குறளின் கதிர்களாய்…(374)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(374)
கெடல்வேண்டிற் கேளாது செய்க அடல்வேண்டி
னாற்று பவர்க ணிழுக்கு.
– திருக்குறள் – 893(பெரியாரைப் பிழையாமை)
புதுக் கவிதையில்…
தானழிய
ஒருவன் எண்ணினால்,
பகை மன்னர்களை
அழிக்கவல்ல
ஆற்றல் மிக்க
பெரியோர்களிடத்து
அறநூற்களை மீறித்
தவறுகளைச்
செய்தாலே போதும்…!
குறும்பாவில்…
ஒருவன் தானழிய எண்ணிடில்,
பகையரசர்களை அழிக்கவல்ல பெரியோர்களுக்கு அறநெறி
தவறி தீங்குசெய்தால் போதுமே…!
மரபுக் கவிதையில்…
பகையா யுள்ள மன்னவரை
பதமா யழித்து ஒழித்திடவே
வகைய தறிந்ந பெரியோராம்
வல்ல வர்கள் துன்புறவே
மிகையாய் அறநூல் நெறிதவறி
மெய்யாய்த் தீங்கு செய்தாலே,
பகைவ ரிலாமல் அவனேதான்
பட்டே அழிவான் பாரினிலே…!
லிமரைக்கூ…
தானே அழிவான் ஆங்கு,
பகையழிக்கும் திறன்மிகுந்த பெரியோர்க்குச் செய்தால்
அறமிலா தொருவன் தீங்கு…!
கிராமிய பாணியில்…
செய்யாத செய்யாத
தீங்கு செய்யாத,
பண்பில ஒசந்த பெரியவங்களுக்குத்
தீங்கு செய்யாத..
தானே ஒருவன்
அழியணுண்ணு நெனச்சா
வேற ஒண்ணும்
செய்ய வேண்டாம்,
பகயாளி ராசாவயெல்லாம்
அழிய வைக்கிற
அறிவும் தெறமயுமுள்ள
பெரியவங்களுக்கு அவன்
மொறயில்லாமத்
தீங்கு செய்தாலே போதும்..
அதால
செய்யாத செய்யாத
தீங்கு செய்யாத,
பண்பில ஒசந்த பெரியவங்களுக்குத்
தீங்கு செய்யாத…!