி லீட்டும் பெருஞ்செல்வம்,
பான முடனே உணவதுவும்
பாரில் புகழாம் பெருமையதும்,
வான மெனவே உயர்கல்வி
வரிசை யாக யிவையைந்தும்,
மான மின்றிச் சூதாடும்
மன்ன வர்க்கும் வாராதே…!

லிமரைக்கூ

சூதாம் ஆட்டத்தில் சேராதே,
உடையுணவு செல்வம் புகழ்கல்வி இவையைந்தும்
சூதாடும் மன்னவர்க்கும் வாராதே…!

கிராமிய பாணியில்

ஆடாத ஆடாத
சூதாட்டம் ஆடாத,
ஆளக்கெடுக்கும் சூதாட்டம்
ஆடவே ஆடாத..

உடுத்துற ஒட
சேருற செல்வம்
உண்ணுற ஒணவு
ஒயந்த மரியாத
பெரிய படிப்பு
இந்த அஞ்சும்
சூதாடும் ராசாவுக்கும்
கெடைக்கவே கெடைக்காது..

அதால
ஆடாத ஆடாத
சூதாட்டம் ஆடாத,
ஆளக்கெடுக்கும் சூதாட்டம்
ஆடவே ஆடாத…!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க