குறளின் கதிர்களாய்…(377)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(377)
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி
யொல்லும்வா யூன்றும் நிலை.
– திருக்குறள் – 789 (நட்பு)
புதுக் கவிதையில்…
நட்புக்குச் சிறப்புமிகு
நிலையான அரியணை
எதுவெனில்,
மாறுபடாமல் அது
எப்போதும்
முடிந்தவரை ஒருவருக்கொருவர்
உதவி செய்யும்
உயர்ந்த நிலையாகும்…!
குறும்பாவில்…
நட்புக்குச் சிறப்பான இருக்கை,
மாறுபாடு ஏதுமின்றி எப்போதும் ஒருவருக்கொருவர்
முடிந்தவரை உதவிடும் உயர்நிலையே…!
மரபுக் கவிதையில்…
சிறப்புற நட்பது வீற்றிருக்கும்
செம்மையாம் அரியணை எதுவென்றால்,
உறவது மேம்பட மற்றவர்க்கே
உதவிடும் வகையினில் எப்போதும்
அறம்பொருள் தளர்ந்திடா நிலையினிலே
அன்புடன் ஒருவருக் கொருவராக
முறைப்படி தமக்குளே மாறிடாமல்
முடிந்திடும் மட்டிலும் உதவுதலே…!
லிமரைக்கூ…
அரியணையாம் நட்புக்குயர் பதவி
மாறுபாடின்றி எப்போதும் சேர்ந்திருக்கும் உயர்நிலையே,
ஒருவருக்கொருவர் தமக்குள் உதவி…!
கிராமிய பாணியில்…
நட்புவேணும் நட்புவேணும்
ஒசந்த நட்புவேணும்,
ஒருவருக்கொருவர் ஒதவுற
ஒசந்த நட்புவேணும்..
நல்ல நட்புக்கு இருப்பிடமா
ஒசந்த சிம்மாசனம்
வேற எதுவுமில்ல,
மாறுபாடு இல்லாம எப்பவுமே
மொறப்படி தங்களுக்குள்ள
ஒருத்தருக்கொருத்தர்
ஒதவி வாழுறதுதான்..
அதால
நட்புவேணும் நட்புவேணும்
ஒசந்த நட்புவேணும்,
ஒருவருக்கொருவர் ஒதவுற
ஒசந்த நட்புவேணும்…!