பார்கின்சன்

பாஸ்கர்

இப்போது இடுக்கு நினைவுகளைத் தேடவேண்டி உள்ளது
மனமெங்கோ நிலை குத்திக்கொண்டிருக்கிறது
யாரைப் பார்த்தாலும் சிரிக்க மட்டும் தெரிகிறது
அந்த ஆரம்பமே சட்டென முடிவாகப் போகிறது
எப்போதோ மெல்ல எழுந்து நிற்கிறேன்
உடன் முடியாமல் உட்கார்ந்து கொள்கிறேன்
பேசவே முனைப்பில்லை, எவரிடமும்
ஏதோ வாசம் மட்டும் அவ்வப்போது வருகிறது
மூளைக்கு வேலை கொடுக்க முனைவதில்லை
விலகும் வேட்டி பிரக்ஞை மட்டும் போகவில்லை
என்னைத் தாண்டி என் உலகம் எவருக்குமில்லை
கயிறு கட்டிய காலைப் பார்த்துக்கொள்கிறேன்
இன்னொரு காலில் பிணைக்கும் கயிறில்லை
எதற்கும் எதிர்ப்பின்றி இருந்தபடி இருக்கிறேன்
விழிகளில் எட்டிப் பார்க்கும் கண்ணீர் இதமாய் இருக்கிறது
அந்த வெப்பத்தை வைத்துக் கண்களை மூடிக்கொள்கிறேன்
எனக்கு இரவும் பகலும் ஒன்றே.

1 thought on “பார்கின்சன்

 1. என் பயணத்தின் முடிவு

  சி. ஜெயபாரதன், கனடா

  முடக்கு வாத நோய் முதுகை
  மடக்கும் போது,
  நடக்க முடியாது கால்கள்
  பின்னித்
  தடுமாறும் போது,
  படுக்கை மெத்தை முள்ளாய்
  குத்தும் போது,
  படுத்தவன் மீண்டும்
  எழுந்து நிற்க இயலாத போது,
  வாழ நினைத்த போதும்
  வாழ முடியாத போது,
  எழுத முனையும் கவிதை தனைக் கை
  நழுவ விட்ட போது,
  வரைய வந்த வானவில் கண்ணீர்
  மறைத்த போது,
  இறுதி இயலாமை
  உறுதி.
  தனித்துப் போய் தவிக்கும்
  மனத்துக்குத்
  தெரிவது, மீளாத
  ஒரே பாதை !
  பயணத்தின் முடிவு
  விடுதலை !

  ==============

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க